ஆட்சியை தொடருவதில் சிக்கல்… மம்தா அதிரடி ‘பிளான்’… பாஜக முட்டுக்கட்டை போடுமா?

9 July 2021, 2:08 pm
mamata - amit shah - updatenews360
Quick Share

மாநில முதலமைச்சர்களில் மம்தா பானர்ஜிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பொதுவான ஒற்றுமைகள் நிறையவே உண்டு.

அதில் மிக முக்கியமானது, எந்த நேரமும் மத்திய அரசை குறை கூறிக்கொண்டே இருப்பது. இரண்டாவதாக திசைதிருப்பும் அரசியல் என்று சொல்லலாம்.

இருவருக்குமான தனித்துவம்

இப்படி பல விஷயங்களில் இவர்கள் இருவரையும் மிஞ்சுவதற்கு மாநில அரசியல் கட்சிகளில் எந்தத் தலைவரும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இதுபோல், அரசியலில் சாதுரியமாக காய் நகர்த்துவதாக நினைத்து, எதிலாவது ஏடாகூடமாக சிக்கிக்கொள்ள நேர்ந்தால், ‘மக்களே உங்களுக்காகத்தான் இதை செய்தேன்’ என்று நடிப்பில் மம்தாவும் கெஜ்ரிவாலும் உருகி விடுவார்கள்.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் டெல்லியில் கொரோனா பரவல் தீவிரமடைந்தபோது டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது, மத்திய அரசு இதை கண்டு கொள்ளாததால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என்று கெஜ்ரிவால் அலறினார்.

அதேநேரம் ‘மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ஆக்சிஜனை சரிவர கையாளவில்லை, தேவைக்கு அதிகமாக மத்திய அரசிடம் இருந்து வாங்கி கெஜ்ரிவால் அரசு வீணடித்து விட்டது’ என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்பு, அப்படியே பதுங்கினார். 2 கோடி டெல்லி மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவே இப்படி கூடுதலாக ஆக்சிஜனை கேட்டு பெற்றேன் என்று கெஜ்ரிவால் கண்ணீர் வடித்தார்.

தேவைக்கு அதிகமாக டெல்லி மாநில அரசு ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்றதால் தமிழகம், மராட்டியம் உள்பட 12 மாநிலங்களின் அவசர தேவையை பூர்த்தி செய்யமுடியாமல் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து விட்டார்களே? என்று கேள்வி எழுந்தபோது அவர் ‘கப்சிப்’ ஆகி விட்டார்.

இன்னொருபுறம் மம்தா பானர்ஜியின் அரசியல் வேறு மாதிரியானது.

மம்தாவின் முதல் குரல்

கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் இந்திய தலைமை தேர்தல் கமிஷன் ஒரு ஆலோசனை நடத்தியது. அதாவது கொரோனா பரவல் காரணமாக தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா புதுச்சேரி ஆகிய 5 மாநில தேர்தல்களை சில மாதங்களுக்கு தள்ளி வைத்து பின்னர் நடத்தலாம் என்ற யோசனையை முன் வைத்தது. இதற்கு முதல் ஆளாக தனது எதிர்ப்பை பதிவு செய்தவர், மம்தா பானர்ஜிதான்.

மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார். இதில் மத்திய பாஜக அரசு ஏதோ சூழ்ச்சி செய்கிறது என்ற சந்தேகம் அவருக்கு! இதனால் அந்த யோசனையை தேர்தல் கமிஷன் கைவிட்டது.

இந்த நிலையில்தான் கொரோனா பரவல் காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதியும், தேர்தலின்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவும் கூடுதல் துணை ராணுவப் படை உதவியுடன் 8 கட்டங்களாக மேற்குவங்கத்தில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது.

6-வது கட்ட தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பாக மேற்குவங்கத்தில் கொரோனா பரவல் உச்சம் அடைந்தது. அப்போது 6, 7, 8-வது கட்ட தேர்தல்கள் மூன்றையும் ஒரே நேரத்தில் நடத்தி முடிக்கவேண்டும் என்று மம்தா பிடிவாதம் காட்டினார்.

தவறான எண்ணம்

தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்துவிட்டு, அதை திடீரென மாற்ற முடியாது என்பதால் தேர்தல் கமிஷன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. எனினும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை வாக்குப்பதிவின் போதும், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தின்போதும் நடைமுறைப்படுத்துவதில் முற்றிலும் தோல்வி கண்டுவிட்டது என்று கொல்கத்தா ஐகோர்ட்டின் கடும் கண்டனத்திற்கு தேர்தல் கமிஷன் உள்ளானது. மம்தாவும் தேர்தல் கமிஷனை கடுமையாக சாடினார்.

முதலில் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்று யோசனை சொன்னபோது அதற்கு கடும் எதிர்ப்பு, ஆனால் 3 கட்ட தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தவேண்டும் என்று பிடிவாதம். இதுதான் மம்தாவிடம் முன்னுக்குப்பின் முரணான விஷயம்.

