ராமேஸ்வரம் கோவிலில் தேய்மானத்தால் தான் நகைகள் எடை குறைவு…முறைகேடுகள் இல்லை: கோவில் நிர்வாகம் விளக்கம்..!

5 November 2020, 11:27 am
rameshwaram temple - updatenews360
Quick Share

ராமநாதசுவாமி கோவில் நகைகள், 40 ஆண்டுகால பயன்பாடு காரணமாக தேய்மானம் ஏற்பட்டு எடை குறைந்ததாகவும், முறைகேடு நடைபெற்றதாக கோவில் பணியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் நகைகள் 1978ம் ஆண்டில் மதிப்பிடப்பட்டதாகவும், அதன் பின்னர் கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை மறுமதிப்பீடு செய்யப்பட்டதாகவும் கோவிலின் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

மறுமதிப்பீட்டு அறிக்கையில், 18 வகையான தங்க நகைகளில் 68 கிராம்(8.5 சவரன்) எடை குறைவு, வெள்ளியில் 25,811 கிராம் எடை குறைவு, தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளியில் 43 கிராம் எடை குறைவு என மொத்த இழப்பு சுமார் ரூ.15 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நகைகள், பொருட்களை பொறுப்பில் வைத்திருந்த பணியாளர்களிடம் வசூல் செய்யலாம் என மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகைகளின் எண்ணிக்கை சரியாக உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவில் நிர்வாகம் இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, கடந்த மதிப்பீட்டிற்கும் மறுமதிப்பீட்டிற்கும் இடையே 40 ஆண்டுகால இடைவெளி உள்ள நிலையில், இந்த காலகட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள், பணியில் உள்ள 37 பேர் உள்பட 47 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், தேய்மானத்தினால் தான் எடை குறைந்திருக்குமே தவிர, முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேய்மான எடை குறைவுக்கான இழப்பினை ஏன் வசூல் செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டதாகவும், இது வழக்கமான நடைமுறை தான் என்றும் கோவில் இணை ஆணையர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் குருக்களின் நகை திருட்டை, எடை குறைவு என கோவில் நிர்வாகம் மறைப்பதாக சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் வெளியானதை தொடர்ந்து, கோவில் நிர்வாகம் இவ்வாறு விளக்கமளித்துள்ளது.

Views: - 29

0

0