CM ஸ்டாலின் கண்முன்னே உதயநிதிக்கு டி.ஆர். பாலு எச்சரிக்கை : திமுகவில் சலசலப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2023, 5:21 pm
DMK - Updatenews360
Quick Share

திமுக எம்பி டி ஆர் பாலு, முதலமைச்சர் ஸ்டாலின் முன்பாகவே அவருடைய மகனும் அமைச்சருமான உதயநிதிக்கு சனாதன ஒழிப்பு விவகாரத்தில் அட்வைஸ் செய்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டும் இன்றி தேசிய அளவிலும் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக மாறிவிட்டது.

திமுக பொருளாளர் என்கிற முறையில் அதிகப்படியான உரிமையில் இப்படி பேசினாரா? அல்லது டெல்லியில் பல்வேறு கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதால், அக்கட்சி தலைவர்களின் எண்ணங்களை அவர் வெளிப்படுத்தினாரா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

டிஆர் பாலு பேச்சால் சலசலப்பு

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அமைச்சர் உதயநிதிக்கு திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி ஆர் பாலு உங்களது சனாதன ஒழிப்பு பேச்சால் நமது கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதற்கு காரணம் ஆகி விட்டீர்களே என்று மனக்குமுறலுடன் எச்சரிக்கை விடுத்திருப்பதாக பிரபல ஆங்கில ஊடகங்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டன. ஆனால் தமிழகத்தில் இது தொடர்பான செய்திகளை பெரும்பாலான நாளிதழ்களும், டிவி செய்தி சேனல்களும் வெளியிடவும் இல்லை கண்டுகொண்டதாக தெரியவும் இல்லை.

இரு தினங்களுக்கு முன்பு வேலூரில் நடந்த திமுக முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, துரைமுருகன், டி ஆர் பாலு எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் எப்போதும் போல் ஸ்டாலின் மத்திய பாஜக அரசை கடுமையாக கண்டித்து பேசினார். ஆனால் அவருடைய அனல் பறக்கும் உரையை காட்டிலும் டி ஆர் பாலு பேசியதுதான் உச்சம். அவர் தெரிவித்த கருத்துக்கள்
திமுகவினரை, குறிப்பாக திமுக இளைஞரணியினரை திடுக்கிட வைப்பதாகவும் இருந்தது.

உதயநிதிக்கு கடும் எச்சரிக்கை

டி ஆர் பாலு கூறும்போது “எனக்கு முன்னால் பேசிச் சென்ற இளைஞர் அணி செயலாளர் ரொம்ப அடக்கி வாசித்தார். அப்பாவாக இருந்தாலும் போட்டி என்று வந்து விட்டால் எதுவும் இருக்கக் கூடாது. அவர் கழகத் தலைவர். நீங்கள் இளைஞர் அணியில் இருந்து 10 அடி பாய வேண்டும். ஆனால் அவரில் 50 சதவீதம் செய்து காட்டுவோம் என அடக்கி வாசித்துள்ளார். 50 சதவீதம் என்றெல்லாம் போட்டியில் இருக்கக் கூடாது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதன்படி செய்ய வேண்டும். நீங்கள் எந்த அளவுக்கு பாய்வீர்கள் என சொல்ல வேண்டும். ஆனாலும் தன்னை தாழ்த்திக் கொண்டு உதயநிதி அவர்கள் இங்கே பேசியுள்ளார். ஆனாலும் மிக மிகப் பெரிய வெற்றியை அவர் பெறுவார் என நான் நம்புகிறேன்.

திமுக இவ்வளவு செய்த பிறகும் மக்கள் மாற்றி வாக்களிக்க மாட்டார்கள். ஆனாலும் தொண்டர்கள் தங்கள் பணியை செய்ய வேண்டும். ஒரு பக்கம் இளைஞரணி கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது.

இளைஞர் அணியை பார்த்தால் இந்தியாவே பயந்து கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள அத்தனை மாநில தலைவர்களும் நமது இளைஞரணி தலைவரை பார்த்து பயந்து கொண்டு இருக்கிறார்கள், அடுத்து என்ன செய்யப் போகிறார்களோ என்று. எல்லாம் பொறாமைதான் வேறொன்றும் கிடையாது. உதயநிதி அவரது அப்பாவை பார்த்தால் மட்டும்தான் பயப்படுகிறார் வேறு யாரைப் பார்த்தாலும் பயப்படுவது கிடையாது.

நான் தூக்கி வளர்த்த பிள்ளை

மேலும் அவர் என்ன வேண்டுமானாலும் பேசுகிறார். அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம். பேசிவிட்டு அதனை சமாளிக்கலாம் என்ற நினைப்பில் பேசுகிறார். ஆனால் தனது கையில் வைத்து கொண்டிருக்கிற பொருள் கீழே விழுந்து உடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் வைத்து கொண்டு மிகச்சிறப்பாக பணியாற்றுவது அவரது கடமை என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

ஏதோ சாதாரணமாக பேசுகிறார். உதயநிதி சொல்லாத வார்த்தைகளையும் அவர் சொன்னதாக திருத்திக் கூறுகிறார்கள். இண்டியா கூட்டணியில் உள்ளவர்களும் என்னிடம் இப்படி உதயநிதி பேசி விட்டாரே என கேட்கிறார்கள் அவர்களுக்கு நான் மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளேன். இதற்காக நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக மிக கவனமாக எடுத்து வைக்க வேண்டும் என்று அன்பு தம்பியின் மீது உள்ள பாசத்திற்காகவும் சிறு வயதில் இருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளை என்கிற காரணத்தினால் சொல்கிறேன். வெற்றிப்பாதையைத் தவிர நாம் வேறு எதையும் எண்ணக் கூடாது” என்று குறிப்பிட்டார்.

