புதுவை காங்., அரசை கவிழ்த்த திமுக : தமிழகத்திலும் கூட்டணிக்கு வேட்டு!!

23 February 2021, 4:01 pm
Congress - dmk - cover - 11 - updatenews360
Quick Share

புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு
எதிர்பார்த்தபடி கவிழ்ந்து விட்டது. இல்லை இல்லை…கவிழ்க்கப்பட்டு விட்டது என்றே சொல்லவேண்டும்! இந்த கவிழ்ப்புக்கு காரணம் திமுகவா? நாராயணசாமியா? பாஜகவா? என்று ஒரு பெரிய பட்டிமன்றமே நடத்தலாம்.

அந்த அளவிற்கு இதில் ஏராளமான அரசியல் காரணங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன.

புதுச்சேரி கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கிரண் பெடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த மோதல் போக்குதான் இதற்கு காரணம் என்று பலரும் நினைப்பார்கள். தவறு என்று சொல்ல ஒரேயொரு காரணம் போதும். அவர்கள் இருவருக்கும் இடையே நடந்தது யாருக்கு அதிக அதிகாரம், யார் பெரியவர்? என்கிற சண்டைதான் மட்டுமே.

Pondy Kiran Vs Narayanasamy-Updatenews360

மற்றபடி ஆட்சியை கவிழ்ப்பதற்கான முயற்சிகளில் கிரண்பெடி ஒரு போதும் ஈடுபட்டிருக்க மாட்டார் என்று அவரை நன்கு அறிந்த, அவருக்கு மிகவும் நெருக்கமான புதுச்சேரி நண்பர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. கிரண்பெடி புதுவை கவர்னராக இருந்தபோது பாஜகவை சேர்ந்த மூன்று பேரை நியமன எம்எல்ஏக்கள் ஆக நியமித்தார். அதுவும் கூட டெல்லி மேலிடம் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, அவர் இதுபோல் எம்எல்ஏக்களை நியமனம் செய்தார் என்பார்கள்.

இந்த நியமன எம்எல்ஏக்களுக்கு ஓட்டுரிமை உண்டா? இல்லையா? என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு 2 வருடங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கியது. அதில் யூனியன் பிரதேசமான புதுவையில் நியமன எம்எல்ஏக்களுக்கு ஓட்டுரிமை உண்டு என்று கூறப்பட்டது. இங்கேதான் நாராயணசாமி தனது முதல் தவறை செய்தார். நமக்குத்தான் திமுக கூட்டணி ஆதரவுடன் பெரும்பான்மை பலம் இருக்கிறதே என்று கருதி, அதை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டுவிட்டார். அதிலுள்ள ஆபத்தை அவர் உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து அவருடைய அமைச்சரவையில் பதவி வகித்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் என்ற எம்எல்ஏவும் கடந்த மாத இறுதியில் தங்களுடைய எம்எல்ஏ பதவிகளை திடீரென ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். அப்போது, காங்கிரசிலிருந்து மேலும் 4 எம்எல்ஏக்கள் வெளியேறுவார்கள் என்று நமச்சிவாயம் தரப்பினர் மிகுந்த நம்பிக்கையோடு தெரிவித்தனர். அது, புதுவை காங்கிரஸ் அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் அமைந்தது.

Congress namachivayam 11 - updatenews360

இங்கே இரண்டாவது முறையாக நாராயணசாமி ஒரு தவறான கணக்கை போட்டார். தேர்தல் நடக்க இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், யாரும் ஆட்சியைக் கவிழ்க்க மாட்டார்கள் என்று கருதினார். அதன்பிறகு மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் எனும் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களுடைய பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்தபோதாவது அவர் விழித்துக் கொண்டிருக்கவேண்டும். அப்போதும் அவர் சுதாரித்துக் கொண்ட மாதிரி தெரியவில்லை.

மாறாக, அரசுக்கு ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால் எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து 2 எம்எல்ஏக்களை இழுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் அவர் இருந்தார். அதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

இந்த அரசியல் திருப்பங்களுக்கு இடையே புதுவை மாநிலத்தின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக ஏற்றுக்கொண்ட தமிழிசை சௌந்தரராஜன் காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உத்தரவிடமாட்டார் என்றும் அவர் உறுதியாக நம்பினார்.

ஆனால் நடந்ததோ வேறு. சட்டப்பேரவையில் ஆளும் கட்சி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி பலமும் தலா 14 எம்எல்ஏக்கள் என்ற சம நிலை ஏற்பட்டதால் பெரும்பான்மை இல்லாத அரசு நீடிக்கக்கூடாது என்ற அடிப்படையில் மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

narayanasamy meet tamilisai - updatenews360

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முந்தைய நாளில் கூட காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்து காங்கிரஸ் அரசை மைனாரிட்டி அரசாக மாற்றிவிட்டார். இதைவிட இன்னொரு அதிர்ச்சி என்னவென்றால் காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வந்த 3 திமுக எம்எல்ஏக்களில் ஒருவரான வெங்கடேசன், கடைசிநேரத்தில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து புதுவை அரசியலில் பெரும் சூறாவளியை ஏற்படுத்தினார்.

இதன் காரணமாக சட்டப்பேரவையில் நாராயணசாமி என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால்தான் வேறு வழியின்றி அவருடைய அமைச்சரவை ராஜினாமா செய்ய நேரிட்டது.

