திருமா.,விடம் மைக்கை பிடுங்கி மேடையிலிருந்து கீழிறங்கச் சொன்ன நபர்… விசிகவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
7 September 2021, 6:14 pm
thiruma - updatenews360
Quick Share

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தி ‘146 BC, 115 MBC / DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் சென்னையில் உள்ள கிண்டியில் போராட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டார். அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும், இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார்.

அப்போது, யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் இந்தப் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர், திடீரென மேடையின் மேல் சென்று, திருமாவளவனின் கையில் இருந்த மைக்கை பிடிங்கினார்.

பிறகு, மைக்கில் பேசிய அந்த நபர், “எங்களின் சமூகத்தை பற்றி எங்களின் சமூகத்தைச் சேர்ந்தவரே பேச வேண்டும் என்று எங்களின் பொதுக் குழுவில் முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் ஒரு கட்சியில் இருக்கிறீர்கள் என்பதால், பொதுக் குழு கூட்டத்தின் முடிவுகள் பற்றி உங்களுக்கு தெரியும். எனவே, திருமாவளவனை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்,” எனக் கூறினார்.

இதனைக் கேட்ட திருமாவளவன் திடுக்கிட்டு போனார். இதையடுத்து, வேறு வழியின்றி அவர் மேடையில் இருந்து கீழே இறங்கி காருக்குச் சென்றார். அப்போது, அவரை சுற்றிலும் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அவரது கார் கதவை மூட விடாமல் தனது கோரிக்கையை கூற முயன்ற தொண்டரிடம், கதவை மூடுமாறு கடிந்து பேசினார்.

பின்னர், தன்னை அழைத்த திருமாவளவனிடம், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த குரல் கொடுங்கள் என்று அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்தார். அப்போது, மேடையில் இருந்து தன்னை கீழே இறங்கச் சொன்ன அந்த நபர் யார் என்று திருமாவளவன் கேட்டறிந்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற திருமாவளவனை, மேடையில் இருந்து கீழிறங்கச் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Views: - 559

0

0