மேட்ச் பிக்சிங் மூலம் வெற்றி பெற மோடி முயற்சி… 180 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது : ராகுல் காந்தி சவால்!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2024, 4:22 pm
rahul
Quick Share

மேட்ச் பிக்சிங் மூலம் வெற்றி பெற மோடி முயற்சி… 180 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது : ராகுல் காந்தி சவால்!

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “மேட்ச் பிக்சிங் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நடுவரை அழுத்தத்திற்கு உட்படுத்தி, கிரிக்கெட் வீரரை விலைக்கு வாங்கி, கேப்டனை பயமுறுத்தி, போட்டியில் வெற்றி பெறுவதுதான் மேட்ச் பிக்சிங்.

இந்தத் தேர்தலில் நரேந்திர மோடி நடுவர்களைத் தேர்ந்தெடுத்தார். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார். மோடியின் 400 தொகுதி வெற்றி கோஷம் என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாற்றம் செய்யாமல் சாத்தியமில்லை

பாஜகவின் இந்த மேட்ச் பிக்சிங் நாட்டின் அரசியலமைப்பை அதன் மக்களின் கைகளில் இருந்து பறிப்பதற்காக செய்யப்படுகிறது. அரசியல் சாசனம் இல்லாமல், காவல்துறை, , வற்புறுத்தல்கள் மூலம் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்திய மக்களின் குரலை ஒடுக்கும் சக்தி உலகில் எவருக்கும் இல்லை.

மக்கள் முழு மனதுடன் பாஜகவிற்கு எதிராக வாக்களிக்கவில்லை என்றால், அவர்களின் மேட்ச் பிக்சிங் வெற்றி பெறும். பாஜக வெற்றி பெற்று அரசியல் சட்டத்தை மாற்றினால் நாடு முழுவதும் தீப்பற்றி எரியும். இந்தத் தேர்தல் வாக்குகளுக்கானது அல்ல. இது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதாக நடக்கிறது.

மேட்ச் பிக்சிங், சமூக வலைதளங்கள், ஊடகங்களுக்கு அழுத்தம் தருவது இவையெல்லாம் இல்லையென்றால் பாஜகவால் 180 சீட் கூட வெல்ல முடியாது. இரண்டு முதல்வர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், எங்கள் வங்கி கணக்குகள் சீல் வைக்கப்பட்டன. இதை ஏன் ஆறு மாதங்களுக்குப் பிறகும் தேர்தலுக்கு முன்பும் அவர்கள் செய்யவில்லை” என்று அவர் கேள்வியெழுப்பினார்.

Views: - 113

0

0