போலீசார் தாக்கியதில் பலத்த காயமடைந்த விவசாயி உயிரிழப்பு.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி…!!

23 June 2021, 12:40 pm
police attack- updatenews360
Quick Share

சேலம் அருகே குடிபோதையில் இருந்த விவசாயியை போலீசார் தாக்கியதில், அவர் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழப்பாடியை அடுத்த இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் முருகேசன் (40). இவருக்கு அன்னக்கிளி என்னும் மனைவியும், இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள இவர், இடையப்பட்டி – வாழப்பாடி சாலையில் மளிகை மற்றும் பழக்கடைகள் நடத்தி வந்தார்.

தற்போது கொரோனா அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றாக இருக்கும் சேலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வெள்ளிமலை பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது அருந்த தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

மது அருந்திவிட்டு திரும்பி வரும் போது, கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவரை நிறுத்தி விசாரித்துள்ளார்.

அப்போது, மதுபோதையில் இருந்த முருகேசனுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த போலீசார், லத்தியால் முருகேசனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவருடன் வந்த நண்பர்கள் போலீசாரிடம் அடிக்க வேண்டாம் என்று கூறி கதறினர். ஆனால், கோபத்தின் உச்சத்தில் இருந்த போலீசார் அவரை தலை மற்றும் கால் உள்ளிட்டவற்றில் தாக்கினர். இதில், முருகேசன் சாலையிலேயே சுருண்டு விழுந்தார்.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதுலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, உடல்நிலை மோசமடைந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போது அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, விவசாயியை தாக்கி கொலை செய்த போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கும் வரை முருகேசனின் சடலத்தை வாங்கப்போவதில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 215

0

0