எம்ஜிஆரின் ஆதரவில் வாழ்வை ஓட்டியவர் கருணாநிதி… வரலாற்றை மாற்றி எழுத முயற்சிப்பதா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் கண்டனம்..!!!

Author: Babu Lakshmanan
18 January 2022, 1:33 pm
Quick Share

புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக அரசு 16.1.2022 அன்று வெளியிட்ட, செய்தி வெளியீடு எண்‌ 111-ல்‌, மறைந்த முதலமைச்சர்‌ ‘பாரத்‌ ரத்னா’ புரட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌ அவர்களைப்‌ பற்றி உண்மைக்கு மாறான பல தகவல்களை, அரசின்‌ சார்பாக வெளியிட்டுள்ளதற்கு என்னுடைய கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

தன்‌ கட்சி வரலாறும்‌, தமிழக அரசியல்‌ வரலாறும்‌ தெரியாத ஒருவரை முதலமைச்சராகப்‌ பெற்றிருப்பது தமிழகத்தின்‌ தலையெழுத்து என்றே கருதுகிறேன்‌. தன்னை திமுக-வின்‌ தலைவராகவும்‌, முதலமைச்சராகவும்‌ ஆக்கிய கட்சியின்‌ பொருளாளரான புரட்சித்‌ தலைவரையே, கணக்கு கேட்டார்‌ என்பதற்காக கட்சியை விட்டே நீக்கி, ஏறிய ஏணியை எட்டி உதைத்த, செய்‌ நன்றி கொன்ற முன்னாள்‌ முதலமைச்சர்‌ கருணாநிதியின்‌ வாரிசுகள்‌ பொய்யையும்‌, புனைச்‌சுருட்டையும்‌ மூலதனமாக்கி அரசியல்‌ நடத்துவது விந்தையானதல்ல.

விடியா திமுக அரசின்‌ செய்திக்‌ குறிப்பில்‌, முன்னாள்‌ முதலமைச்சர்‌ கருணாநிதி திரைக்கதை வசனம்‌ எழுதிய மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி வாயிலாக தனக்கென்று தனியிடம்‌ பெற்றவர்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால்‌, உண்மையில்‌ சினிமாவில்‌ நுழையவே முடியாத நிலையில்‌, திரைத்‌ துறையே வேண்டாம்‌ என்று கோவையில்‌ இருந்து தனது சொந்த ஊரான திருக்குவளைக்கு ஒடியவர்‌ முன்னாள்‌ முதலமைச்சர்‌ கருணாநிதி என்பது வரலாறு. இதை அறிந்த புரட்சித்‌ தலைவர்‌, தனது தமையனார்‌ பெரியவர்‌ அமரர்‌ எம்‌.ஜி. சக்ரபாணி அவர்களை விட்டு கருணாநிதி அவர்களுக்கு கடிதம்‌ எழுதி, அவரை மீண்டும்‌ கோவைக்கு வரவழைத்து, பட்சிராஜா ஸ்டுடியோவில்‌ மருதநாட்டு இளவரசி படத்திற்கு வசனம்‌ எழுத வாய்ப்பு வாங்கிக்‌ கொடுத்தவர்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்கள்‌.

மருதநாட்டு இளவாசி, மந்திரிகுமாரி ஆகிய படங்கள்‌ வருவதற்கு முன்னரே, என்தங்கை, மர்மயோகி, சர்வாதிகாரி போன்ற பல வெற்றிப்‌ படங்கள்‌ மூலம்‌ தமிழ்த்‌ திரையுலகில்‌ கோலோச்சியவர்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌ அவர்கள்‌. அனைத்திற்கும்‌ மேலாக, திரு. கருணாநிதி எழுதியதாக சொல்லப்படும்‌ வசனங்களை, எங்களது புரட்சித்‌ தலைவரும்‌, அவரது தம்பி நடிகர்‌ திலகமும்‌, தங்களுடைய படங்களில்‌ உச்சரித்ததால்‌ தான்‌ திரு. கருணாநிதி அவர்களுடைய எழுத்துகளுக்கு மரியாதை கிடைத்தது என்பது வரலாறு.

