திடீரென திமுக போட்ட கண்டீசன்… அப்செட்டில் திருமாவளவன்… அதிமுக கூட்டணிக்கு தாவும் விசிக…?

Author: Babu Lakshmanan
12 October 2023, 9:01 pm
Quick Share

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு 2019 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்ட தொகுதிகள் மீண்டும் கிடைக்குமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தையை இன்னும் திமுக தலைமை தொடங்காத நிலையிலேயே இந்த தகவல் வெளியே கசிந்து இருப்பதால் காங்கிரசும், விசிகவும் ரொம்பவே அதிர்ந்து போய் உள்ளன.

ஏனென்றால் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், ஆரணி ஆகிய 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு எட்டு இடங்களில் வெற்றி பெற்றது.

அதேபோல விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் களம் இறங்கிய விசிக இந்த இரண்டிலுமே வெற்றி கண்டது. சிதம்பரத்தில் பானை சின்னத்தில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் கடுமையான இழுபறி நிலைக்கு சென்று, கடைசி சுற்றில் 3219 ஓட்டுகளில் மட்டுமே அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை வீழ்த்தினார். அதேநேரம் விசிகவின் பொது செயலாளர் ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் திமுக சின்னத்தில் நின்று ஒரு லட்சத்து 28 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில்தான் திருச்சி, கரூர், மதுரை, தேனி, சிவகங்கை, சிதம்பரம் ஆகிய தொகுதிகளை இம்முறை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப் போவதில்லை என்றும் அதற்கு பதிலாக வேறு தொகுதிகளை வழங்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இவற்றில் மதுரை, சிதம்பரம் தவிர மற்ற நான்கும் காங்கிரஸ் போட்டியிட்டவை.

ஏற்கனவே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 5 எம்பி சீட்டுகளை மட்டுமே ஒதுக்குவதற்கு திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் அதை உறுதி செய்வது போல 2019ல் காங்கிரஸ் போட்டியிட்ட நான்கு தொகுதிகளை திமுக தன்வசம் கையில் எடுத்துக்கொண்டு தனது வேட்பாளர்களை களத்தில் இறக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படும் தகவலை இதனுடன் ஒப்பிட்டு பார்த்து தமிழக காங்கிரஸ் கதி கலங்கி போயிருக்கிறது.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், ஜோதிமணி எம்பிக்கும் மோதல் போக்கு இருப்பதால் அந்தத் தொகுதியை திமுக எடுத்துக் கொள்வது பற்றி தமிழக காங்கிரஸ் தலைமை அவ்வளவாக கவலை கொள்ளவில்லை. ஆனால் திருநாவுக்கரசர், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதிகளை திமுக எடுத்துக் கொள்வதுதான் கே எஸ் அழகிரிக்கு, இக்கட்டான நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் ராகுல் எதிர்பார்ப்பது போல திமுக 15 தொகுதிகளை ஒதுக்காவிட்டாலும் கூட 2019 தேர்தலில் போட்டியிட்ட ஒன்பது சீட்டுகள் கிடைத்தாலே போதும் என்கிற பரிதாப மன நிலைக்கு தமிழக காங்கிரஸ் தள்ளப்பட்டு விட்டது. அதேநேரம் திருமாவளவனுக்கு இரண்டு விதமான நெருக்கடிகள் உருவாகியுள்ளன.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகள் உண்டு. இவற்றில் 3 சட்டப் பேரவை தொகுதிகளில் மட்டுமே தற்போது திருமாவளவனுக்கு சாதகமான நிலை இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் கடந்த முறை போல மீண்டும் இழுபறி நிலையில் வெற்றி பெறுவதை திருமாவளவன் விரும்பமாட்டார் என்பது நிச்சயம்.

அதேநேரம் சிறுபான்மையினர் வாக்குகள் சிறிய அளவில் அதிமுகவிற்கு திரும்பும் வாய்ப்பு உள்ளதால் தொகுதியில் வெற்றி என்பதே மிகப் பெரிய கேள்விக்குறியாகிவிடும் என்பதை அவர் நன்கு உணர்ந்தும் உள்ளார்.

இதனால்தான் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிகளில் விசிக போட்டியிட விரும்பும் கோரிக்கையை திருமாவளவன் திமுக தலைமையிடம் வைத்துள்ளார், என்கிறார்கள்.

இது குறித்து விசிக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருமா உறுதியாக வென்றாக வேண்டும், வெற்றி வாய்ப்புள்ள வேறு தொகுதிகள் என்னென்ன என்பது பற்றிய ஆய்வுகளையும் கட்சிக்குள் நடத்தி வருகிறோம். சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது திருமாவின் விருப்பமாக இருந்தாலும், எந்த தொகுதி என்பது இன்னும் முடிவாகவில்லை.

எனினும் மீண்டும் அதே தொகுதிகளை விசிகவுக்கு திமுக தருகிறதா அல்லது அவர்கள் வேறு ஏதேனும் கணக்கு போடுகிறார்களா? என்பதையும் பார்க்கவேண்டும். எனவேதான் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளுடன் சேர்த்து காஞ்சிபுரம், திருவள்ளூர் தொகுதிகளில் அமைப்பு ரீதியாக கட்சியை வலிமைப்படுத்துவது, பூத் கமிட்டி நிர்வாகிகளை அமைத்து தேர்தல் வேலைகளை வேகப்படுத்தி இருக்கிறோம். அதேபோல் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் மூன்று தொகுதிகளிலாவது நிற்கவேண்டும் அதுவும் தனிச்சின்னத்தில் போட்டியிடவே வேண்டும் என்பதுதான் திருமாவின் விருப்பம்.

