பாஜகவில் சேர்ந்தபின்னும் பெரியாரைப் புகழும் குஷ்பு : காவிக்கட்சியில் அதிகரிக்கும் கறுப்பு சட்டைகள்! பழைய தலைவர்கள் குமுறல்!

19 October 2020, 7:48 pm
kushboo - murugan - updatenews360
Quick Share

சென்னை : பாஜகவில் சேர்ந்த பின்னும் தொடர்ந்து பெரியார் பாதையில் பயணம் செய்வேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளது கட்சியின் தமிழகத் தலைவர்கள் பலருக்குக் கடுப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை கடைபிடித்த பெரியார் எதிர்ப்பை முற்றிலும் கைவிடுவதாக பாஜக மத்திய தலைமை முடிவு செய்துவிட்டதா என்ற குமுறல்கள் கட்சியில் ஒலிக்கின்றன. கட்சித் தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் அண்ணாமலை என்று பாஜகவில் பெரியார் ஆதரவாளர்கள் அதிகமாகி வருகிறார்கள்.

குஷ்பு திமுகவில் சேருவதற்கு முன்பே திராவிடர் கழக நிறுவனர் பெரியாரைப் பலவிதமாகப் பாராட்டி பேட்டி அளித்து வந்தார். தொடர்ந்து அவர் திமுகவில் இணைந்தபோதும் அதே நிலைப்பாட்டில் இருந்தார். திராவிடர் கழகம் எடுத்த ‘பெரியார்’ திரைப்படத்தில் அவர் பெரியாரின் மனைவி மணியம்மையாகவும் நடித்தார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பின்னும் பெரியாரைப் புகழ்ந்தும் பாஜகவை கடுமையாக எதிர்த்தும் பேசிவந்தார்.

இந்நிலையில், குஷ்பு திடீரென்று பாஜகவில் சேர்ந்தார். இப்போதும் அவர் அளித்துள்ள பேட்டியில், தான் ஒரு பெரியாரிஸ்டாக இருப்பதாகவும், பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், பெரியார் இருந்ததால் அவருடைய கொள்கைகளை நான் தொடர்ந்து ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியிருப்பது பாஜகவில் மூத்த தலைவர்களிடம் கடும் புகைச்சலை உருவாக்கியுள்ளது. குஷ்பு ஒரு இஸ்லாமியர் என்பதால் அவர் பாஜகவுக்கு எந்தவிதத்திலும் பொருந்தமாட்டார் என்று அவர்கள் கருதுகிறார்கள். மேலும், தலைமை இதுவரையிலும் கடைப்பிடித்த பாதையில் இருந்து மென்மையான போக்கில் சென்றால், பாஜகவுக்கு இதுவரை விசுவாசமாக இருந்த வாக்காளர்கள் அதிருப்தி அடைவார்கள் என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள்.

பாஜகவின் மாநில தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்ட பின்பு, கட்சியில் பெரியாரை எதிர்த்துப் பேசுவதா அல்லது ஆதரித்து அவரையும் உள்வாங்கிக்கொள்வதா என்று இரு பிரிவுகள் உருவாகியுள்ளது. எல்.முருகன், துணைத்தலைவர் அண்ணாமலையுடன் சேர்ந்து தற்போது நடிகை குஷ்புவும் புதிய பிரிவில் சேர்ந்துள்ளார்.

பாஜக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு, தமிழ்நாட்டில் பாஜக தலைவர்களாக இருக்கும் எச்.ராஜா. கே.டி.ராகவன் போன்ற தலைவர்களும் நடிகர் எஸ்.வி.சேகர், செய்தித் தொடர்பாளர் நாராயணன் போன்றவர்களும் பெரியாரையும், அவரது கொள்கைகளையும் இழிவாகப் பேசி வந்தனர். அவரது சிலையையே அகற்றுவோம் என்று எச்.ராஜா பேசினார். பெரியாரை ஈ.வெ.ரா என்றே சில தலைவர்கள் அழைத்தனர். பெரியார் சிலை பல இடங்களில் காவி சாயம் பூசப்பட்டும் உடைக்கப்பட்டும் அவமரியாதை செய்யப்பட்டுவந்தது. இது போன்ற செயல்களை பாஜக தலைவர்கள் கண்டிக்க மறுத்தனர்.

Villupuram Murugan- updatenews360

இந்நிலையில், புதிதாக பாஜகவின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற ஜெ.பி. நட்டா தாழ்த்தப்பட்ட சமூகத்தைத் சேர்ந்த எல்.முருகனை பாஜகவின் தமிழ்நாடு தலைவராக தேர்வு செய்தார். பெரியாருக்கு எதிராகப் பேசிவரும் யாருக்கும் தேசிய அளவில் பதவி தரவில்லை. வேறு தலைவர்கள் யாருக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லையென்பதால், முருகன் மட்டுமே கட்சியின் முகமாகப் பார்க்கப்படுகிறார்.

பெரியார் பிறந்தநாள் அன்று பேசிய முருகன், “பெரியார் சமூகநீதிக்காக பாடுபட்டவர். அவரை வாழ்த்துவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை” என்றார். இந்த நிலையில், திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்புக்கு உள்ளான விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியார் சிலை அவமதிப்புக்கு பாஜக கண்டனம் தெரிவிப்பது அதுவே முதல் முறையாகும்.

BJP_UpdateNews360

முருகன் மட்டுமே அப்படிப் பேசுவதால் தனிப்பட்ட முறையில் அவர், பாஜகவின் கொள்கைக்கு முரணாகப் பேசி வருகிறார் என்று கருதப்பட்டது. அவரைத் தொடர்ந்து, கட்சியில் துணைத்தலைவர் அண்ணாமலையும் பெரியாரைப் பாராட்டியே பேசி வருகிறார். தற்போது, நடிகை குஷ்புவும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். ஏனைய தலைவர்கள் யாரும் பெரியாரைப் பாராட்டிப் பேசுவதில்லை. தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே இருக்கும் நிலையில், பாஜகவில் பெரியார் கொள்கைகள் குறித்து இரு பிரிவுகளும் இரு பார்வைகளும் உருவாகியுள்ளன. குஷ்புவை கட்சியில் சேர்த்ததும், அவர் தான் ஒரு பெரியாரிஸ்ட் என்று கூறுவதும், எல்.முருகனின் புதிய பாதையை மத்திய தலைமை ஆதரிக்கிறது என்ற கருத்தையே உருவாக்கியுள்ளது.

Views: - 0

0

0