ராகுலின் ஒரே கூட்டத்தால் பாஜக காலி.. மீண்டும் மோடி வந்தால் இடஒதுக்கீடு பறிபோகும் : CM ஸ்டாலின் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
13 April 2024, 8:20 pm
CM stalin
Quick Share

ராகுலின் ஒரே கூட்டத்தால் பாஜக காலி.. மீண்டும் மோடி வந்தால் இடஒதுக்கீடு பறிபோகும் : CM ஸ்டாலின் விமர்சனம்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் திருப்பூர் அவிநாசியில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பரப்புரை ஆற்றினார்.

நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகையில் பிரதமரின் ஒட்டுமொத்த பரப்புரையும் காலி.

கோவையில் ராகுலும் நானும் நடத்திய கூட்டம் பாகுபலி போல் பிரம்மாண்டமாக இருந்தது. சமூக நீதி என்றாலே பிரதமர் மோடிக்கு அலர்ஜியாக உள்ளது.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதலில் இட ஒதுக்கீட்டை தான் காலி செய்வார். வருகிற நாடாளுமன்ற தேர்தல் இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடக்கிற போர்.பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைத்தால் அரசமைப்பையும் மாற்றி விடுவார்கள். மோடியின் பா.ஜ.க. வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. கலவரம் செய்வது பா.ஜ.க.வின் டி.என்.ஏ.வில் ஊறிப் போய் உள்ளது.

பா.ஜ.க.வை உள்ளே நுழையவிட்டால் சமூக அமைதியை கெடுத்து விடுவார்கள். அதிகாரத் திமிரில் உள்ள பா.ஜ.க.வை மீண்டும் விட்டால் திருப்பூரை மணிப்பூராக்கி விடுவர். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவை பிரதமர் மோடியின் இரட்டை தாக்குதல்கள்.

பிரதமர் மோடியின் இரட்டை தாக்குதலால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன. பா.ஜ.க. ஆட்சியில் மேற்கு மண்டலத்தில் தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு சென்று விட்டன.

சிறு, குறு, நடுத்தர தொழிலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. வளர்ந்து வரும் தொழில்களுக்கான மையமாக தமிழகம் முன்னேறி வருகிறது. எளிமையாக தொழில் தொடங்கும் பட்டியலில் 11-ல் இருந்து மூன்றாவது இடத்திற்கு தமிழகம் முன்னேறி உள்ளது என அவர் பேசினார்.

Views: - 96

0

0