புதிய திட்டத்துடன் ராமதாஸ்… ! பாமக பாதை சரியா…? ஆட்சி கனவு பலிக்குமா…?

Author: Babu Lakshmanan
18 October 2021, 4:29 pm
PMK - updatenews360
Quick Share

தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக திகழும் பாமக தேர்தல் நேரத்தின்போது, கூட்டணி அமைப்பதில் முரண்டு பிடிப்பதுண்டு. இதை கூட்டணிக்கு தலைமை தாங்கும் பிரதான கட்சிகளிடம் பேரம்பேசி அதிக சீட்டுகளை வாங்குவதற்கான ஒரு யுக்தி என்று சொல்வார்கள்.

கூட்டணியால் வெற்றி

அதற்கு சில நேரங்களில் நல்ல பலனும், பல சமயங்களில் பெருத்த ஏமாற்றமும் கிடைத்திருக்கிறது. குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலின்போது பாமக இணைந்திருந்த அணிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

1998, 1999, 2004, 2014 தேர்தல்களில் கூட்டணி அமைத்தபோது வெற்றி பெற்றது. 2009 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்டபோது ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. 1989,1991,1996 என தொடர்ந்து 3 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட்டு பாமக தோல்வி கண்டுள்ளது. அதாவது பாமக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நாடாளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை 1991,1996, 2016 என 3 தேர்தல்களில் தனித்தே களமிறங்கியது. 2016-ல் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மாற்றம் முன்னேற்றம் என்ற முழக்கத்துடன் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதேநேரம் அக்கட்சி 1991-ல் தனித்துப் போட்டியிட்டபோது ஒரு இடத்திலும் 1996-ல் 4 தொகுதிகளிலும் வெற்றி கண்டிருந்தது.

2001தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்ட பாமகவுக்கு 20 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. 2006-ல் திமுக கூட்டணியில் 31 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளை கைப்பற்றியது. 2011 தேர்தலிலும் திமுக கூட்டணியில் போட்டியிட்டது. அப்போது 30 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திய பாமகவுக்கு 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி
5 தொகுதிகளில் வென்றது.

சுருக்கமாகச் சொன்னால், நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, சட்டப்பேரவைத் தேர்தலிலும் சரி பாமக கூட்டணி அமைத்து போட்டியிட்டபோதுதான் அக்கட்சி ஓரளவு வெற்றியை பதிவு செய்திருக்கிறது. தனித்துப் போட்டியிட்டபோதெல்லாம் பலத்த அடிதான் வாங்கி இருக்கிறது, என்பதை புரிந்துகொள்ள முடியும்.

பாமக கூட்டம்

கடந்த காலங்களில் தேர்தலில் பாமக போட்டியிட்டது பற்றிய ஆய்வு இப்போது எதற்காக?… என்ற கேள்வி எழலாம். அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.

இரு தினங்களுக்கு முன்பு டாக்டர் ராமதாஸ் திடீரென காணொலி வாயிலாக தனது தனது கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டினார். அதில் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மண்டல பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட ஒரு டஜன் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், பாமகவின் செயல்பாடுகள், கூட்டணி குறித்த நிலைப்பாடு, எதிர்வரும் தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

பாமக தலைமையில்தான் கூட்டணி

82 வயது ராமதாஸ் சற்று உடல் நலம் குன்றியதுபோல தென்பட்டாலும், அவருடைய பேச்சில் அனல் பறந்தது. அதில் இனம் புரியாத கோபமும் இருந்ததை காண முடிந்தது.

அவர் பேசும்போது, “ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. நாம் எவ்வளவு பலமான கட்சி தெரியுமா? இப்போது அந்த பலமெல்லாம் எங்கே போனது? எனது 41 ஆண்டு கால உழைப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டதே? எனவே இனி ஆதாயத்துக்காக யாரும் கட்சியில் இருக்க வேண்டாம். கட்சி விட்டு கட்சி தாவுவோர் இப்போதே சென்று விடுங்கள். கட்சியில் இருந்துகொண்டே யாரும் துரோகம் செய்யாதீர்கள். இனி போட்டி, பொறாமை இருக்கக்கூடாது. இனி கட்சிக்கு என ஒரு உளவுப்படை வைக்க போகிறோம்.

