24 மணிநேரத்தில் 2 விசாரணை கைதிகள் மரணம்… தமிழகத்தை உலுக்கும் லாக் அப் உயிரிழப்புகள்… சிக்கலில் தமிழக அரசு…!!

Author: Babu Lakshmanan
13 June 2022, 4:20 pm
Quick Share

சென்னையில் நேற்று விசாரணை கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில், நாகையில் மேலும் ஒரு விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் சிறை மரணங்கள் தடுக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. சென்னை தலைமை செயலக குடியிருப்பு காவல்நிலையத்தில் விக்னேஷ் என்பவரும், திருவண்ணாமலை கலால் காவல்நிலையத்தில் தங்கமணி என்பவரும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறையிலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டை கொலை சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், அடுத்தடுத்து நிகழ்ந்த லக்-அப் மரணங்கள் போலீசாரின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து, லாக் அப் மரணங்களை தடுக்க டிஜிபி சைலேந்திர பாபு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதாவது, விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்களை இரவு நேரங்களில் சிறையில் வைக்கக் கூடாது என்றும், அவர்களை அடிக்கக் கூடாது என பல்வேறு உத்தரவுகளை போட்டார். அதுமட்டுமல்லாமல், காவலர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங் வழங்கும் விதமாக, பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்த அப்பு (எ) ராஜசேகர் என்பவரை விசாரணைக்காக கொடுங்கையூர் போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் 54 நாட்களுக்கு முன்பு விக்னேஷ் என்ற விசாரணை கைதி உயிரிழந்த நிலையில், நேற்று மற்றொரு விசாரணை கைதி உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான பிரச்சனை அடங்குவதற்குள், நாகை மாவட்ட சிறையில் இருந்த கொத்தமங்கலத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து 2 விசாரணை கைதிகள் உயிரிழந்த விவகாரம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகளும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், பதில் சொல்ல வேண்டிய கட்டாயம், காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.

Views: - 539

0

0