3 நியமன எம்எல்ஏக்களுக்கும் சட்டப்பேரவையில் ஓட்டுரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த சில மாதங்களிலேயே, டெல்லி பாஜக மெல்ல மெல்ல புதுவை மாநில தனது கட்சி நிர்வாகிகள் மூலம் காய்களை நகர்த்தி நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியது. ஆனால், அது பிரயோஜனப்படவில்லை. காலதாமதம் ஏற்பட்டு தேர்தலும் நெருங்கிவிட்டது.

இதனால், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழ்நிலையில், காங்கிரஸ் அரசை கவிழ்த்து என்ன ஆகப் போகிறது என்று கருதி அதை அப்படியே பாஜக கிடப்பில் போட்டது. ஆனால், இதை மீண்டும் தூசி தட்டி எடுக்க வைத்தவர் அரக்கோணம் தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகன் ஆவார். கடந்த மாதம் 18-ம் தேதி புதுவைக்கு வந்த அவர், மாநில திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது ஒரு சர வெடியை கொளுத்தி போட்டார்.

புதுவை மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் திமுக போட்டியிட்டு வெற்றி பெறும் என்று அப்போது அவர் தடாலடியாக அறிவித்தார். தளபதியின் ஆணையின்படி இதை நான் நிறைவேற்றியே ஆவேன். இல்லையென்றால் இதே மேடையில் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கொந்தளித்தார். ஜெகத்ரட்சகன் இப்படி கொதித்ததற்கும் ஒரு பின்னணி காரணம் உண்டு என்கிறார்கள்.

Jagathratchagan - Updatenews360

அவர் புதுவை திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுவதற்கு, சரியாக நான்கு நாட்களுக்கு முன்பு, அதாவது பொங்கல் தினத்தன்று மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், திமுக தலைவர் ஸ்டாலினும் சந்தித்துப் பேச திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது இரு தலைவர்களுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனக்குப் பதிலாக ஸ்டாலின், தனது மகன் உதயநிதியை அவனியாபுரம் அனுப்பிவைத்தார். இருவரும் ஜல்லிக்கட்டை பார்த்துக் கொண்டிருந்தபோது ராகுலிடம், உதயநிதி இன்றே மதுரையில் தொகுதி பங்கீட்டை பேசி முடித்து விடுவோம் என்று கூறியிருக்கிறார்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராகுல் காந்தி, நான் அப்பாவிடம் பேசிக் கொள்கிறேன் என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டார் என்கிறார்கள். அதன்பின் ஒரு வார்த்தைகூட தொகுதிப் பங்கீடு பற்றி அவர் உதயநிதியிடம் பேசவே இல்லை. அதுமட்டுமின்றி வெறும் அரை மணி நேரம் மட்டுமே ஜல்லிக்கட்டை பார்த்துவிட்டு, அங்கிருந்து மதுரை சென்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு தனி விமானத்தில் டெல்லிக்கு திரும்பி விட்டார்.

திமுகவில் இளைஞர் அணி செயலாளராக பதவி வகிக்கும் உதயநிதி இதை தனக்கு நேர்ந்த பெருத்த அவமானமாக கருதி அதை தனது தந்தை ஸ்டாலினிடம் சொன்னதாகவும், அதன் எதிரொலியாகத்தான் ஜெகத்ரட்சகன் புதுவையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை முறிக்கும் விதமாக 30 இடங்களிலும் திமுக போட்டியிடும் என்று அறிவித்தார் எனவும் கூறுகிறார்கள்.

இதைத்தொடர்ந்தே, புதுவையில் திமுகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே பனிப்போர் தீவிரமானது. இந்த சலசலப்பை கண்ட பாஜக கிடப்பில் போட்ட தனது திட்டத்தை தூசி தட்டி மீண்டும் கையில் எடுத்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு வலை விரிக்கவும் ஆரம்பித்தது. அந்த வலையில் 5 பேர் சிக்கினர்.
ஆறாவதாக மாட்டியவர்தான் திமுகவின் வெங்கடேசன்.

DMK mla venkatesan - updatenews360

தான் பதவியை ராஜினாமா செய்தது குறித்து புதுவை திமுகவின் முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் கூறும்போது, “எனது முடிவை கட்சி மேலிடத்திற்கு தெரிவித்த பின்பே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தேன்” என்றார்.

அப்படியென்றால், புதுவையில் காங்கிரஸ் அரசு கவிழ்ப்போகும் விஷயம் திமுக தலைமைக்கு முன்னதாகவே தெரிந்து இருக்கிறது என்பதையும், ஆட்சி கவிழ்ப்புக்கு ஒரு திமுக எம்எல்ஏவும் உடந்தையாக இருந்திருக்கிறார் என்பதையும் இதன் மூலம் யூகிக்க முடிகிறது.

புதுவையில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது கூட இப்போது அரசியல் வட்டாரத்தில் அவ்வளவு பரபரப்பாக பேசப்படவில்லை. இனி தமிழகத்திலும், புதுவையிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? என்ற கேள்விதான் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

இது தேசிய கட்சியான காங்கிரசுக்கு கவுரவப் பிரச்சனையாக மாறிவிட்டதால் இனி திமுக காங்கிரஸ் கூட்டணி இரு மாநிலங்களிலும் நீடிப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இவர்களின் கணிப்பிலும் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது!

Views: - 12

0

0