திமுக தேர்தல் வாக்குறுதியில் தமிழர்களுக்கு முன்னுரிமை… பொருளாதார ஆலோசனைக் குழுவில் தமிழக நிபுணர்கள் புறக்கணிப்பு?

24 June 2021, 1:26 pm
econimist crew - updatenews360 (2)
Quick Share

தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளது, அனைவரும் அறிந்த விஷயம்.
இதனால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மிக மிக மெதுவாக உள்ளது.

தமிழக நிபுணர்கள் அல்லாத குழு

இந்த மந்த நிலையை போக்க தமிழக அரசு உலக அளவில் புகழ்பெற்ற 2 வெளிநாட்டவர்களையும், இந்தியாவின் தலை சிறந்த 3 பேரையும் கொண்ட பொருளாதார நிபுணர் குழு ஒன்றை அமைத்திருக்கிறது.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும், 2019-ல்
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை முதன் முதலாக பெண்மணியுமான எஸ்தர் டப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பெல்ஜியம் நாட்டின் பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரெஸ், முன்னாள் மத்திய நிதித்துறை செயலாளர் எஸ். நாராயணன் ஆகிய அறிஞர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியர்கள் மூவரில்,எஸ். நாராயணன், அரவிந்த் சுப்பிரமணியன் இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள். ரகுராம் ராஜன் மத்திய பிரதேசத்துக்காரர். எனினும் இவருடைய பூர்வீகம் தமிழகம்.

இந்த 5 பேருக்கும் வருடாந்திர சம்பளமாக பல கோடி ரூபாய் பேசபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் குழு பொருளாதாரம், சமூக கொள்கைகள், மனித மேம்பாடு தொடர்பான பிரச்சினைகளில் பொதுவான வழிகாட்டுதல்களை அரசுக்கு அளிக்கும். குறிப்பாக பெண்களுக்கு சமவாய்ப்பு மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான மேம்பாடு பற்றிய வழிகாட்டுதல்களை வழங்கும்.

பொருளாதார வளர்ச்சியை முடுக்கி விடுதல் வேலைவாய்ப்பு மற்றும் மாநில உற்பத்தி பற்றிய கருத்துகள், புதிய சிந்தனைகள், வளர்ச்சி தடைகளுக்கான தீர்வையும் வழங்கும். மாநில அரசின் நோக்கத்தை அடைவதற்கான செயல்பாடுகளை இந்த குழுவே தீர்மானிக்கும்.

சலுகை, இலவசங்களில் தாராளம் :

இதன்படி பார்த்தால் இந்தக் குழுவின் பரிந்துரைகளை முதலமைச்சர் ஸ்டாலின் அப்படியே நடைமுறைக்கு கொண்டு வருவார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழக அரசு அமைத்துள்ள இந்த பொருளாதார நிபுணர் குழு இருகோணங்களில் பார்க்கப்படுகிறது. பொதுவாகவே, தலைசிறந்த பொருளாதார வல்லுநர்கள் ஒரு அரசு தேவையற்ற செலவுகள் செய்வதை விரும்ப மாட்டார்கள். குறிப்பாக சலுகைகள், இலவசங்களை வாரி வழங்குவதை தவிர்க்கும்படி அறிவுறுத்துவார்கள்.

stalin cm - updatenews360

ஆனால் திமுக 10 வருடங்களாக அதிகாரத்தில் இல்லாததால், இம்முறை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தாராளமாக 50க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களில் பண உதவியை உயர்த்தி அறிவித்திருக்கிறது. தற்போது மாநில அரசுக்கு 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ள நிலையில் இந்த திட்டங்களையெல்லாம் நிறைவேற்றுவது கடினமான செயலாகவே இருக்கும்.