திமுகவுக்கும், அதிமுகவுக்கும் பல நேரங்களில் நாம் உதவியிருக்கிறோம். ஒரு கட்சி நம்மை களங்கப்படுத்தியது. இன்னொரு கட்சி நம்மை கொஞ்சம் கவுரவப்படுத்தியது. ஆனால் சூழ்நிலைக்கு நாம் உண்மையாக இருந்திருக்கிறோம்.

இனி நமது தலைமையில்தான் கூட்டணி. வேறு யாருடனும் கூட்டணி என்பதே இனி கிடையாது. கடைசிநேரத்தில் முடிவை மாற்றும் நிலை இனி இருக்காது. இதற்கு கட்சியினர் ஒற்றுமையாக இருக்கவேண்டும். வீடு வீடாக சென்று பாமகவின் பெருமைகளை, செயல்திட்டங்களை சொல்லுங்கள். தீபாவளிக்கு பிறகு பாமக நிர்வாகிகள் ஊர் ஊராக சென்று மக்களை சந்திக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறோம். அதை செயல்படுத்துவோம். நமது வளர்ச்சியை பற்றி மட்டுமே இனி சிந்திப்போம். மக்கள் நிச்சயம் மனம் மாறுவார்கள். மாற்றத்தை ஏற்பார்கள். என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி ராமதாஸ் உட்காரவேண்டும்” என்று கொந்தளித்தார்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, “தமிழக நலனுக்காக பாமகவிடம் எத்தனையோ செயல்திட்டங்கள் இருந்தும் நம்மால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. எனவே நிர்வாக சீர்திருத்தமே இப்போதைய காலத்தின் கட்டாயம். அத்துடன் சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற இருக்கிறது என்ற மனநிலையில் இப்போதிருந்தே நாம் ஒவ்வொரும் கடுமையாக உழைக்கவேண்டும். தற்போது 3-வது பெரிய கட்சியாக இருக்கும் பாமக அடுத்த 2 ஆண்டுகளில் 2-வது இடத்துக்கும், அடுத்த 4 ஆண்டுகளில் முதலாவது கட்சியாகவும் வளரவேண்டும்”
என்றார்.

துரோகம்

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் டாக்டர் ராமதாஸ் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தேர்தலில் பாமகவை சேர்ந்த நிர்வாகிகள் 48 பேர் வெற்றி பெற்றிருப்பதை சுட்டிக் காண்பித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தனித்துப் போட்டியிட்டு பாமக வளர்ச்சி கண்டுள்ளது, என்று பெருமிதமும் தெரிவித்திருந்தார்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், திடீரென ஒரே நாளில் மனதை மாற்றிக் கொண்டு அவர், உள்ளாட்சி தேர்தலில் தனது கட்சிக்காரர்கள் துரோகம் செய்து விட்டனர் என்று ஏன் சொன்னார் என்பது புரியவில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பலவீனம்

இதுபற்றி அவர்கள் கூறும்போது, “ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் பணம் பெருமளவில் விளையாடும், சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் கூட பணத்தை தாராளமாக செலவழிப்பார்கள் என்பது டாக்டர் ராமதாசுக்கு தெரியாத விஷயமல்ல.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் கண்டது, சரியான நடவடிக்கை அல்ல. ஏனென்றால் திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி கூட அதிலிருந்து வெளியேறாத நிலையில், தனித்துப் போட்டியிட்டால் ஆளுங்கட்சிக்கு எதிராக வெற்றி பெற முடியுமா? என்பதை அவர் யோசிக்க தவறிவிட்டார். அதனால்தான் வட மாவட்டங்களில் பலமான கட்சியாக இருந்தும்கூட மாம்பழத்திற்கு ஓட்டுகள் விடவில்லை. தேர்தலில் போட்டியிட நிறுத்தப்பட்டவர்களும் தோல்விக்கும், செலவுக்கும் பயந்து ஒதுங்கி கொண்டு விட்டனர். பலர் ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சியான அதிமுகவிலும் ஐக்கியமானார்கள்.

