மத்திய அரசை குறை சொல்லிட்டு இப்ப நீங்க பண்ணுனது நியாயமா..? குடியரசு தின அணிவகுப்பு குறித்து தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி..!!
Author: Babu Lakshmanan26 January 2022, 3:25 pm
சென்னை : 73வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பு குறித்து தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை – மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதில், டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உள்பட 4 ஊர்திகள் சென்னையில் அணிவகுத்து சென்றன. ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோர் சிலைகளுடன் அலங்கார ஊர்தி இடம்பெற்றது.
இதேபோல், விடுதலைக்காக பாடுபட்ட வ.உ.சி, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை காட்சிபடுத்தும் தத்ரூப சிலைகளுடன் சுதேசி கப்பலும் அலங்கார ஊர்தியில் இடம்பெற்றது. தந்தை பெரியார், ராஜாஜி, காமராஜர், தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் தத்ரூப உருவங்கள் அடங்கிய தத்ரூப சிலைகள் கொண்ட ஊர்தியும் இடம்பெற்றது.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பு ஏமாற்றம் அளிப்பதாக குறித்து தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது!
நாகப்ப படையாட்சி காந்தியடிகளுடன் இணைந்து போராடி உயிர்நீத்தவர், கடலூர் அஞ்சலையம்மாளின் வீரமும், தீரமும் காந்தியடிகளை வியக்க வைத்தவை. ஆதிகேசவ நாயக்கர் காந்தியிடம் சர்தார் பட்டம் பெற்றவர். ம.பொ.சி சிறந்த விடுதலை வீரர். இவர்களின் தேசப்பற்றும், தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல!
தில்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா? இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும். இனி இத்தவறு நிகழாமல் உறுதி செய்ய வேண்டும்!, என தெரிவித்துள்ளார்.
0
0