8 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்… பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்… உங்க மாவட்டம் எந்த லிஸ்ட்டில் இருக்குனு தெரியனுமா..?

Author: Babu Lakshmanan
10 November 2021, 9:21 am
Quick Share

சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 3 தினங்களாக வடகிழக்கு பருவமழையினால் தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. 2015ம் ஆண்டு நிகழ்ந்ததைப் போலவே, தற்போதும் சென்னை மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையிலும், தொடர் கனமழையால் தண்ணீர் தொடர்ந்து தேங்கிய வண்ணம் உள்ளது. சென்னையில் கடந்த 6ம் தேதி அதிகபட்சமாக 23 செ.மீ. மழை பதிவானது.

இதனிடையே, வடகிழக்கு பருவமழை 11ம் தேதி வரை தீவிரமாக இருக்கும் என்றும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும் என்பதால் அந்த 8 மாவட்டங்களுக்கும் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் இன்று பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, மேற்கண்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் நாளை வரை மணிக்கு 40 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகின்றனர்.

Views: - 332

0

0