தேர்தல் சமயத்தில் தான் கச்சத்தீவு பற்றி பேச்சு.. 10 வருடமா ஆட்சியில் என்ன செய்தீர்கள் ; காங்கிரஸ் கேள்வி!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2024, 6:05 pm
malli
Quick Share

தேர்தல் சமயத்தில் தான் கச்சத்தீவு பற்றி பேச்சு.. 10 வருடமா ஆட்சியில் என்ன செய்தீர்கள் ; காங்கிரஸ் கேள்வி!!!

கச்சத்தீவு பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவலை குறிப்பிட்டு பிரதமர் மோடி தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி தாரை வார்த்து கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன. இந்த விஷயம் ஒவ்வோர் இந்தியனுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரசை நம்ப முடியாது என்று மக்களின் மனங்களில் உள்ள அவநம்பிக்கை மீண்டும் உறுதியாகி உள்ளது, என மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விமர்சனங்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விரிவான விளக்கங்களுடன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

கச்சத்தீவு 1974-ல் நட்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு கச்சத்தீவு வழங்கப்பட்டது. மேலும் இதுபோன்ற நட்புறவு நடவடிக்கையை வங்காளதேசத்துடன் எல்லைப் பகுதிகளை பரிமாறிக்கொள்வதில் மோடி அரசாங்கமும் மேற்கொண்டது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, உங்கள் 10-வது ஆண்டு தவறான ஆட்சியில் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்காக நீங்கள் திடீரென்று விழித்திருக்கிறீர்கள். ஒருவேளை, தேர்தல் காரணமாக இருக்கலாம். இதிலிருந்து உங்கள் விரக்தி தெளிவாக தெரிகிறது.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்த முக்கியமான விஷயத்தை நீங்கள் எழுப்புகிறீர்கள். ஆனால் 2014-ல் உங்கள் அரசாங்கத்தின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும்போது, ‘கச்சத்தீவு 1974-ல் ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு சென்றது. அதை இன்று எப்படி திரும்ப பெற முடியும்? கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என்றால், அதை மீட்பதற்காக போர் தொடுக்க வேண்டும்’ என்றார்.

பிரதமர் அவர்களே.. கச்சத்தீவு பிரச்சினைக்கு தீர்வு காணவும், கச்சத்தீவை மீட்கவும் உங்கள் 10 ஆண்டு கால அரசாங்கம் எதாவது நடவடிக்கை எடுத்ததா? என்பதை சொல்லுங்கள் என கூறினார்.

Views: - 104

0

0