இந்துக்களின் பல ஆண்டு கனவுக்கு உருவம் கொடுத்த பிரதமர் மோடி : அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்..!
5 August 2020, 1:08 pmஅயோத்தி : வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அயோத்தி ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை பிரதமா மோடி நாட்டினார்.
சர்ச்சைக்குரியதாக இருந்து வந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது. இதற்காக, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், ‘ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்னும் பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளை முடுக்கி விட்டது.
அதன்படி, இன்று ராமர் கோவிலுக்கான பூமிபூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடத்த முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் தலைமையில் நடக்கும் இந்த விழாவில், கொரோனா வைரஸ் காரணமாக 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ராமஜென்ம பூமியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்காக ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்த பிரதமர் மோடியை, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இதைத் தொடர்ந்து, அனுமன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். மேலும், குழந்தை ராமர் கோவிலில் சாஷ்டங்கமாக விழுந்து கடவுளை வேண்டினார்.
பின்னர், பூமி பூஜை நடக்கும் இடத்திற்கு சென்ற அவர். உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஆளுநர் ஆனந்திபென் படேல், உமாபாரதி ஆகியோருடன் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க சடங்குகள் நடைபெற்றன. அப்போது. வேத மந்திரங்கள் முழங்க, இந்துக்களின் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலான கனவாகிய அயோத்தி ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர், அடிக்கல் நாட்டப்பட்ட பகுதியில் தீபாராதனை காட்டி வழிபாட்டார்.
பிரதமரின் வருகையையொட்டி, விழா நடைபெறும் இடம் மட்டுமல்லாமல், நகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.