ஓபிஎஸ் உள்பட 63 எம்எல்ஏக்கள் மீது வழக்குப்பதிவு : ஜெயலலிதா பல்கலை.,க்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதால் நடவடிக்கை..!!!

Author: Babu Lakshmanan
31 August 2021, 6:16 pm
admk protest 1 - updatenews360
Quick Share

அண்ணாமலை பல்கலை.,யுடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்பட 63 எம்எல்ஏக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் ஒன்று விழுப்புரத்தில் தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தை தற்போதைய திமுக அரசு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைப்பதாக அறிவித்தது. அதன்படி, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மெரினா – வாலஜா சாலையில் அமர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போலீசார் அவர்களை கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்று, பிறகு விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், எந்தவித முன் அனுமதியும் பெறாமல் சாலையில் அமர்ந்து போரட்டம் நடத்திய ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான 63 எம்எல்ஏக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒன்றாக கூடுதல், அரசின் உத்தரவை மதிக்காமல் இருத்தல், தொற்று நோய் பரவல் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 135

0

0