நாம் தமிழர் கட்சியில் கடும் மோதல் : ‘கட்சியை உடைத்துப்பார்’ என சீமான் சவால்!!
9 September 2020, 7:38 pmசென்னை: திராவிட இயக்கங்களுக்குப் போட்டியாக தமிழர் தேசியம் பேசி வளர்ந்துவரும் நாம் தமிழர் கட்சியில் கடுமையான மோதல்கள் இருப்பது வெளியாகியுள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ராஜீவ்காந்தி கட்சியைவிட்டு விலகுவதாக அறிவித்துள்ளது கட்சிக்குள் இருக்கும் புகைச்சலை பொதுவெளிக்குக் கொண்டுள்ளது.
கட்சியின் இன்னொரு முக்கிய பொறுப்பாளரும் பேச்சாளருமான பேராசிரியர் கல்யாணசுந்தரமும், அவரது ஆதரவாளர்களும் சீமானை எதிர்த்து வருகின்றனர். வலைதளங்களிலும் ‘வாட்ஸ் அப்’ குழுக்களிலும் இருவரது ஆதரவாளர்களுக்கும், தீவிரமான மோதல் நடந்து வருகிறது. சீமானைப் பற்றியும், நாம் தமிழர் கட்சியின் உட்கட்சி செயல்பாடுகள் குறித்தும் பல குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சீமானைப் பின்பற்றும் நிர்வாகிகள், எதிர்ப்பாளர்கள் துரோகம் செய்வதாக குற்றம்சாட்டுகின்றனர். அவரது எதிர்ப்பாளர்கள் கட்சியை உடைக்க முயல்வதாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். சீமானை எதிர்த்து வரும் கல்யாணசுந்தரம் நாம் தமிழர் கட்சியை சர்வாதிகாரப்போக்கில் நடத்துவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். கட்சியில் எதிர்ப்பாளர்களின் குறைகள் குறித்து சீமானிடம் பேச முடியவில்லை என்றும், அவரை சந்திக்கவும் முடியவில்லை என்று கல்யாணசுந்தரம் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து வியனரசு, அய்யநாதன் போன்றோர் விலகியுள்ளனர். சிறப்பாகப் பேசுபவர்களையும், நன்றாக செயல்படுபவர்களையும் சீமான் விரும்புவதில்லை என்றும், யாரும் வளர்வது அவருக்குப் பிடிக்காது என்று எதிர்ப்பாளர்கள் சீமானைக் குறைகூறி வருகின்றனர்.
கட்சியை உடைக்க முயற்சி நடைபெறுவதாக சீமான் ஆதரவாளர்கள் கூறிவரும் நிலையில், கட்சியை உடைத்துப் பார் என்று சீமான் சவால் விடுத்துள்ளார். கட்சியை யாராலும் உடைக்க முடியாது என்றும், யார் வெளியேறினாலும் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி 2009-ல் ஈழத்தமிழர் படுகொலை நடைபெற்றபோது, தேர்தல் களத்தில் அப்போதைய ஆளுங்கட்சியான திமுகவை எதிர்த்து ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்ற முழக்கத்துடன் களத்துக்கு வந்தது. தொடர்ந்து 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டது. கடந்த 2016 தேர்தலில் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 3.88 சதவீத ஓட்டுகளை வாங்கியது. இது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தைவிட அதிகமாகும்.
0
0