சபாநாயகருக்கு எதிர்ப்பு… சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 January 2023, 10:21 am
Admk Shirt - Updatenews360
Quick Share

நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. முதல்நாளில் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறின.

இதனைத்தொடர்ந்து 2-வது நாளாக தமிழக சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது சபாநாயகர் அப்பாவு, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான இரங்கல் குறிப்பை படித்தார்.

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னசாமி, தில்லை காந்தி என்ற ஆதிமூலம், துரை கோவிந்தராசன், ந.சோமசுந்தரம் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பை வாசித்துவிட்டு, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் 2 நிமிடங்கள் மவுனமாக எழுந்து நின்று அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து அவையில் இருந்த அனைவரும் மவுனமாக எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் பிரபலமானவர்களின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தார்.

தமிழறிஞர் நெடுஞ்செழியன், திரைப்பட வசன கர்த்தா ஆரூர்தாஸ், தமிழறிஞர் அவ்வை நடராசன், ஓவியர் மற்றும் எழுத்தாளர் மனோகர் தேவதாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் மஸ்தான், பிரபல கால்பந்தாட்ட வீரர் பீலே ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானத்தை வாசித்த சபாநாயகர், மவுனமாக எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செலுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து அவையில் இருந்த அனைவரும் மவுனமாக எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தார்.

பின்னர் திருமகன் ஈவெராவின் மறைவுக்கும் அவையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து அவை நடவடிக்கைகளை 11-ந் தேதிக்கு ஒத்தி வைத்து சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்தநிலையில், அதன்படி இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை வந்தனர்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வழக்கமான வெள்ளைச் சட்டை அணிந்தே வருகை வந்தனர்.

இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழிய பெற்று எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடங்கியது. நாளை 12-ந்தேதி, எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடரும். 13-ந்தேதி, எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு முதலமைச்சர் பதில் அளித்து பேசுவார்.

பின்னர் அவசர சட்டம் தொடர்பான சட்ட மசோதா உள்ளிட்ட சில சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அவை தினமும் காலை 10 மணிக்கு கூடும். கேள்வி நேரம் உண்டு.

கவர்னர் உரைக்கு வருத்தமும் நன்றியும் பதிவு செய்யக்கோரி அறிவிப்பு வரப்பெற்றுள்ளதாக எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபை செயலாளர் சீனிவாசம் கடிதம் எழுதி உள்ளார். சில பகுதிகளை இணைத்தும், விடுத்தும் உரையாற்றியதற்கு பேரவை வருத்தத்தை பதிவு செய்வதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 325

0

0