முக்கிய திட்டங்களுக்கு வாய்ப்பில்லை

அதனால்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்த திமுகவால் அதை உடனடியாக நிறைவேற்ற முடியவில்லை. இதேபோல்தான் உள்ளூர் பஸ்களில் பெண்கள் அனைவரும் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த பின் குறிப்பிட்ட பஸ்களுக்கு மட்டுமே அனுமதி செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாகவே குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உரிமைத் தொகை 1000 ரூபாய், சிலிண்டர் மானியம் 100 ரூபாய் போன்ற வாக்குறுதிகளும் இப்போதைக்கு நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை. மேலும் ஒவ்வொரு நலத் திட்டத்திலும் போலி பயனாளிகள் ஊடுருவுவதை தடுக்கும்படி பொருளாதார நிபுணர்கள் குழு வலியுறுத்தும். ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு
6000 ரூபாய் வழங்கும் பிரதமரின் மத்திய திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு பல ஆயிரக்கணக்கான போலி பயனாளிகள் 150 கோடி ரூபாய்க்கும் மேலான மோசடியில் ஈடுபட்டனர். இது கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. இதுபோன்ற நலத் திட்டங்களில் ஆயிரக்கணக்கான போலி பயனாளிகள் இருப்பார்கள். அவர்களை கண்டுபிடித்து நீக்கும்படி திமுக அரசுக்கு பொருளாதார வல்லுனர்கள் குழு ஆலோசனை வழங்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

தமிழகத்தில் உள்ள 83 பொதுத்துறை நிறுவனங்களில் 60-க்கும் மேற்பட்டவை நஷ்டத்தில் செயல்படுகின்றன. இவற்றின் மொத்த கடன் சுமை ஏறக்குறைய 3 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதை குறைக்கவேண்டும் என்று இந்த குழு நிச்சயம் ஆலோசனை வழங்கவும் வாய்ப்பு உள்ளது.

அண்மையில், அரசு கொடுத்த 4000 ரூபாய் கொரோனா கால நிவாரண நிதியை சுமார் 2 கோடியே 14 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் வாங்கியுள்ளனர். இந்த பணத்தை பை நிறைய சம்பளம் வாங்கும் மாநில அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணக்காரர்கள் என சுமார்
30 லட்சம் பேர் வரை பெற்று இருக்கிறார்கள்.

அரசுக்கு வருமான இழப்பு

இன்னொரு விதமான மோசடியாலும் தமிழக அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது.

TN Secretariat- Updatenews360

உதாரணத்திற்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் தனியார் கேபிள்களில் 8 லட்சத்து 25 ஆயிரம் சந்தாதாரர்கள் இருந்தனர். அரசு கேபிள் டிவி வந்த பிறகு அது 5 லட்சத்து 50 ஆயிரமாக குறைந்து போனது. அப்படியென்றால் மீதமுள்ள 2 லட்சத்து 75 ஆயிரம் சந்தாதாரர்கள் எப்படி திடீரென மாயமானார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஒரு கேபிள் இணைப்புக்கு 100 ரூபாய் என வைத்துக் கொண்டாலும் கூட மாதத்துக்கு 2 கோடியே 27 லட்சம் ரூபாய் ஒரு மாவட்டத்தில் மட்டும் சுருட்டப்படுகிறது.

வெளிமாநிலத்தவர்களுக்கு முக்கியத்துவம்

மற்றொரு பார்வை தமிழக அரசு நிபுணர்குழு பற்றியது.

இதுகுறித்து, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, “தமிழர் நலனுக்காக தொடங்கப்பட்ட கட்சிதான் திமுக. அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் போதெல்லாம் தமிழர் நலன் சார்ந்த வாக்குறுதிகள் ஏராளம் இருக்கும்.

இந்த தேர்தல் அறிக்கையிலும் கூட வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை,
தமிழகத்திலுள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்பு, தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக ஏற்க நடவடிக்கை. மிகச் சிறந்த தமிழ் நூல்கள் உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை திமுக அளித்துள்ளது.

இப்படி தமிழ், தமிழர்கள் முன்னேற்றம் என்று பேசும் திமுக கடந்த சில ஆண்டுகளாக, தமிழர்களின் திறமை மீது நம்பிக்கை வைக்காமல் வெளி மாநிலங்களைச் சேர்ந்த வல்லுனர்களையும், குறிப்பாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரையும் மட்டுமே தங்களின் செயல் திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகிறது. முன்பு அரசியல் ஆலோசகராக பீகார் மாநிலத்துக்காரர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இப்போது அமைத்துள்ள பொருளாதார வல்லுனர் குழுவில் உண்மையான தமிழர்கள் யாரும் இல்லை. இப்படி தமிழர்களை புறக்கணிப்பது வேதனைக்குரியது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட அல்லது பட்டியலின சமூகத்தில் இருந்து பொருளாதார வல்லுனர்கள் யாராவது ஒருவரை இக்குழுவில் சேர்த்திருக்கலாம்” என்று அவர்கள் ஆதங்கப்பட்டனர்.

Views: - 219

0

0