திரையுலகைச்‌ சேர்ந்த பலருக்கும்‌ தெரிந்த இந்த உண்மைகள்‌, புரட்சித்‌ தலைவரின்‌ பல படங்களுக்கு வசனம்‌ எழுதிய இன்றைய முதலமைச்சரின்‌ உறவினர்‌ திரு. சொர்ணம்‌ அவர்களுக்கும்‌ நன்றாகத்‌ தெரியும்‌. ஆனால்‌, அவர்‌ இன்று நம்மிடம்‌ இல்லை என்பதுதான்‌ இயற்கையின்‌ சதி. இந்த உண்மைகளை மறைத்து வரலாற்றை திருத்தி எழுதிய கோமான்களை என்னவென்று சொல்வது ?

அடுத்து, 1986-87 காலக்கட்டத்தில்‌, தமிழகத்தில்‌ மருத்துவத்‌ துறைக்கென்று தனியாக பல்கலைக்கழகம்‌ ஒன்றை அமைக்க புரட்சித்‌ தலைவைரின்‌ அரசு முடிவெடுத்தது. இதற்கான முன்‌ முயற்சிகளை அன்றைய அமைச்சர்கள்‌ திரு சு. முத்துசாமி (இன்றைய திமுக அமைச்சர்‌) மற்றும்‌ டாக்டர்‌ ஹண்டே ஆகியோர்‌ மேற்கொண்டனர்‌. சுகாதாரத்‌ துறைச்‌ செயலாளராக இருந்த திரு. இன்பசாகரன்‌, அவர்கள்‌ முன்னின்று மத்திய அரசின்‌ ஒப்புதலைப்‌ பெற்றார்‌.

1987, டிசம்பர்‌ 25ல்‌ பல்கலைக்கழக திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலமைச்சர்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்கள்‌ தலைமையில்‌, அன்றைய குடியரசுத்‌ தலைவர்‌ திரு. ஆர்‌. வெங்கட்ராமன்‌ அவர்கள்‌ பல்கலைக்கழகத்தை திறப்பது என்று முடிவானது. மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு “டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌. மருத்துவ பல்கலைக்கழகம்‌” என்று பெயர்‌ வைக்க அமைச்சர்கள்‌ முடிவு செய்து, அன்றைய முதலமைச்சர்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்களிடம்‌ சொன்னார்கள்‌. உயிரோடு இருப்பவர்களின்‌ பெயர்களை வைக்கக்கூடாது என்று புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்கள்‌ அதை மறுத்தார்‌. ஆனால்‌, திரு. முத்துசாமி அவர்களும்‌, மற்ற அமைச்சர்களும்‌, புரட்சித்‌ தலைவரை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார்கள்‌.

புரட்சித்‌ தலைவரின்‌ எண்ணப்படியே, திறப்பு விழாவிற்கு முதல்‌ நாளான டிசம்பர்‌ 24-ஆம்‌ நாள்‌ புரட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌ நம்மை விட்டு விண்ணுலகம்‌ சென்று விட்டார்‌. அதன்பின்‌, 1989-ல்‌ சந்தர்ப்பவசத்தால்‌ ஆட்சிக்கு வந்த திரு. கருணாநிதி வேறு வழியின்றி, தமிழ்‌ நாடு என்று ஒரு வார்த்தையைச்‌ சேர்த்து “தமிழ்‌நாடு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌. மருத்துவ பல்கலைக்கழகம்‌” என்று, அதே குடியரசுத்‌ தலைவரை வைத்து திறப்பு விழா நடத்தினார்‌. தற்போது தன்‌ அருகே வீட்டுவசதித்‌ துறை அமைச்சராக இருக்கும்‌ திரு. சு. முத்துசாமி அவர்களிடமும்‌, மூத்த அரசியல்‌ தலைவர்‌ டாக்டர்‌ ஹண்டே அவர்களிடமும்‌, இது சம்பந்தமான முழு விபரங்களையும்‌ கேட்டுத்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

இனியாவது, இந்த விடியா திமுக அரசு, தமிழக அரசின்‌ சார்பாக வெளியிடப்படும்‌ அறிக்கைகளில்‌, வரலாற்றைத்‌ திரிக்காமல்‌ வெளியிட வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்வதோடு, பாரத்‌ ரத்னா புரட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌. அவர்களைப்‌ பற்றிய வரலாற்றைத்‌ திரித்து, தவறாக அரசு செய்தி அறிக்கை வெளியிட்ட விடியா திமுக அரசிற்கு எனது கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்

Views: - 355

0

0