இலவச டவுன் பஸ் பயணத்துக்கு சிக்கலா…? வெள்ளை அறிக்கையில் சுட்டிக் காட்டியது என்ன..? பரிதவிப்பில் தமிழகப் பெண்கள்…!

Author: Babu Lakshmanan
10 August 2021, 8:10 pm
Bus - white paper - updatenews360
Quick Share

கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில அரசு நாட்டிலேயே முதன் முதலாக 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண சலுகை திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு ஏப்ரல்1-ம் தேதி முதல் பஞ்சாப் மாநில அரசும் டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை தொடங்கி வைத்தது.

அதிகரித்த பெண்களின் பயணம்

2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உள்ளூர் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திமுக கூறியிருந்தது.

அதன்படி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த மறுநாளே அதாவது, மே 8-ந்தேதி முதல் இத்திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது.

நாளொன்றுக்கு சுமார் 28 லட்சம் பெண்கள் டவுன் பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்வதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. தேர்தலுக்கு முன்பு வரை டவுன் பஸ்களில், தமிழகம் முழுவதும் 16 லட்சம் பெண்களே தினமும் டவுன் பஸ்களில் பயணம் செய்து வந்தனர். தற்போது இது கிட்டத்தட்ட 75 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இலவச பயணத்திற்கு அனுமதிக்கப்படுவதால் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது, கண்கூடாகத் தெரிகிறது.

மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில் 22 ஆயிரத்து 500 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் டவுன் பஸ்கள் மட்டும் 10 ஆயிரம். சென்னை மாநகரத்தில் 3,439 டவுன் பஸ்களும், மாநிலத்தின் பிற பகுதிகளில், 6,640 டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன.

விரைவு, தாழ்தள சொகுசு பேருந்து, குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் தவிர அனைத்து வெள்ளை போர்டு பஸ்களிலும் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள முடியும். இந்தவகை வெள்ளை போர்டு பஸ்கள் சுமார் 4000 வரை தமிழ்நாட்டில் இயக்கப்படுகின்றன.

பேருந்துகளை இயக்குவதால் நஷ்டம்

இந்த நிலையில்தான், அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளும், பெண்களை அதிர்ச்சி அடையச் செய்யும் விதமாக ஒரு தகவல் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையில் காணப்பட்டது.

அதில், “மாநில போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும் பேருந்துகளின் சராசரி இயக்கச் செலவு ஒரு கிலோமீட்டருக்கு 96 ரூபாய் 75 காசு ஆகும். இதில் ஒரு கிலோ மீட்டருக்கு 59 ரூபாய் 15 காசு நஷ்டம் ஏற்படுகிறது.

PTR - updatenews360

2011-12-ம் ஆண்டில்,போக்குவரத்து கழகங்களின் ஒட்டுமொத்த இழப்பு 8761 கோடி ரூபாய். இது 2020-21ல் 42 ஆயிரத்து 143 கோடி ரூபாய். இதற்கு கட்டண உயர்வு இல்லாமல் டீசல் விலையில் அடிக்கடி திருத்தம் கொண்டு வந்தது, மேலாண்மை, செலவு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள், அதிக ஊழியர்கள், மற்றும் ஓய்வூதிய செலவு ஆகியவை காரணங்களாக உள்ளன” என்று கூறப்பட்டிருந்தது.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அரசின் தொலைதூர பஸ்களை விட,
டவுன் பஸ்களால் போக்குவரத்து கழகங்களுக்கு அதிக நஷ்டம் என்பதுதான்.

இன்னொரு விஷயத்தையும் நிதியமைச்சர் வெள்ளை அறிக்கையில் சூசகமாக குறிப்பிடுகிறார். அரசின் நலத்திட்டங்கள், பணப்பயன்கள் வசதி படைத்தவர்களுக்கும் பெரும் அளவில் சென்று சேர்கிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

இதனால் அரசு பஸ்களில் ஒரு கிலோமீட்டருக்கு ஏற்படும் பெரும் இழப்பு, கடந்த 3 மாதங்களில் டவுன் பஸ்களில் அதிக பெண்கள் பயணம், வசதி படைத்தவர்களும் சலுகைகளை அனுபவித்தல் ஆகிய மூன்றும் பெரும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. எனவே இலவச டவுன் பஸ் பயணத்தை தமிழக அரசு ரத்து செய்து விடுமோ என்று பெண்கள் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.

