சசிகலாவுடன் இணைகிறாரா ஓபிஎஸ்…? சென்னையில் நடந்த திடீர் சந்திப்பு… பரபரப்பில் அரசியல் களம்..!!

Author: Babu Lakshmanan
20 June 2022, 5:18 pm
Quick Share

அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றுவது போல தெரிய வரும் நிலையில், சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர். தற்போது, ஒற்றைத் தலைமை தேவை என்ற வலுக்கத் தொடங்கிய நிலையில், 7 நாட்களாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியே தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தற்போது, எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமைக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அதிமுகவில் மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 62 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ்-க்கு வெறும் 11 மாவட்ட செயலாளர்களே ஆதரவளித்துள்ளனர்.

எனவே, ஜுன் 23ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது. அதுவும் ஒற்றைத் தலைமைக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவது உறுதி என்று முன்னாள் அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் உறுதிபட தெரிவித்து வருகின்றனர்.

EPS - Updatenews360

அதுமட்டுமில்லாமல், திருப்பூர், ஈரோடு மாவட்ட அதிமுகவினர், எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்று தீர்மானங்களையும் நிறைவேற்றி விட்டனர்.

அதேவேளையில், பொதுக்குழுவை தள்ளி வைக்க ஓபிஎஸ் தரப்பினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், பொதுக்குழு நடந்தே ஆகும்.. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று இபிஎஸ் தரப்பினரும் உறுதியாக கூறி வருகின்றனர்.

ஒருவேளை, அதிமுகவுக்கு இபிஎஸ் தலைமை ஏற்று விட்டால், ஒருங்கிணைப்பாளர் பதவி எல்லாம் ரத்து செய்யப்பட்டு விடும். ஓபிஎஸ், இபிஎஸ்ஸின் கீழ் செயல்பட வேண்டிய நிலை ஏற்படும். இதனை ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் விரும்பவில்லை என்றே தெரிகிறது. எனவே, பொதுக்குழுவை எப்படியாவது நடத்தவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

sasikala- ops - updatenews360

இந்த நிலையில், சசிகலா ஆதரவாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சென்னையில் சந்தித்து பேசியுள்ளார். சசிகலாவின் பாதையில் பயணிக்க தயாராக இருப்பதாகன ஓபிஎஸ் தெரிவித்துள்ளதாக சசிகலா ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் எல்லாம் வெளிப்படையாக கூறி வந்தார். இதன்மூலம், எடப்பாடி பழனிசாமி தலைமையேற்றாலும், சசிகலாவுக்கு வாய்ப்பு இல்லை என்று உறுதியான ஒன்றுதான்.

சசிகலா குறித்து வாய் திறக்காமல், அவருக்கு சாதகமாக இருப்பது போன்ற செயல்களையே ஓபிஎஸ் செய்து வந்ததாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இதனால், சசிகலாவுடன் ஓபிஎஸ் இணைவது ஆச்சர்யபடக் கூடிய விஷயமாக இல்லாவிட்டாலும், அதிமுகவுக்கு புதுவிதமான நெருக்கடியை உண்டாக்குவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Views: - 609

0

0