ரஜினியை வைத்து முதலமைச்சர் கனவில் அன்புமணி, விஜயகாந்த்!! அதிமுக கூட்டணி கைநழுவி போகுமோ என்று தொண்டர்கள் கலக்கம்..!
24 September 2020, 4:03 pmசென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவில் முதலமைச்சர் வேட்பாளராகலாம் என்ற கனவில் இருக்கும் பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணியும், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தங்கள் கட்சியின் தேர்தல் உத்தியை, ரஜினி வருவதாகக் கூறப்படும் நவம்பர் மாதத்துக்குப் பின்பே வகுக்கலாம் என்று காத்திருப்பதால், அதிமுக கூட்டணி வாய்ப்பு கைநழுவிப் போய்விடுமோ என்ற கலக்கத்தில் இரு கட்சிகளின் தொண்டர்களும் உள்ளனர்.
ஒரு தலைமுறைக்கு முன்பு 1996 சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்ததைத் தொடர்ந்து, அவர் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இடையில் இரண்டு மாமாங்கங்கள் நடந்து முடிந்துவிட்டன. முன்னாள் முதலமைச்சர்கள் ஜெ.ஜெயலலிதா, மு.கருணாநிதி போன்ற மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் மறைந்தபிறகு தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்தார் ரஜினி. ஆனால், இதுவரை கட்சி தொடங்கவில்லை. அவர் எப்போது கட்சி தொடங்கப்போகிறார் என்று எதிர்பார்த்த நிலையில், தான் கட்சி தொடங்கினாலும் முதலமைச்சராக மாட்டேன் என்று அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தாலும், சில அரசியல் கட்சித் தலைவர்களை முதலமைச்சர் கனவில் மிதக்க விட்டிருக்கிறது.
எப்போது கட்சி தொடங்குவார் என்று ரஜினிகாந்த் இதுவரை அறிவிக்காத சூழலில், அவர் நவம்பர் மாதம் கட்சி தொடங்குவார் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் இறக்கைகட்டிப் பறக்கின்றன. அவர் தனியாகக் களமிறங்கமாட்டார் என்றும், கூட்டணி வைத்தே தேர்தலை சந்திப்பார் என்றும் கூறப்படும் நிலையில், அவருடன் கூட்டணி வைப்பது ஆதாயம் தருவதாக இருக்கும் என்று பாமக, தேமுதிக கட்சித்தலைவர்கள் கருதுவதாகத் தெரிகிறது.
தனது கட்சி வென்றால் தான் முதலமைச்சராக மாட்டேன் என்று ரஜினி ஏற்கனவே கூறிவிட்டதால், அவருடன் கூட்டணி சேர்ந்து தான் முதலமைச்சர் வேட்பாளராகலாம் என்று இரண்டு கட்சித்தலைவர்களும் நினைக்கின்றனர். கடந்த 2016 சட்டமன்றத்தேர்தலில் தனது மகன் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கினார் பாமக தலைவர் ராமதாஸ். ஆனால், பாமக அத்தேர்தலில் 5 சதவீத வாக்குகளையே பெற்றது.
தனியாகப் போட்டியிட்டு தோல்வியைத் தந்ததால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார் ராமதாஸ். தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி தோற்றுப்போனாலும் அதிமுகவுடன் அவர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், அன்புமணியை முதலமைச்சராக்கும் ஆசை இன்னும் ராமதாசுக்கு இருப்பதால் வரும் 2021 தேர்தலிலும் ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்று பார்த்து வருகிறார்.
வெளிப்படையாக அன்புமணியை முதலமைச்சர் ஆக்குவோம் என்ற முழக்கத்தை எழுப்பினால், அதிமுகவை உரசுவதாக அமையும் என்று அவர் ராமதாஸ் எண்ணுவதால், மறைமுகமாக ரஜினியுடன் கைகோர்க்க வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. ரஜினியுடன் கூட்டணி சேர்ந்தால் அன்புமணியை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக்கலாம் அல்லது தேர்தல் முடிந்தபிறகு பாமகவுக்கு அதிக இடங்கள் கிடைத்தால் அன்புமணியை முதலமைச்சராக்க முயற்சி செய்யலாம் என்று திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தைப் பொறுத்தவரை தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று கூறி 2006 சட்டமன்றத் தேர்தலையும், 2016 தேர்தலையும் எதிர்கொண்டார். விஜயகாந்தை முதலமைச்சராக்குவதில் மிகவும் முனைப்பாக இருக்கும் அவரது மனைவி பிரேமலதா, மீண்டும் ஒருமுறை முயற்சி செய்துபார்க்கலாம் என்ற நினைப்பில் இருக்கிறார். விஜயகாந்த் ரஜினியை சம்மதிக்க வைக்கலாம் என்று அவர் திட்டமிட்டு வருகிறார். இதையே ஜனவரி மாதம் மாற்றம் வரும் என்று பிரேமலதா சொன்னதாகத் தெரிகிறது.
இரண்டு கட்சிகளும் ரஜினி வருவார் என்ற நம்பிக்கையில் நவம்பர் மாதத்துக்கு மேல் கூட்டணிப் பேச்சுக்களைத் தொடங்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறார்கள். ரஜினி வராவிட்டாலும் அதிமுகவுடன் வலுவான கூட்டணி பேரத்துக்கு இது போன்ற உத்திகள் பயன்படும் என்று அக்கட்சிகள் கருதுகின்றன. ஆனால், இது அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையாக அதிமுகவுடன் கூட்டணி உறவைப் பாதிக்கும் என்று இரு கட்சிகளின் தொண்டர்கள் அச்சத்தில் உள்ளனர்.
ரஜினி வருவாரா இல்லையா என்று தெரியாது. வந்தாலும் அவர் பாமகவுடனோ தேமுதிகவுடனோ சேர்வாரா அல்லது தனியாகக் களம் காண்பாரா என்பதும் நிச்சயமில்லை. அப்படியே சேர்ந்தாலும் அவரே முதலமைச்சர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புவதால் ரஜினியே முதலமைச்சர் வேட்பாளராக வாய்ப்பு இருக்கிறது.
அன்புமணியையோ, விஜயகாந்தையோ முதலமைச்சர் வேட்பாளராக ரஜினியோ, அவரது ரசிகர்களோ ஒத்துக்கொள்வார்கள் என்பதும் உறுதியில்லை. அவருடன் கூட்டணி அமைத்தாலும் இரு பெரும் திராவிடக் கட்சிகளை எதிர்த்துத் தேர்தலில் வெற்றிபெறுவதும் எளிதல்ல. ரஜினியை மையமாக வைத்து 2021 தேர்தல் கணக்குகளைப் போடுவது அதிமுகவுடன் இருக்கும் உறவைப் பாதித்து இரு கட்சிகளுக்கும் படுதோல்வியில் முடியுமோ என்ற கலக்கத்தில் இரு கட்சித் தொண்டர்களும் இருக்கின்றனர்.