டி.ஆர். பாலுவின் இந்த பேச்சை கூர்ந்து கவனித்தால் சில உண்மைகள் புரியும். சனாதன ஒழிப்பு விவகாரத்தை உதயநிதி கையில் எடுத்ததால் இண்டியா கூட்டணியில் உள்ள பல கட்சிகளின் தலைவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி எனக்கும், திமுகவுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டீர்களே என்பதை அவர் வெளிப்படையாகவே போட்டு உடைத்தும் இருக்கிறார்.

வெளிப்படை எச்சரிக்கைக்கு காரணம்?

இது நாடாளுமன்றத் தேர்தலின் போது வட மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் வெற்றியை கடுமையாக பாதிக்கும் என்பதால் அவர்களின் யோசனையை ஏற்றுதான் இனி உதயநிதி சனாதன தர்ம ஒழிப்பு பற்றி எப்போதும் பேசக்கூடாது, திமுகவின் மற்ற தலைவர்களும் இதுகுறித்து வாயே திறக்கக் கூடாது என்று டி ஆர் பாலு எச்சரிக்கை செய்திருப்பது போல் தெரிகிறது.

அதேநேரம் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட திமுகவின் முப்பெரும் விழாவில்தான் இதை டி ஆர் பாலு பேச வேண்டுமா? தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் ஸ்டாலினிடமோ அல்லது உதயநிதியிடமோ கூறி இருக்கலாமே?… இப்போது வெளிப்படையாக உதயநிதிக்கு அட்வைஸ் செய்ததன் மூலம் சனாதனத்தை ஒழிப்பேன் என்று அவர் பேசியதை கண்டிப்பது போல் அல்லவா இருக்கிறது என திமுக இளைஞர் அணியினர் மனதுக்குள் பொருமும் நிலையையும் இது ஏற்படுத்தி விட்டது.

“ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினின் அனுமதியின்றி டி ஆர் பாலு இப்படி திமுக விழாவில் பேசி இருக்க வாய்ப்பே இல்லை” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

28 கட்சிகளில் பிரதிபலிப்பா?

“ஏனென்றால் உதயநிதியின் சனாதன தர்ம ஒழிப்பு பேச்சை காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் வெளிப்படையாகவே கண்டித்தன. சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் போன்றவை இதுவரை கண்டனம் தெரிவிக்க விட்டாலும் கூட திமுக மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் எல்லாம் டெல்லி அரசியலில் என்ன நடக்கிறது என்பதை திமுக சார்பில் கண்காணித்துக் கொண்டிருக்கும் டி ஆர் பாலுவுக்கு தெரியாதது அல்ல. அதனால்தான் 28 எதிர்க் கட்சிகளின் உணர்வுகளை பிரதிபலிப்பது போல் திமுக மேடையில் அவர் பகிரங்கமாக பேசியிருக்கிறார்.

தனது பேச்சின் ஆரம்பத்திலேயே உதயநிதியை எச்சரித்தால் அது திமுகவினரிடையே எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால் முதலில் இளைஞரணி செயலாளர் என்கிற முறையில் அவருடைய செயல்பாடுகளை வெகுவாக புகழ்ந்து விட்டு பிற்பகுதியில் இண்டியா கூட்டணி கட்சிகளின் மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக
மனம் நொந்து அவர் பேசியிருப்பதையும் பார்க்க முடிகிறது.

முதலமைச்சர் சார்பாக ஒலித்த குரல்?

உதயநிதி பாட்டுக்கு என்ன வேணாலும் பேசுகிறார். என்ன வேண்டுமானாலும் பேசலாம், பேசிவிட்டு சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைப்பில் அவர் பேசுகிறார். ஆனால் தனது கையிலே வைத்துக் கொண்டிருக்கக் கூடிய பொருள் கீழே விழுந்து உடைந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தையும் மனதில் வைத்துக்கொண்டு மிகச் சிறப்பாக பணியாற்றுவது அவரது கடமை என்பதை நான் எச்சரிக்க விரும்புகிறேன் என்று அதிரடியாக கூறியிருப்பதன் மூலம் சனாதன தர்ம ஒழிப்பு பேச்சை திமுகவினர் யாரும் தேர்தல் பிரசார ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டு விடாதீர்கள். அது நமக்கு மட்டுமல்ல, இண்டியா கூட்டணிக்கே ஆபத்தாய் முடிந்து விடும் என்பதையும் டி ஆர் பாலு சுட்டிக் காண்பித்து இருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலினே இதை சொல்லி இருக்கலாமே என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையாக வெடித்தபோது உதயநிதி பேசியதில் எந்த தவறும் இல்லை என்று அவருக்கு ஆதரவாக ஸ்டாலினும் கருத்து தெரிவித்திருந்தார். அதனால் தான் டி ஆர் பாலுவை வைத்து இனி திமுகவில் யாரும் சனாதன தர்ம ஒழிப்பு விவகாரம் பற்றி பேச வேண்டாம் என்பதை மறைமுகமாக
வேண்டுகோளாக வைத்திருக்கிறார்.

என்றபோதிலும் உதயநிதியால் கிளப்பி விடப்பட்ட சனாதன தர்ம ஒழிப்பு விவகாரம் வடமாநிலங்களில் இன்னும் தணிந்ததாக தெரியவில்லை” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதிலும் உண்மை இருக்கவே செய்கிறது!

Views: - 231

0

0