முன்கூட்டியே முடிவுக்கு வந்த மக்களவை… அவையின் மாண்பை கெடுத்த எதிர்கட்சிகள் : வெங்கய்யா நாயுடு கண்ணீர்..!!

Author: Babu Lakshmanan
11 August 2021, 2:08 pm
parliment - updatenews360
Quick Share

டெல்லி : பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி எதிர்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 19ம் தேதி கூடியது. இக்கூட்டத் தொடர் தொடங்கியது முதலே பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் சபை முடங்கி வருகிறது.

இதுவரை நடந்த கூட்டத் தொடரில், ஒருநாள் கூட சரியாக இயங்காத நிலையில், உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின.

இந்த நிலையில், நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடிய போது, பெகாசஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை பகல் 12 மணி வரையும், மக்களவை தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில், எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் முன்னதாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, மாநிலங்களவையில் எம்பிக்களின் செயல்பாடுகள் எல்லை மீறிவிட்டதாக அவை தலைவர் வெங்கய்யா நாயுடு கண்ணீருடன் உருக்கமாக கூறியுள்ளார். மேலும், அவையின் மாண்பை எம்பிக்கள் தவறவிட்டதாகவும், எம்பிக்கள் சிலர் மேஜை மீது ஏறி அமளியில் ஈடுபட்டது வேதனையளிப்பதாகவும் அவர் கூறினார்.

Views: - 271

0

0