உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கொடுத்த வாக்குறுதி… ஜன.,19 வரை போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்ற போக்குவரத்து ஊழியர்கள்…!!

Author: Babu Lakshmanan
10 January 2024, 4:13 pm
Quick Share

ஜன.,19ம் தேதி வரை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கின. மறுநாளே அண்ணா தொழிற்சங்கப் பேரவை தலைமையில் இயங்கும் கூட்டமைப்பு சார்பிலும் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அடுத்தடுத்து நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், அறிவித்தபடி நேற்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கத்தன் ஊழியர்கள் மற்றும் மாற்று ஓட்டுநர்களை வைத்து அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இருப்பினும், 100 சதவீத பேருந்துகளை இயக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தம் பொதுமக்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. எனவே, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இதனிடையே, 2வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வரும் நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தை இன்று முற்றுகையிட இருப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. மேலும், மதுரை, திருச்சி உள்ளிட்ட பணிமனைகளின் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்த நிலையில், ஜன.,19ம் தேதி வரை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஓய்வூதியதாரர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்குன அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், பண்டிகை நேரத்தில் போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் கூறுவதாகவும், வேலைநிறுத்தத்தால்
நகரத்தில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும் கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் என தலைமை நீதிபதி அமர்வு கூறினர்.

தமிழகத்தின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்..? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியதுடன், ஜனவரி மாத பண பலன்களை அளிக்க முடியுமா..? அரசிடம் கேட்டு சொல்லுமாறு அரசு கூடுதல்தலை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரனுக்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்தது. பொங்கல் நேரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய தமிழக அரசு, பொருளாதார நெருக்கடி காரணமாகவே தற்போது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.

தமிழக அரசின் இந்த உறுதியை தொடர்ந்து, ஜன.,19ம் தேதி வரை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் ஜனவரி 19ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், 6 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும், 2 கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இந்த நிலையில், 19ம் நடக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், ஜனவரி 20ம் தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்தம் நடைபெறும் என் அண்ணா தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

Views: - 195

0

0