நீட்டை வைத்து திமுக அரசியல் செய்யக்கூடாது.. சொத்து வரி உயர்த்துவது என்பதற்காக இப்படியா…? பிரமலதா விஜயகாந்த்

Author: Babu Lakshmanan
7 April 2022, 2:08 pm
Quick Share

சொத்து வரி உயர்வை கண்டித்து 11ம் தேதி அனைத்து மாநகராட்சிகள் முன்பு தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

விருதுநகரில் இன்று மாலை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக தேமுதிக கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வருகை தந்தார். பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :- டீசல், பெட்ரோல் உயர்ந்தால் எல்லா அத்தியாவசிய பொருட்களும் உயர்கிறது. டோல்கேட் கட்டணம் உயர்ந்துள்ளது. நாம் ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் குறைப்பதற்கான வழியை யாரும் செய்ய மறுக்கிறார்கள்.

மக்களுடைய பிரச்சினையை உணராமல் அரசாங்கம் மக்களுடைய பணத்தை வைத்து எப்படி அரசை நடத்துவது என்று பாராமல், மக்களுடைய கஷ்டத்தை உணரக்கூடிய அரசு தான் வேண்டும். அதனால் நிச்சயமாக ஒரு தீர்வு வரவேண்டும் என்பதே தேமுதிகவின் கோரிக்கை.

நீட் வேண்டாம் என்பது தமிழகத்தில் உள்ள எல்லோருடைய கருத்தாக உள்ளது. இந்தியா முழுவதும் நீட் உள்ளது. ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தும், ஒன்றும் நடக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆளுங்கட்சி மக்களை குழப்பக்கூடாது. மற்ற மாநிலங்களைப் போல் தேர்வு இருக்கிறது என்று சொன்னால் கூட மாணவர்கள் படித்து தயாராகி விடுவார்கள். அதை விடுத்து விட்டு மாணவர்களை குழப்ப வேண்டாம் .

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் பெண்களும் தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் மாணவிகள் கலாச்சார சீரழிவில் ஈடுபட்டு வருகிறார்கள். பெண்கள் பொறுப்புடன் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அதேசமயம் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும்.

முதல்வரின் துபாய் பயணம் பல்வேறு சர்ச்சைகளை கொடுக்கிறது. சிலர் குடும்ப விழா என்கிறார்கள். அவர்களை கேட்டால் நாங்கள் தொழில் முதலீட்டுக்காகத்தான் சென்றோம் என கூறுகிறார்கள். எதுவாக இருந்தாலும் தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் நல்லது நடக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. இதன் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அது நடக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி இருப்பதை கண்டித்து அனைத்து மாநகராட்சிகளிலும் வருகிற 11ஆம் தேதி தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்படும். சொத்து வரி 25 சதவீதம் முதல் 50 சதவீதம் உயர்த்தலாம். ஆனால் ஒரேயடியாக 150 சதவீதம் என்பது ஒட்டுமொத்த மக்கள் தாங்க முடியாத ஒரு சுமைதான். ஏற்கனவே கொரோனாவால் வேலை வாய்ப்பு இல்லாதது, தொழில் நஷ்டம் என பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். எல்லா பக்கமும் விலைவாசி உயர்ந்துகொண்டே செல்கிறது. தற்போது அறிவித்த வரி உயர்வை அமல்படுத்திய பின்புதான் பாதிப்பு வெளிப்படும். பொறுத்திருந்து பார்ப்போம், என தெரிவித்தார்.

Views: - 979

0

0