ராஜீவ் நினைவிடத்தில் பெண் விடுதலைப்புலிக்கு அஞ்சலி? சர்ச்சையில் சிக்கிய தமிழக உளவுத்துறை!

Author: Rajesh
1 September 2023, 10:41 pm
Quick Share

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி
தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் இரவு 10 மணி அளவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பெண் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த உலகையே உலுக்கியது.

உலகையே உலுக்கிய ஸ்ரீபெரும்புதூர் சம்பவம்

இதில் அந்த இடத்திலேயே 18 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர நிகழ்வை நடத்தியது இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெண் புலியான தனு என்ற மனித வெடிகுண்டு ஆவார்.

இந்த துயர நிகழ்வு நடந்து 32 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதுபற்றிய நினைவலைகள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா மூவரை மட்டுமின்றி இன்றளவும் இந்திய மக்களை வேதனைப்பட வைக்கும் ஆறாத ரணமாகவே உள்ளது. குறிப்பாக தமிழக மக்களுக்கு இச் சம்பவம் காலமெல்லாம் மனதில் பசுமையாக நிலைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பெண் விடுதலைப்புலிக்கு அஞ்சலி

இந்த நிலையில்தான் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் மரியாதை செய்ய வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து முன்பு தீவிரமாக செயல்பட்டவர்களில் ஒருவரும், தற்போது இலங்கை யாழ்ப்பாணத்தில் ஜனநாயக போராளிகள் கட்சி என்ற இயக்கத்தை நடத்தி வருபவருமான துளசி அமரன், ராஜீவ் காந்தியை படுகொலை செய்த விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண் தனுவுக்கு அஞ்சலி செலுத்தி சென்றதாக வெளியாகியுள்ள ஒரு தகவல் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்திருந்த துளசி அமரன் கடந்த மாதம் 20-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கும் சென்றுள்ளார். அன்று ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு ஏராளமான காங்கிரசாரும் ராஜீவுக்கு மரியாதை செய்வதற்காக கூடியிருந்தனர்.

அப்போது சிலருடன் வந்த துளசி அமரன் ராஜீவ் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு இலங்கைக்கு திரும்பிய பின்னர் தனது சமூக ஊடக பக்கத்தில் அது பற்றிய செய்தி ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

ராஜீவ் நினைவிடத்தில் பெண் தனுவுக்கு அஞ்சலி

அதுதான் இப்போது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டு இருக்கிறது. துளசி அமரன் வெளியிட்ட அந்த பதிவில், “ஸ்ரீபெரும்புதூரில் உயிர் நீத்த அனைவருக்கும் 32 ஆண்டுகளின் பின்னர் போராளிகளால் மலர் வணக்கம் செய்யப்பட்டது” என்றும், இன்னொரு பதிவில் “1991 மே 21ம் தேதி வீர மரணமடைந்த தனு அக்காவுக்காக ராஜீவ் நினைவிடத்தில் மலரஞ்சலி செய்தேன். தனு அக்கா ஸ்ரீபெரும்புதூரில் தன் உயிரை இழந்தார். ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது” என்று பகிரங்கமாக குறிப்பிட்டும் இருக்கிறார்.

அது மட்டுமல்ல ராஜீவ் நினைவிடத்தில் அவர் மலர் தூவும் புகைப்படத்தையும் வெளியிட்டும் இருந்தார். அந்தப் படத்தில் அவர் அருகில் ஒரு பெண்மணியும் நின்று கொண்டிருப்பது தெரிகிறது.

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரான துளசி அமரன் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், அரசியல் ரீதியாக ஆதாயம் அடைவதற்காகவும் இதுபோல நடந்து கொண்டிருக்கிறார் என்று யாழ்ப்பாண பகுதி அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறுகின்றனர்.

என்றபோதிலும் இந்தப் புகைப்படமும், சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்ட தகவலும்தான் தமிழக காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது.

செயலிழந்து போன தமிழக உளவுத்துறை

அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் இது தொடர்பாக மனம் நொந்து கூறும்போது,”தமிழகத்தில் மாநில உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்து விட்டது. உளவுத்துறை அதிகாரிகள் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்வதில் மட்டுமே குறியாக இருக்கிறார்களே தவிர அவர்கள் பணி சார்ந்த எதையும் உருப்படியாக செய்வதில்லை. இலங்கையை சேர்ந்த விடுதலை போராளிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் தமிழகத்துக்கு வருகிறார். அதுவும் அவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்திற்கு செல்கிறார் என்றால் எதற்காக போகிறார் என்பதை உளவுத்துறை அதிகாரிகள் மோப்பம் பிடித்து இருக்க வேண்டாமா?…இதில் அதிகாரிகள் கோட்டை விட்டு விட்டனர்.

ராஜீவ் கொலை கைதிகளான பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதற்கு திமுக அரசு தீவிர ஆர்வம் காட்டிய போதே காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு காட்டி இருந்தால் இன்று ராஜீவ் நினைவிடத்திலேயே இலங்கை போராளிகள் குழுவை சேர்ந்த ஒரு தலைவர் இங்கு வந்து துணிச்சலாக தனுவுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு செல்லும் நிலைமை ஏற்பட்டு இருக்காது. அல்லது முதலமைச்சர் ஸ்டாலின், பேரறிவாளனை வரவழைத்து அவருக்கு தேநீர் விருந்து கொடுத்து உபசரித்தையாவது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கண்டித்திருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யத் தவறியதால்தான் இப்போது இந்த மாதிரியான ஒரு அவலம் நிகழ்ந்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிந்தே நடந்ததா?

இது திமுக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தெரிந்து நடந்ததா? தெரியாமல் நடந்ததா? என்பதைப் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் உயிருக்கு உயிராக மதித்த, நேசித்த இந்த தேசத்துக்காக தன் உயிரை அர்ப்பணித்த ஒரு தலைவருக்கு இதைவிட வேறு அவமானம் எதுவும் இருக்க முடியாது. ராஜீவை கொன்றவர்களுக்கு நேசக்கரம் நீட்டும் கட்சியுடன் காங்கிரஸ் உடனடியாக உறவை முறித்துக் கொள்ளவேண்டும்” என்று அந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மனம் குமுறுகின்றனர்.

துளசி அமரனின் இந்த பதிவுகளை பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், தனது சமூக ஊடக பக்கத்தில் புகைப்படத்துடன் இணைத்து வெளியிட்டதுடன், அதை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ஜோதிமணி எம்பி, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக ‘டேக்’ செய்தும் இருக்கிறார்.

இத பத்தி உங்க கருத்து என்ன? என்று அவர்களிடம் நெற்றியடி கேள்வியும் எழுப்பி இருப்பதுதான் இதில் ஹைலைட்.

Views: - 246

0

0