இது எதிர்கட்சி குரல் அல்ல… மக்கள் குரல் ; இன்னும் பட்டியலையே அறிவிக்கல ; தமிழக அரசு மீது ஆர்பி உதயகுமார் பாய்ச்சல்!!

Author: Babu Lakshmanan
20 October 2023, 2:10 pm
Quick Share

மதுரை ; தென்மேற்கு பருவமழையின் போது குடிமராமத்து திட்டம் செய்யாததால் தமிழகத்தில் 3,422 கண்மாய்கள் வறண்டுள்ளதாகவும், தற்போது வடகிழக்கு பருவமழையில்  கண்மாய்களில்  நீர் நிரம்ப குடிமராமத்து  திட்டம் செய்ய அரசு முன்வருமா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :- பருவமழையில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அரசின் முதன்மை கடமையாகும். அதில் எடப்பாடியார் தென்மேற்கு பருவமழை என்றாலும், வடகிழக்கு பருவமழை என்றாலும் தனி அக்கறை செலுத்துவார். தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது வடகிழக்கு பருவமழை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்கும் என்கிற வாய்ப்பு இருக்கிறது.

தென்மேற்கு பருவங்களிலே நமக்கு போதிய மழை பொழிவு கிடைத்திருக்கிறதா? அதை சேமித்து வைத்து இருக்கிறோமா என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கின்றது. ஆனால் இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசிலே உண்மை நிலை என்னவென்று சொன்னால், கண்மாய் மற்றும் வரத்துகால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் மற்றும் தனியார் ஆக்கிரமிப்புகளால் கண்மாயில் போதிய நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. 

தமிழக முழுவதும் 14,314 கண்மாய்கள் உள்ள நிலையில், 469 கண்மாய்களில் மட்டுமே முழுமையாக நீர் நிரம்பி உள்ளது. குறிப்பாக, 3,422 கண்மாய்களில் அதாவது 24 சதவீதம் கண்மாய்கள் முற்றிலுமாக வறண்டு உள்ளது. 

தென்மேற்கு பருவமழை குறைவு என்று காரணம் சொல்லப்பட்டாலும் கண்மாய்களில் தூர்வராதே பிரதான காரணம் என்றும், இந்த வடகிழக்கு பருவமழையில் காலத்தில் காண்மாய் நிரம்புவதற்கு குடிமராமத்து திட்டம் செய்தால் கண்மாய்கள் நிரம்ப வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

ஏனென்றால் இந்த வடகிழக்கு பருவமழையில் நமக்கு 45 முதல் 65 சகவீதம் வரை குடிநீருக்கும், விவசாயத்துக்கும் கிடைக்கும். இதே எடப்பாடியார் ஆட்சியில் 1,132 கோடியில் குடிமராமத்து செய்து அதன் மூலம் நிலத்தடி நீர் உயர்ந்தது.

வடகிழக்கு பருவமழையில் சென்னை மிகவும் அதிகமாக பாதிக்கப்படும். ஏனென்றால் இரண்டு மீட்டர் உயரம் தான் புவியியல் அடிப்படையில் கடல் மட்டத்திலிருந்து இருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரு லட்சம் தெருக்கள் உள்ளது. எடப்பாடியார் ஆட்சியில் உலக வங்கி மற்றும் தமிழ்நாடு அரசு நிதியுடன் 2,850 கோடி மதிப்பில் சென்னையில் மழை நீர்வடிகால் பணிகள் செயல்படுத்தப்பட்டன. ஏறத்தாழ 3,600 மழைநீர் தேங்கும் இடங்கள் சென்னையில் இருந்தது எடப்பாடியார் எடுத்த நடவடிக்கையால் 40 இடங்களாக குறைக்கப்பட்டது.

தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை எதுவும் முழுமை பெறவில்லை. மழை நீர் வடிகால் பணிகள் 50 சதவீதம் தான் முடிந்து இருக்கிறது. 100 சதவீதம் முடியவில்லை. கடந்த காலத்தில் வர்தா புயல், ஒக்கி புயல், கஜா புயல், நிவர் புயல் ஆகியவற்றில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாக வைத்து 4,133 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டன.

மிகவும் பாதிப்புக்குள்ளான பகுதிகள் 321, அதிக பாதிப்பு உள்ளாகும் பகுதிகள் 797,மிதமாக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 1,096, குறைவாக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் 1,919 என  இந்த இடங்களில் எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை மற்றும் வெள்ளம் பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 4,713 மையங்கள் பருவமழைகாலத்தில் குறிப்பாக  வடகிழக்கு பருவமழையில் தயார் நிலையில் வைத்து இருப்பார்.

தொடர் மழை பெய்கிறது என்று சொன்னால் இந்த முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு வேண்டிய உணவு, தண்ணீ,ர் கழிப்படை வசதி கொடுத்திட முகாம்களை நிர்வாகிக்க 662 பல் துறை மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டன. அதேபோல் பேரிடர் காலங்களில் 43,409 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் இருப்பார்கள் இவர்களில் 14,232 மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக மாவட்ட ஆட்சிதலைவரோடு வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒன்றிணைத்துஇருக்கும். மேலும் கால்நடையை பாதுகாக்க 8,771 முதல் நிலை மீட்பாளர்கள் அமைக்கப்பட்டன.
அதேபோல் மரத்தை அகற்ற 9,909 பேர்கள் இருந்தனர். அதேபோல் பாம்பு பிடிக்கும் வீரர்கள், நீச்சல் வீரர்கள் ஆகியோர் தயார் நிலையில் இருந்தனர். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான சிறு,குறு பாலங்கள் அடைப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்தார்.

புயல் காலங்களில் எல்லாம் ஒரு மீனவர் கூடஉயிரிழப்பு இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து எடப்பாடியார் சாதித்துக் காட்டினார். அதன் மூலம் தமிழகத்திற்கு பல்வேறு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. இன்னும் இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும் கூடிய சூழ்நிலை இன்னும் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் முடியவில்லை.  தூர்வாரப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை தமிழகம் முழுவதும் தாழ்வான பகுதிகளை எத்தனை என்பதையும், அதேபோல கண்காணிப்பு அலுவலர்கள் பட்டியலை முதலமைச்சர் முழுமையாக அறிவிக்கவில்லை. கடந்த தென்மேற்கு பருவமழையில் கண்மாய்கள் வறண்டு போனது. அதேபோல் இந்த வடகிழக்கு பருவமழையில் குடிமராமத்து செய்யதால் பருவமழையில் நீரை தேக்கமுடியாத நிலையில் உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அதேபோல பயிர் காப்பீடு பெற்று தரவில்லை. எடப்பாடியார்  காலத்திலே 9,600 கோடி பயிர் காப்பீடு கொடுத்தார். குறுவை சாகுபடிக்கு கூட காப்பீடு செய்யவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் எதை சொன்னாலும் கண்டுகொள்ளவில்லை. ஆகவே முதலமைச்சர் எதிர்க்கட்சி குரலாக நினைக்காமல், மக்கள் குரலாக நினைத்து இந்த வடகிழக்கு பருவ மழையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Views: - 217

0

0