வசமாக சிக்கும் பால் தினகரன்: 3 நாள் சோதனையை தொடர்ந்து நேரில் ஆஜராக வருமான வரித்துறை சம்மன்..!!

23 January 2021, 10:46 am
raid over - updatenews360
Quick Share

சென்னை: மதபோதகர் பால் தினகரனை விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

மதபோதகர் பால் தினகரன் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சோதனை நடத்தினார்கள். தற்போது வருமான வரி சோதனை நிறைவடைந்த நிலையில், அங்கு ரூ.120 கோடி மதிப்பிலான கணக்கில் வராத முதலீடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முதலீடுகள் பெரும்பாலும் வெளிநாட்டு முதலீடுகள் என தகவல் வெளியாகியுள்ளது. மத பிரசார கூட்டத்துக்கு வரும் வருவாய் கணக்கில் காட்டப்படாமல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பெறப்பட்ட நிதியை இங்கு கணக்கில் காட்டாமல் வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனைக்கு பால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் வருமான வரித்துறையினர் கூறினர். பால் தினகரனின் கணக்காளர்கள் மற்றும் ஆடிட்டர்கள் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.

இதனையடுத்து தற்போது கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது வருமான வரி சோதனை அடுத்தக்கட்ட விசாரணைக்கு சென்றுள்ளது. ரூ.120 கோடி அளவுக்கு கணக்கில் வராத முதலீடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பால் தினகரனை விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

பால் தினகரன் அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

Views: - 6

0

0