அமைச்சரின் நஷ்டக்கணக்கை நெட்டிசன்கள் கடுமையாக கேலி செய்தும் இருக்கின்றனர்.
“அப்புறம் என்ன எதுக்கு மகளிர்க்கு இலவச பேருந்து பயணம்னு அறிவிச்சீங்க? என்றும், அத கட் பண்ணத்தான் இந்த அறிக்கை எப்படின்னா….ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்…பூசாத மாதிரியும் இருக்கணும்” என்று கலாய்த்துள்ளனர்.

உடனே ரத்து செய்யப்படாது

இதுபற்றி அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் சிலர் கூறும்போது, “வெள்ளை அறிக்கையின் முடிவில், என்னுடைய கனவுகள் சாதாரண சீர்திருத்தங்கள் மூலமாக மட்டுமே சாத்தியம் ஆகிவிடாது. முழுமையான மாற்றம், அதிரடியான மாற்றம் மூலமாகத்தான் சாத்தியம் ஆகும் என்பதை அறிவேன் எத்தகைய மாற்றத்திற்கும் தயாராக தமிழக அரசு இருக்கிறது என்று நிதியமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கனவே தமிழக அரசு, போக்குவரத்து கழகங்களில் சீர்திருத்த நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. 3 வாரங்களுக்கு முன்பு அரசு பஸ்களில் ஆயுட்காலத்தை நீட்டி அறிவித்தது.

ஒரு பஸ்சின் அதிக பட்ச இயக்க காலம் 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என்று இருந்ததை இனிவரும் காலங்களில் 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்று அதிகரித்து உள்ளது. அதேபோல் அரசு விரைவு பஸ்கள் 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என்று இருந்ததை இனிவரும் காலங்களில் 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என்று மாற்றம் செய்து இருக்கிறது.

தமிழகம் முழுவதும் புதிய சாலைகள் போடப்பட்டு சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பம், வடிவமைப்பு கொண்ட பஸ்களும் விடப்பட்டுள்ளன என்று பஸ்களின் இயக்க காலத்தை அதிகரித்ததற்கு காரணம் கூறினாலும், நிர்வாக சீரமைப்பை தமிழகஅரசு தொடங்கி விட்டது என்பதுதான் உண்மை.

அதனால் அரசு போக்குவரத்து கழகங்களில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய பணிநியமனங்கள் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். புதிய பஸ்கள் வாங்குவதும் தள்ளிப்போகலாம்.

அதேபோல் சிக்கன மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளின் கீழ் டவுன் பஸ்களை அரசு இயக்க ஆரம்பித்தால் பணக்கார வீட்டு பெண்கள், அதிக சம்பளம் பெறும் மகளிர் போன்றோருக்கு இலவச டவுன் பஸ் பயண சலுகைகள் கிடைக்காத நிலையும் ஏற்படலாம். அதாவது நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் செய்வதற்கு அனுமதி அட்டை வழங்க வாய்ப்பு இருக்கிறது.

தற்போது அரசு போக்குவரத்து கழகங்கள் மாதமொன்றுக்கு 350 கோடி ரூபாயை நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அதாவது வருடத்துக்கு 4200 கோடி ரூபாய்.

மேலும் மகளிர், மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் போன்றோருக்கு அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் அனுமதிக்கப்படுவதால் ஆண்டொன்றுக்கு 1200 கோடி ரூபாய் கூடுதல் இழப்பு ஏற்படும் என்று அரசு கூறுகிறது. அப்படியென்றால் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இந்த நஷ்டத்தை தமிழக அரசு குறைக்கவே விரும்பும். எனவே அரசு பஸ்களில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும். பெண்களுக்கான டவுன் பஸ் பயணச் சலுகை உடனே ரத்து செய்யப்படமாட்டாது என்றாலும்கூட காலப்போக்கில் நடுத்தர வர்க்க மற்றும் ஏழைப்பெண்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கலாம்.

வழக்கமான நடைமுறை

3 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய அதிமுக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியபோது அதைக் கண்டித்து திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மாநிலம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்தன. இதனால் தமிழக அரசு கட்டணத்தை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இந்தப் போராட்டம் நடைபெறாமல் போயிருந்தால் அரசுக்கு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் ஏற்படும் இழப்பு ஓரளவிற்கு குறைக்கப்பட்டு இருக்கும்.

பெரும்பாலான மாநிலங்களில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பஸ் கட்டணத்தை உயர்த்துவது வழக்கமான நடைமுறையாக உள்ளது. இதனால் அந்த மாநில போக்குவரத்து கழகங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படுவதில்லை. தமிழக அரசும் இதை பின்பற்றவேண்டும். பணிமனைகளிலும் பெரும் நிர்வாக சீர்திருத்தம், கண்டிப்பு தேவை. அப்போதுதான் இழப்பை ஓரளவாவது சரிக்கட்ட முடியும்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.

Views: - 496

0

0