இலவசங்களும் ஒருவகையான லஞ்சம்தான்… இலவசங்களால் நாடு வளர்ந்திருக்கா..? திமுகவால் நிரூபிக்க முடியுமா..? சீமான் சவால்…!!

Author: Babu Lakshmanan
18 August 2022, 2:22 pm
Quick Share

திருச்சி : இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் நிரூபிக்க முடியுமா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

2018ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சிக்கும், ம.தி.மு.கவினருக்கும் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜரானார்.

அந்த வழக்கில் மீண்டும் செப்டம்பர் 19ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதே போல, அந்த சம்பவத்தில் நாம் தமிழர் கட்சியினர் தங்களை தாக்கியதாக ம.தி.மு.க வினர் கொடுத்த வழக்கில் வரும் 25ம் தேதி சீமான் மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் கூறியதாவது :- இலவசங்கள் கூடாது என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். இதேபோல், தமிழக நிதி அமைச்சர் இலவசங்கள பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என நிதியமைச்சர் பி.டி.ஆரால் நிரூபிக்க முடியுமா? இலவசங்கள் என்பதும் ஒரு வகையான லஞ்சம் தான். இலவசங்களால் நாடு ஒரு புள்ளி அங்குலம் கூட வளராது.

காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் ஒரே கொள்கையை கொண்டதுதான். காங்கிரஸ் கதர் கட்டிய பாஜக, பாஜக காவி கட்டிய காங்கிரஸ். சுதந்திர கொடியை பிடிக்கும் தகுதி ஆர்எஸ்எஸ், பாஜகவிற்கு இல்லை. மிகவும் வசதியான நேரு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று 16ஆண்டு காலம் சிறையில் இருந்தார்.

அவரையும் பிரிட்டிஸ்க்கு சாகும் வரை விஸ்வாசமாக இருப்பேன் என கடிதம் எழுதிய சாவர்க்கரையும் பிரதமர் மோடி எப்படி ஒப்பிடலாம். அது எப்படி சரி, அவரை எப்படி வீரர் என கூறலாம்? இப்படி தான் அவர்கள் வரலாறை பல வகையில் திரித்துள்ளார்கள். வீரர் என்றால் சுபாஷ் சந்திரபோஸ் போலவும், பகத்சிங் போலவும் இருக்க வேண்டும். மன்னிப்பு கடிதம் கொடுத்தவரை வீரர் என எப்படி அழைப்பீர்கள். வீர சாவர்க்கர் அல்ல கோழை சவர்க்கர்.

அதிமுகவில் நடப்பது அவர்களின் உட்கட்சி பிரச்சினை அது அவர்களின் பஞ்சாயத்து. பெரிய நாட்டாமையிடம் அவர்கள் பேசி தீர்வு காணட்டும். நாம் மக்கள் பிரச்சினை பேசுவோம் ஓபிஎஸ்வும், இபிஎஸ்வும் இணைந்து பொதுக்குழுவை நடத்த முடியுமா என கற்பனை செய்து பாருங்கள். அங்கு ஒரு நகைச்சுவை நாடகம் நடக்கிறது நாம் வேடிக்கை பார்ப்போம், என்றார்.

Views: - 570

0

0