பெட்ரோல் பங்கில் போலீசிடம் தகராறு…சரமாரி தாக்குதல் நடத்திய நபர் கைது: தலைமறைவான 2 பேருக்கு வலைவீச்சு..!!

Author: Rajesh
11 March 2022, 10:18 pm
Quick Share

புதுச்சேரி பெட்ரோல் பங்கில் தமிழக போலீசாரை தாக்கிய நபர்களை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஒருவரை போலீசார் கைது செய்து மற்ற இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி கீழ்புத்துப்பட்டு பகுதியில் ரோந்து பணி சென்று விட்டு புதுச்சேரி மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார்.

அப்போது அங்கு வேறு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தங்களது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்பியதற்கு காவலர் சதீஷ்குமாரே பணம் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு சதீஷ்குமார் உங்கள் மோட்டார் பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப நான் ஏன் பணம் தரவேண்டும் என கூறி பணம் தர மறுத்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் காவலர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றது. இதுகுறித்து சதீஷ்குமார் காலாப்பட்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் காவலர் சதீஷ்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது மரக்காணம் கூனிமேடு எம்ஜிஆர் நகரை சேர்ந்த மூர்த்தி(48), அவரது நண்பர்கள் ராஜதுரை, குருநாத் என்பது தெரியவந்தது. இதையடுத்து மூர்த்தியை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் காலபட்டில் உள்ள ஒரு பாரில் மது அருந்தி விட்டு பெட்ரோல் நிரப்ப வந்த போது காவலர் உடையில் இருந்த சதீஷ் சென்னையில் உள்ள தங்களது போலிஸ் நண்பர் போலவே இருந்ததால் குடி போதையில் அவரிடம் பணம் கேட்டதாகவும், இதில் சதிஷ் சற்று கோவமாக பேசியதில் தாங்கள் ஆத்திரம் அடைந்து அவரை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூர்த்தியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், மேலும் மற்ற இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 1009

0

0