‘விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்’ : எஸ்.பி.பி.க்காக வீடியோ வெளியிட்ட ரஜினி..!
17 August 2020, 12:31 pmசென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று கொரோனா தொற்றுகாரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்பிபி அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவ நிபுணர் குழு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. ஆனால், அவரின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது, எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இயக்குனர் பாரதி ராஜா, இசை ஞானி இளையராஜா உள்ளிட்டோர் தங்களின் உருக்கமான பதிவுகளை சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், எஸ்.பி.பி. பூரண உடல்பெற வேண்டும் என வேண்டிய நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலில் பாடி கோடி, கோடி மக்களை மகிழ்வித்த மதிப்பிற்குரிய எஸ்.பி.பி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று அபாய கட்டத்தை தாண்டியது மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.