அதாவது மத்திய அரசும், தேர்தல் கமிஷனும், தான் சொல்வதை மட்டுமே கேட்டு நடக்கவேண்டும் என்ற அவருடைய தவறான எண்ணம்தான் இதற்கு காரணம்.

தேர்தல் நடந்து மே 2-ம் தேதி ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது மம்தா, தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர், சுவேந்து அதிகாரியிடம் சுமார்
2000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.

mamata-suvendu- updatenews360

இந்த முடிவை எதிர்த்து மம்தா பானர்ஜி கொல்கத்தா ஐகோர்ட்டில், தேர்தல் வழக்கும் தொடர்ந்தார். சுவேந்து அதிகாரி முறைகேடுகள் செய்து வெற்றி பெற்று விட்டதாகவும், ஓட்டு எண்ணிக்கையிலும் முறைகேடு நடந்ததாகவும் அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே, வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டிருந்த நீதிபதி கௌசிக் சந்தா, பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவர் எனவே அவர் இதை விசாரிக்க கூடாது என்று மம்தா கோரிக்கை விடுத்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி, மம்தாவுக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து விட்டு தன்னை அந்த வழக்கு விசாரணையில் இருந்து விடுவித்துக் கொண்டு விட்டார். மம்தா அவமானப்பட்டதுதான் மிச்சம்.

மாஸ்டர் பிளான்

இதற்கிடையே அவருடைய முதலமைச்சர் பதவிக்கு ஒரு பெரிய நெருக்கடியும் வந்துள்ளது.
மே 5-ம் தேதி மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்ற மம்தா வருகிற நவம்பர் 5-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

மம்தா மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பவானிபூர் தொகுதி எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஆனாலும் பவானிபூர் உள்பட மாநிலத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளிலும் அக்டோபர் மாத இறுதிக்குள் தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஏற்கனவே, கொல்கத்தா ஐகோர்ட்டிடம் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்ற கண்டனத்திற்கு தேர்தல் கமிஷன் உள்ளாகி இருப்பதால், அது இடைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அவசரம் காட்டாது, என்கிறார்கள்.

இதனால், தான் முதலமைச்சராக நீடிப்பதில் சிக்கல் இருப்பதை உணர்ந்த மம்தா, இன்னொரு நூதன பிளானை தீட்டி அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையிலும் உடனடியாக இறங்கினார்.

1969-ம் ஆண்டு கலைக்கப்பட்ட விதான் பரிஷத் என்னும் சட்ட மேலவையை மீண்டும் மாநிலத்தில் அமைக்கும் திட்டம் தான் அது. இதற்கான தீர்மானம் அண்மையில் மேற்குவங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஓட்டெடுப்பில் பங்கேற்ற 265 எம்எல்ஏக்களில் 196 பேரின் ஆதரவு கிடைத்தது. இந்த தீர்மானம் மாநில ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாஜக முட்டுக்கட்டை

இதுபற்றி டெல்லியில் அரசியல் வல்லுநர்கள் கூறும்போது, “மேற்கு வங்க சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு , முதலில் மாநில ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும். அதன்பிறகு அந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும். இது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. பாஜக முட்டுக்கட்டை போடலாம்.
அப்படியே நிறைவேற்றினாலும் இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பாரா என்பதும் சந்தேகம்தான். இந்த விஷயத்தில் மத்திய அரசு அவசரம் காட்டாது. அதனால் சட்டமேலவை அக்டோபர் மாதத்துக்குள் அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை. இடைத்தேர்தல் முன்கூட்டியே நடக்காவிட்டாலும்,
சட்டமேலவை எதிர்பார்த்தபடி அமையாவிட்டாலும் மம்தா தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பதில் சிக்கல் வரும்.

Amit_Shah_Bengal_UpdateNews360

அதன்பிறகு 6 மாதங்கள் வரை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார முடியாத நிலைதான் ஏற்படும். இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படா விட்டாலோ, அல்லது சட்டமேலவை அமையாவிட்டாலோ இந்த இக்கட்டான நிலைக்கு மம்தா தள்ளப்படுவார் என்பது நிச்சயம். அவர் 2 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்றில் வெற்றி பெற்றிருந்தால் கூட இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்காது “என்று குறிப்பிட்டனர்.

மேற்கு வங்க சட்டப் பேரவையில் மேலவை கொண்டு வரப்படும் என்பதை திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தது. என்றபோதிலும் மீண்டும் ஆட்சியைப் பிடித்த சில மாதங்களுக்குள் சட்ட மேலவையை கொண்டுவர அக்கட்சி முயற்சிப்பது மம்தா முதலமைச்சர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் ஒரு தந்திரமாகவே பார்க்கப்படுகிறது.

Views: - 166

0

0