கொரோனா தடுப்பூசியை போன்று கோமாரி நோய் தடுப்பூசியையும் போட கவனம் செலுத்துங்க : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

Author: Babu Lakshmanan
25 October 2021, 7:48 pm
Stalin Ops - Updatenews360
Quick Share

மழைக்காலத்தில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளதால் தமிழகத்தில் எங்கெல்லாம் இரண்டாவது சுற்று கோமாரி தடுப்பூசி செலுத்தப்படவில்லையோ, அங்கெல்லாம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கிராமப்புற விவசாயிகளின்‌ வாழ்க்கைத்‌ தரத்தினை உயர்த்தும் ‌முதுகெலும்பாகவும்‌, பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பினை அளிக்கக்‌ கூடியதாகவும்‌, கிராமப்புறப்‌ பொருளாதாரத்திற்கு இன்றியமையாததாகவும்‌ விளங்கும்‌ கால்நடைகள்‌ நன்கு பராமரிக்கப்பட வேண்டும்‌ என்பதைக்‌ கருத்தில்‌ கொண்டு, கால்நடை பராமரிப்புத்‌ துறையின்‌ சார்பில்‌, கால்நடை தேசிய தடுப்புத்‌ திட்டத்தின்கீழ்‌ ஆண்டுக்கு இரண்டு முறை கால்நடைகளுக்கு கோமாரி நோய்‌ ‘தடுப்பூசி செலுத்தும்‌ பணி நடைபெறுவது வழக்கம்‌.

அதேபோல்‌, இந்த ஆண்டும்‌ இரண்டாவது சுற்று கோமாரி நோய்‌ தடுப்பூசி செலுத்தும்‌ பணி பல மாவட்டங்களில்‌ துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது என்றாலும்‌, முதல்‌ சுற்று கோமாரி நோய்‌ தடுப்பூசி செலுத்தி எட்டு மாதங்கள் கடந்த நிலையில்‌ காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ இரண்டாம்‌ சுற்று கோமாரி நோய்‌ தடுப்பூசி செலுத்தும்‌ பணிகள்‌ இன்னும்‌ துவங்கப்படவில்லை என்று தகவல்கள்‌ வெளியாகி உள்ளன.

காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ மட்டும்‌ கிட்டத்தட்ட ஐந்து இலட்சம்‌ பசு மற்றும்‌ எருமை மாடுகள்‌ வளர்க்கப்படுவதாகவும்‌, சுமார்‌ மூன்று இலட்சம்‌ ஆடுகள்‌ வளர்க்கப்படுவதாகவும்‌, இந்தக்‌ கால்நடைகளை கோமாரி நோய்‌ அதிகம்‌ தாக்குவதாகவும்‌, ஆடுகளைவிட மாடுகள்‌ தான்‌ அதிகம்‌ பாதிக்கப்படுகின்றன என்றும்‌, இந்த நோய்‌ உமிழ்‌ நீர்‌, சிறு நீர்‌, மலம்‌, பால்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌ பரவக்கூடியது என்றும்‌, இந்த நோயால்‌ பாதிக்கப்பட்ட கால்நடைகள்‌ தீவனம்‌ உண்ணாது என்றும்‌, இதன்‌ காரணமாக பால்‌ உற்பத்தி குறையும்‌ என்றும்‌, இதன்‌ மூலம்‌ பொருளாதார ரீதியான பிரச்சனைகளை விவசாயிகள்‌ சந்திக்க நேரிடும்‌ என்றும்‌, இதனைத்‌ தடுக்கும்‌ வகையில்‌, கோமாரி நோய்‌ தடுப்பூசி முகாம்‌ ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுவதாகவும்‌, முதல்‌ சுற்றுக்கும்‌ இரண்டாவது சுற்றுக்குமிடையே‘ தடுப்பூசி செலுத்துவதில்‌ ஏற்படும்‌ காலதாமதம்‌ கோமாரி நோய்‌ தாக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கும்‌ என்றும்‌ கால்நடை வளர்ப்போர்‌ தெரிவிக்கின்றனர்‌.

இந்த காலதாமதத்திற்கான காரணத்தைக்‌ கேட்டபோது, இந்த தடுப்பூசி ஆறு மாதத்திற்கு ஒருமுறை போடப்பட வேண்டும்‌ என்றும்‌, இந்த முறை கோமாரி நோய்‌ தடுப்பூசி மருந்து வருவதில்‌ காலதாமதம்‌ ஏற்பட்டுள்ளது என்றும்‌, இந்த மாதம்‌ இறுதியில்‌ மருந்து வருமென்று எதிர்பார்ப்பதாகவும்‌, வந்தவுடன்‌ நவம்பர்‌ மாதத்தில்‌ இப்பணிகள்‌ துவக்கப்படும்‌ என்றும்‌ கால்நடை பராமரிப்புத்‌ துறை அதிகாரிகள்‌ தெரிவிப்பதாக தகவல்‌ வந்துள்ளது. இந்த மருந்தை தனியாரிடம்‌ விலை கொடுத்து வாங்கி செலுத்தக்கூடிய நிலையில்‌ ஒரிரு மாடுகளை வைத்துக்‌ கொண்டிருக்கும்‌ விவசாயிகள்‌ இல்லை.

தமிழ்நாட்டில்‌ அக்டோபர்‌ 26-ஆம்‌ தேதி முதல்‌ வடகிழக்கு பருவமழை துவங்கும்‌ என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்‌ தெரிவித்துள்ள நிலையில்‌, மழைக்‌ காலத்தில்‌ கால்நடைகளை கோமாரி நோய்‌ தாக்கும்‌ அபாயம்‌ அதிகம்‌ உள்ளதை கருத்தில்‌ கொண்டு, கோமாரி நோய்‌ தடுப்பூசி அரசு சார்பில்‌ அனைத்து கால்நடைகளுக்கும்‌ விரைந்து செலுத்தப்பட வேண்டும்‌ என்பதே கால்நடை வளர்ப்போரின்‌ எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இதில்‌ உடனடியாக தலையிட்டு, தடுப்பூசி மருந்தினை அனைத்து மாவட்டங்களுக்கும்‌ அனுப்பி, தமிழ்நாட்டில்‌ எங்கெல்லாம்‌ இரண்டாவது சுற்று ்‌ கோமாரி நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்படவில்லையோ அங்கெல்லாம்‌ தடுப்பூசி செலுத்தத்‌ தேவையான உத்தரவினை வழங்கிடுமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 187

0

0