காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ராகுல்காந்தி எதிர்ப்பு : தனியார்மயமாக்கலை உரிமை கொண்டாடுகிறாரா..?

8 September 2020, 6:15 pm
sonia_gandhi_rahul_gandhi_updatenews360
Quick Share

அரசுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை பாஜக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது கட்சியினர் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

1991-ல் காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது என்பதால், தனது சொந்த அரசின் கொள்கைகளையும் ராகுல்காந்தி எதிர்க்கிறாரா என்றும், புதிய பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போன்றோரை ராகுல்காந்தி விமர்சிக்கிறாரா என்றும் கட்சியினர் எண்ணமிட்டு வருகின்றனர்.

ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவு செய்துள்ள கருத்தில், மோடி அரசின் தேவையற்ற தனியார்மயமாக்கக் கொள்கைகள் நாட்டுக்குக் கடுமையான நெருக்கடியை உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ளார். மேலும், “இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்துவரும் நிலையில் அரசுத்துறைகளை மத்திய அரசு தனியார்மயமாக்கி வருகிறது. மோடி அரசு வேலைவாய்ப்புகளை அழித்து வருகிறது. இதனால் யாருக்கு லாபம்? தனியார்மயத்தை நிறுத்தவேண்டும். வேலைவாய்ப்புகளைக் காக்க வேண்டும்” என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Rahul_gandhi_UpdateNews360

1991-ஆம் ஆண்டு நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் தனியார்மயக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது. அதைத்தொடர்ந்து வந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசும், அதே பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்றியது. மீண்டும் 2004-ஆம் ஆண்டு ஆட்சிக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தியது. இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வழிகாட்டும் குழுவின் தலைவராக ராகுல்காந்தியின் தாயும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியாகாந்தி இருந்தார்.

பிரதமர் மன்மோகன் சிங் அரசை சோனியா காந்தி வழிகாட்டி நடத்தி வந்த நிலையில், ராகுல்காந்தி தனியார்மயத்தை எதிர்த்து அப்போதேல்லாம் கருத்து எதையும் வெளியிடவில்லை. ஆனால், ஆட்சியை இழந்து ஆறாண்டுகளுக்குப்பிறகு தனியார்மயத்தை எதிர்த்து கருத்து வெளியிட்டுள்ளது முந்தைய காங்கிரஸ் அரசின் பொருளாதாரக் கொள்கைகளின் மீதான விமர்சனமா என்ற குழப்பம் நிலவுகிறது.

Sonia_Rahul_Manmohan_UpdateNews360

2004ஆம் ஆண்டு முதல் 2014 வரை ஆட்சியில் இருந்தபோது தோன்றாத ஞானோதயம், இப்போது திடீரென்று தோன்றியிருப்பது அவரது சிந்தனைப்போக்கில் மாற்றமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் அரசு மட்டுந்தான் தனியார்மயக்கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும், இன்னொரு அரசு அதைப் பின்பற்றக்கூடாது என்ற இரட்டை நிலைப்பாடும் இதில் வெளிப்படுகிறது. மேலும், தனியார்மயம் குறித்து ராகுல் காந்தியின் கருத்து உண்மையான மனமாற்றமாக இருந்தால், கட்சியின் கொள்கைகளில் ராகுல்காந்தி மாற்றத்தைக் கோருவாரா என்று தொண்டர்கள் பலரும் தற்போது குழப்பமடைந்துள்ளனர்.

தனியார் முதலாளிகள் பலரும் பாஜகவுக்கே நிதி வழங்கி வருவதால் ராகுல்காந்தி கோபமடைந்துவிட்டாரா அல்லது முதலாளிகளை மிரட்டி தனியார்மயம் தொடர்வதற்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவும் தேவை என்று அவர்களுக்கு உணர்த்தும் முயற்சியாகவும் ராகுலின் கருத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Views: - 0

0

0