‘இதோடு போதும்’ புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள் : காங்., நிர்வாகிகளுக்கு சோனியா வேண்டுகோள்..!

24 August 2020, 1:09 pm
sonia_gandhi_rahul_gandhi_updatenews360
Quick Share

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான செயல்முறையை மேற்கொள்ளுமாறு அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்ததாக தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி, அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத தோல்வியை சந்தித்தது. இதனால், அதிருப்தியடைந்த அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, மீண்டும் சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார்.

ஆனால், உடல்நலக்குறைவால் முன்பை போல செயல்பட முடியாத நிலையில் சோனியா காந்தி இருந்து வருவதால், கட்சியை பலப்படுத்த முடியாது என காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சிலர் மேலிடத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இது அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. கொரோனா பிரச்சனை, பொருளாதார நிலைமை, லடாக் விவகாரம், வேலையில்லா திண்டாட்டம், எதிர்வரும் மாநில சட்டசபை தேர்தல்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தொடர வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட சில தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த சோனியா காந்தி, இடைக்கால தலைவராக மேற்கொண்டு தொடர விருப்பம் இல்லை என்றும், புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான செயல்முறைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.