பாமக வேட்பாளரை திமுகவினர் கடத்திச் சென்று மிரட்டியதாகப் புகார்… வெளியான சிசிவிடி காட்சியால் அடுத்தடுத்த டுவிஸ்ட்… ராமதாஸ் அப்செட்..!!

Author: Babu Lakshmanan
7 February 2022, 5:13 pm
Quick Share

வேலூர் : பாமக வேட்பாளரை திமுகவினர் கடத்திச் சென்றதாக அக்கட்சியினர் போலீஸில் புகார் அளித்த நிலையில், வெளியான சிசிடிவி காட்சியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர் ரங்காபுரம் நடைபாறை பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். இவர் வேலூர் மாநகராட்சி 24 வது வார்டில் பா.ம.க சார்பில் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் இரவு திமுகவினர் பரசுராமனை கடத்திச்சென்று வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பா.ம.க மாவட்ட செயலாளர் இளவழகன், மாநில துணைத் தலைவர் என். டி.சண்முகம், மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் பாமக வேட்பாளர்கள் 25 பேர் வேலூர் எஸ்பி ஆபீஸில் புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது பாமகவினரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியதால், காவல்துறையினருக்கும், பாமவினருக்கும் கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாமகவினர் மனு அளித்தனர்.

அந்த மனுவில், வேலூர் மாநகராட்சி தேர்தலில் 25 பாமக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 24 வது வார்டில் போட்டியிடும் பரசுராமனை நேரில் அழைத்து வேட்பு மனுவை வாபஸ் பெற வேண்டும் எனவும், இல்லையெனில் தொழில் செய்ய முடியாது என மிரட்டியுள்ளனர். மேலும், நீங்கள் தேர்தலில் நிற்பதால் தி.மு.க வேட்பாளராக நிற்க வேண்டும். உங்களுக்கு 2 நாட்கள் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் நல்ல முடிவை சொல்ல வேண்டும் என மிரட்டி அனுப்பியுள்ளனர். அதனால் பா.ம.க வேட்பாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பும், மிரட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி, அதில் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், திமுகவினரைக் கண்டித்து பாமக தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘வேலூரில் 24வது வார்டு பாமக வேட்பாளரை தோல்வி பயம் காரணமாக தி.மு.க.வினர் போட்டியிலிருந்து விலக வேண்டும். இல்லையெனில் தொழில் செய்ய முடியாது என மிரட்டியது கண்டிக்கத்தக்கது. மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவது தான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாறாக மிரட்ட கூடாது. பாமக வேட்பாளர் மிரட்டிய திமுகவினர் மீது மாநில தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். என பதிவிட்டு உள்ளார்.

இவரது பதிவுக்கு தி.மு.க மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ நந்தகுமார் டுவிட்டரில் பதிலளித்திருப்பதாவது :- பா.ம.க வேட்பாளரை யாரும் மிரட்டவில்லை, கடத்தவும் இல்லை. மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவதால் தான் வெற்றி பெற முடியாது. திமுக சார்பில் உதய சூரியன் சின்னம் ஒதுக்க வேண்டும் வேண்டும் என எங்களை நேரில் சந்தித்து என கேட்டுக்கொண்டார். 24-வது வார்டு திமுக நிர்வாகிக்கு ஒதுக்கிய காரணத்தை அவரிடம் தெரிவித்து விட்டோம். இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அவரை மிரட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. இந்த உண்மையை விசாரிக்காமல் என் மீது பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்தது ஏற்புடையது அல்ல. காரணம் பா.ம.க வேட்பாளரை மிரட்டி வெற்றி பெற வேண்டிய நிலையில் திமுக எப்போதும் இருந்ததில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், என பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, பாமக வேட்பாளர் திமுகவினரை சந்தித்து பேசிய வீடியோவை அக்கட்சியினர் தற்போது வெளியிடடுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 1405

0

0