kaduvetti guru- updatenews360

இன்னொரு விஷயம், டாக்டர் ராமதாஸ் மீது வைத்திருக்கும் அளவுகடந்த மரியாதை, அளப்பரிய நம்பிக்கையை அவருடைய மகன் அன்புமணி மீது பாமகவினர் வைத்திருப்பதுபோல் தெரியவில்லை. மேலும், ராமதாசுக்கு வலதுகரம்போல் திகழ்ந்த காடுவெட்டி குரு மூன்றாண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்ததும் பாமக சற்று பலவீனமாக இருப்பதற்கு ஒரு காரணம்.

இதனால்தான் வன்னியர்கள் கணிசமாக வசிக்கும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பாமக வேட்பாளர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ராமதாஸ் இன்னொரு முக்கிய விஷயத்தையும் சொல்கிறார். இனிவரும் தேர்தல்களில் பாமகதான் கூட்டணிக்கு தலைமை தாங்கும் என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.

3வது அணி

இது நல்ல விஷயமாக பட்டாலும் கூட பாமக தலைமையில் அமையும் கூட்டணி, 3-வது அணியாகத்தான் இருக்கும். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்களை பொறுத்தவரை, 1989-ம் ஆண்டுக்கு பிறகு மூன்றாவது அணி தலைமையிலான எந்த ஒரு கட்சியும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றதில்லை. 1996-ல் வைகோ தலைமையில் மூன்றாவதாக ஒரு அணி உருவானது. ஆனால் அது போணியாகவில்லை.

2016 தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் 6 கட்சிகள் அடங்கிய மக்கள் நலக் கூட்டணி அமைந்தது. அதற்கு கிடைத்த பலனும் பூஜ்யம்தான். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக- அமமுக கூட்டணி மூன்றாவது பலம் வாய்ந்த அணியாக பேசப்பட்டது. அதுவும் ஊற்றிக்கொண்டது.

தனித்து விடப்படலாம்

சரி, பாமக தலைமையில் அமையும் 3-வது அணியில் எந்தக் கட்சிகளெல்லாம் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது…?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாங்கள் எல்லாத் தேர்தலிலும் தனித்தே நிற்போம் என்று அறிவித்துவிட்டார். எனவே அவர் இந்த கூட்டணி சேர வாய்ப்பே இல்லை.

தேமுதிகவுக்கும், பாமகவுக்கும் ஏழாம் பொருத்தம். அதனால் அந்தக் கட்சியும் பாமகவின் தலைமையை விரும்பாது. டிடிவி தினகரனின் அமமுகவும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படியே சேர்ந்து விட்டாலும், முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் சிக்கல் எழும். ஆளும் கட்சியாக திமுக இருப்பதால் அந்த கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் ஒன்று கூட தற்போதைய நிலையில் வெளியே வராது. எனவே இறுதியில் பாமக தனித்து விடப்படலாம்.

வட மாவட்டங்கள் பலவற்றில் பாமகவுக்கு முன்பிருந்த செல்வாக்கு தற்போது இல்லை என்பதும் கண்கூடு. கட்சியும் மாநிலம் முழுவதும் பரவலாக இல்லை. இப்படிப்பட்ட சூழலில் பாமக தலைமையில் அமையும் கூட்டணி எப்படி வலுவானதாக இருக்கும்?…என்பது மில்லியன் டாலர் கேள்வி!

நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கணிசமான வெற்றிகளை பெற்றுவிட்டு டாக்டர் ராமதாஸ் இப்படி சொல்லி இருந்தாலாவது, அது ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்திருக்கும். எனவே கட்சி தொண்டர்களை உசுப்பேற்றி விடுவதற்காக டாக்டர் ராமதாஸ் இப்படி பேசி இருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

Views: - 282

0

0