விசிக தமிழகத்தில் அமைப்பு ரீதியாக வலிமையடைந்து, பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றுவரும் நிலையில் ஏற்கனவே கைவசமுள்ள தொகுதிகளைவிட கூடுதலான தொகுதிகளை நாங்கள் கேட்பது இயல்பான ஒன்றுதானே?

திமுக கூட்டணி இப்போதே வலுவாகத்தான் உள்ளது. பிறகு ஏன் பாமகவை சேர்க்க விரும்புகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. பாஜக- பாமக இருக்கும் அணியில் விசிக ஒருபோதும் இருக்காது என்று ஏற்கனவே எங்கள் தலைவர் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். ஆனாலும் திரை மறைவில் அவர்களுடன் பேசுவதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது” என்று ஆதங்கப்பட்டனர்.

“திருமாவளவன் எந்த தொகுதியில் போட்டியிடவேண்டும் என்பதை திமுகதான் முடிவு செய்யும். என்ற போதிலும் கூட்டணிக்குள் பாமக உள்ளே வந்தால், அதிமுக கூட்டணியில் விசிக இணைவதற்கான வாய்ப்புகளே அதிகம்” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“பொதுவாகவே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரே தொகுதியை மீண்டும் மீண்டும் வழங்குவதை திமுக மட்டுமல்ல கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் எந்த கட்சியும் விரும்புவதில்லை. திரும்பத் திரும்ப மற்றவர்களுக்கு விட்டு தருவதால் அந்த தொகுதியில் தங்கள் கட்சியின் செல்வாக்கு என்னாவது என்ற கேள்வியை நிச்சயமாக சீனியர்கள் எழுப்புவார்கள். அந்த வகையில் பார்த்தால் 2024 தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை மாற்றித்தரும் திட்டத்துடன்தான் திமுக இருக்கிறது. அப்படி பார்க்கும்போது சிதம்பரம் தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க வாய்ப்பே இல்லை. பதிலாக திருவள்ளூர் தொகுதியை ஒதுக்கலாம். அங்கே திருமாவளவன் போட்டியிடவும் செய்யலாம். அதேநேரம் தனிச்சின்னத்தில் விசிக போட்டியிடுவதை திமுக தலைமை விரும்பவில்லை.

மேலும் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கின்றன. இப்போதே தொகுதி மாறுவது சொந்த சின்னத்தில் நிற்க விரும்புவது குறித்தெல்லாம் வெளிப்படையாக பேசுவது தேர்தல் வெற்றியை பாதிக்கவும் செய்யலாம்.

ஆனால் தொகுதிகள் மாற்றப்படுவது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ, மார்க்சிஸ்ட்டோ கொஞ்சமும் கண்டு கொண்டது போலவே தெரியவில்லை. அந்தக் கட்சிகள் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஒதுக்கிய இடங்கள் கிடைத்தாலே அதை மிகப்பெரிய புண்ணியமாக கருதும் நிலையில் இருப்பது தெரிகிறது.
ஏனென்றால் எதிர்பார்க்கும் எம்பி தொகுதிகளை திமுக ஒதுக்காவிட்டாலும் கூட அந்த இரு கட்சிகளின் தேவையை வேறு ஏதாவது ஒரு விதத்தில் மறைமுகமாக அறிவாலயம் பூர்த்தி செய்துவிடும்.

அதேநேரம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பு மாநிலத்தில் 11 சதவீதம் உள்ள சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை ஈர்க்கும் விதமாக
அதிமுக தீவிரமாக இப்போதே பிரச்சாரத்தில் இறங்கியும் விட்டது.

இதில் பாதி சதவீத அளவிற்கு ஓட்டு கிடைத்தால் கூட போதும். குறைந்தபட்சம் 12 தொகுதிகளில் வெற்றி பெற்று விட முடியும் என்று அதிமுக கணக்கு போடுகிறது.

அதற்கான சூழல் தற்போது உருவாகி வருவதையும் காண முடிகிறது. அந்தக் கோபத்தில்தான் இஸ்லாமிய மக்கள் மீது இப்போது உங்களுக்கு ஏன் திடீர் அக்கறை? என்ற கேள்வியை முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுகவிடம் எழுப்புகிறார், என்பதுதான் எதார்த்தமான உண்மை.

மாறி வரும் இந்த நிலைமையும் விசிக தலைவர் திருமாவளவனை நிறைவே சிந்திக்க வைத்துள்ளது. அதனால் திமுக கூட்டணிக்குள் பாமக வந்தாலோ அல்லது தாங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிடும் வகையில் மூன்று தொகுதிகளை ஒதுக்காவிட்டாலோ விசிக வெளியேறி அதிமுக அணி இணைவதற்கான
வாய்ப்புகளே அதிகம்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகளிடையே கடும் போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது, நிஜம்!

Views: - 265

0

0