600வது நாளாக ஏகனாபுரம் மக்கள் போராட்டம்… வயல் காட்டில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து அழுத கிராம மக்கள் ..!!!

Author: Babu Lakshmanan
16 March 2024, 6:16 pm
Quick Share

ஏகனாபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 600 நாளான இன்று வயல் காட்டில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து அழுது போராட்டம் செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம், பொடாவூர் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,800 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் அறிவிப்புகள் வெளியிட்டு அதற்கான பணிகளை துவக்கி உள்ளது.

இந்நிலையில், இதற்கான நில எடுப்புப் பணி முதல் கட்டமாக பொடவூர் கிராமத்தில் சுமார் 122 நபர்களுடைய நிலத்தினை கையகப்படுத்தும் நோக்கில், அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதுகுறித்து ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் 30 நாள்களுக்குள் இதற்கான மாவட்ட வருவாய் அலுவலர் நில எடுப்பு அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறவழிப் போராட்டத்தின் 600வது நாளான இன்று விவசாயத்தை கைவிட மாட்டோம் என ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நாகாத்தம்மன் கோவிலில் இருந்து பேரணியாக வயல்வெளிக்கு சென்றனர்.

வயல்வெளிக்கு சென்ற பகுதி மக்கள் வயல்வெளியில் அறுவடைக்கும் முன்னதாக பூத்துக் குலுங்கியிருந்த நெல்மணிகளை கட்டிப்பிடித்தவாறு, இரண்டாவது பசுமை விமான நிலையத்துக்கு எதிராக கோஷமிட்டவாறு முக்காடு போட்டு அழுதனர். ஏகனபுரம் பகுதியில் மட்டுமே சுமார் 300 ஏக்கர் நவரை பருவம் நெல் பயிரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினந்தோறும் இரவு நேர அறவழிப் போராட்டம் நடத்தி வந்த ஏகனாபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்களின் கோரிக்கைகளை செவிசாய்க்காத திமுக அரசை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் 600வது நாளான இன்று வயல்வெளிக்கு சென்று நெல்மணி கதிர்களை கட்டிப்பிடித்தவாறு முக்காடு போட்டு ஆண் பெண் சிறுவர் சிறுமியர் என அனைவரும் சேர்ந்து ஒப்பாரி வைத்து அழுத்தது காண்போர் கண்களை குளமாக்கியது.

விமான நிலைய பாராட்டு குழுவின் வரை கட்டுப்படுத்த சுமார் 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Views: - 79

0

0