‘அவங்க ஒரு பொருட்டே இல்ல.. பாஜக எங்கள் முதுகில் ஏறிதான் சவாரி செய்தாகனும்’ : கேபி முனுசாமி மீண்டும் சரவெடி…!!

9 January 2021, 4:42 pm
kp munusamy - updatenews360
Quick Share

கூட்டணி விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி பேசியதாவது :- இனி அதிமுகவில் ஸ்லீப்பர் செல்ஸ் என்பதே இல்லை. யார் வெளியே வந்தாலும் அதிமுகவை ஒன்றும் பண்ண முடியாது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – திமுகிவிற்குதான் நேரடி போட்டி. தேசிய கட்சிகள் அதிமுக அல்லது திமுகவின் முதுகில் ஏறிதான் பயணிக்க வேண்டும். தேசிய கட்சிகள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. ஜனநாயக அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது, எனக் கூறினார்.

பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் முதலமைச்சர் வேட்பாளரை நாங்கள் அறிவிப்போம் எனக் கூறி வந்த நிலையில், அதிமுக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என கேபி முனுசாமி வெளிப்படையாகக் கூறி வந்தார். மேலும், தேசிய கட்சிகளை கருங்காலி கூட்டத்தினர் எனவும் அவர் விமர்சித்தார்.

இந்த சூழலில், அதிமுகவின் முதுகில்தான் பாஜக ஏறி பயணிக்க வேண்டியிருக்கும் என அவர் மீண்டும் கூறியிருப்பது, சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடவும் தயாராக இருப்பதை குறிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதோடு, யார் வெளியே வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என அவர் கூறியிருப்பதும், சசிகலா வந்தாலும் அதிமுகவில் அவருக்கு இடமில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Views: - 0

0

0