கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை.. 18 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணின் சகோதரனுக்கு தூக்கு தண்டனை!!

Author: Babu Lakshmanan
24 September 2021, 1:17 pm
Cuddalore murders - updatenews360
Quick Share

கடலூர் : கடந்த 2003ம் ஆண்டு நடந்த கண்ணகி – முருகேன் ஆணவக் கொலை வழக்கில் 18 ஆண்டுகளுக்கு கடலூர் நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் முருகேசன் (25). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், அதே பகுதியில் வசித்து வரும் வேறு சமூகத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் கண்ணகி (22) என்பவரை காதலித்து வந்தார். இருவரும் வீட்டாருக்கு தெரியாமல், 2003ம் ஆண்டு ஜுன் 5ம் தேதி பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், அலைப்பாயுதே பட பாணியில் அவரவர் வீட்டிலேயே வசித்தும் வந்துள்ளனர்.

இப்படியிருக்கையில், இருவரும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு, முருகேசன் தனது மனைவி கண்ணகியை அழைத்துக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து விட்டு, வண்ணாங்குடிகாட்டில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

கண்ணகியை காணாததை அறிந்த அவரது பெற்றோர், உறவினர், நண்பர்கள் வீடு என அனைத்துப் பகுதிகளிலும் தேடியுள்ளனர். பின்னர், முருகேசன் – கண்ணகியின் காதல் விவகாரத்தை அறிந்த அவரது பெற்றோருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இருவரின் திருமணம் கண்ணகியின் வீட்டாருக்கு மட்டுமல்லாமல், முருகேசனின் வீட்டைச் சேர்ந்த ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது.

பின்னர், காதல் திரைப்பட பாணியில் இருவரையும் முருகேசனின் சித்தப்பா ஜுலை 8ம் தேதி சந்தித்து பேசி, நைசாக சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், இருவரையும் அருகே இருக்கும் மயானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு கண்ணகி மற்றும் முருகேசனுக்கு மூக்கு மற்றும் காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களை கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முருகேசனின் பெற்றோர், போலீஸில் புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீசார் சம்பவத்தை கொலையாளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளனர். இதையடுத்து, ஊடகங்களில் இந்த விஷயம் வெளிவர, போலீசார் வேறு வழியில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் தம்பதியை கொலை செய்ததாக இரு வீட்டாரின் தரப்பில் இருந்தும் தலா 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆணவக் கொலை என்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் நீதி கிடைக்கும் என்று வலுத்த கோரிக்கையை தொடர்ந்து, 2004ம் ஆண்டு சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. பின்னர், தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில், விருத்தாசலம் காவல்நிலைய ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை குற்றவாளிகளை சேர்த்திருந்தது.

இந்த நிலையில், 18 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை கடலூர் நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், குற்றம்சாட்டப்பட்ட 15 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கண்ணகியின் அண்ணன் மருது பாண்டியனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும் எஞ்சிய 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு முருகேசனின் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

நீதி கிடைக்க தாமதமானாலும் தரமான தீர்ப்பு என்றும், இதுபோன்ற ஆணவக் கொலைகள் இனி நிகழாமல் இருக்க, கடுமையான தண்டனைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Views: - 205

0

0