பள்ளிகள் எப்போது திறப்பு..? தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்துவது எப்படி..? முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

6 July 2021, 12:07 pm
anbil mahesh - updatenews360
Quick Share

தூத்துக்குடி : தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த முக்கிய தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவ குறைந்த காரணத்தினால், கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால், கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியதால், அனைத்தும் மீண்டும் மூடப்பட்டு, ஆன்லைன் வழியே கல்வி கற்கும் முறை மீண்டும் தொடங்கியது.

மேலும், கொரோனா அச்சுறுத்தலால் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதேவேளையில், கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.

இதனிடையே, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கேஎன் நேரு அறிவித்துள்ளார். ஆனால், பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. 3வது அலை பரவும் அபாயம் இருப்பதால், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். பள்ளிகள் திறக்கும் போது, எந்தவித அச்சுறுத்தலும் இன்றி பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்பி வைக்க வேண்டும். பெற்றோர்கள், மருத்துவர்களிடம் கருத்து கேட்ட பிறகே பள்ளிகள் திறக்கப்படும்.

முதலமைச்சர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எடுக்கும் முடிவுகளின் படி நீட் தேர்வு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவின்படி, 40%,35% என இரு தவணைகளின் அடிப்படையில் தனியார் பள்ளிகள் கட்டணங்களை வசூலிக்க வேண்டும். இது குறித்து விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும், என்றார்.

Views: - 163

0

0