600க்கு 600 மதிப்பெண்கள்… அனைத்து பாடங்களிலும் சென்டம்… பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதிய சாதனை படைத்த மாணவி…!!

Author: Babu Lakshmanan
8 May 2023, 12:44 pm
Quick Share

திண்டுக்கல் ; 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் நிகழாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப். 3-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 90 சிறைக் கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.65 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர்.

அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்துகொண்டனர். பல்வேறு காரணங்களால் சுமார் 48,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுதேர்வில் 94.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 93.76%ஆக இருந்த நிலையில் இந்தாண்டு 94.30%ஆக உயர்ந்துள்ளது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.45% பேரும், மாணவியர் 96.38% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வை 8,03,385 பேர் எழுதிய நிலையில் 7,55,451 மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். 97.85% தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 326 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 600க்கு 600 பெற்று சாதனை படைத்துள்ளார்.

அண்ணாமலையார் மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணக்குப்பதிவியல், பொருளியல், கணினிப் பயன்பாடுகள் ஆகிய 6 பாடங்களிலும் நந்தினி முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

Views: - 455

0

0