மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு..! டாக்டர் பாராட்டு

3 August 2020, 1:18 pm
Quick Share

சென்னை: மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் இடம் இல்லை. இருமொழிக்கொள்கை மட்டுமே தொடரும்.

மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  அறிவித்திருப்பது  வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது!

மும்மொழிக் கொள்கையை நிராகரிக்க தமிழக அரசு கூறியுள்ள அனைத்து காரணங்களும் 3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை  தொடரும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.