92 முறை ஆட்சியை கலைத்தது காங்கிரஸ்… பாஜக ஆட்சியில் ஒருமுறையாவது நடந்தது உண்டா…? அண்ணாமலை பரபர பேச்சு..!!

Author: Babu Lakshmanan
6 November 2023, 12:00 pm
Quick Share

மோடி மீது தி.மு.க குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால் தமிழை திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைய்யுங்கள் என்றும், இந்தியை திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைக்க வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பாஜக சார்பில் என் மண் – என் மக்கள் எனும் பாதயாத்திரை நிகழ்ச்சி பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. கோவில்பட்டி சாலையில் தொடங்கி பேருந்து நிலையம் அருகே வரை நடைபெற்ற யாத்திரைக்கு பின் அண்ணாமலை வேனில் நின்று பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது :- 2011ல் காங்கிரசும், கூட்டணியில் இருந்த தி.மு.கவும் ஆட்சியில் இருந்தபோது ஜல்லிக்கட்டை காட்டு மிராண்டி விளையாட்டு என்று சொன்னார்கள். அப்போது, அமைச்சர் ஜெயராம் ரமேஷ் சொன்னார். ஆனால், மீண்டும் இப்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு காரணம் நரேந்திரமோடி மட்டும் தான். சமீபத்தில் ஜல்லிக்கட்டு எதிராக தொடரப்பட்ட சில வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு இனி வராது என்றால் அதை உருவாக்கி கொடுத்தவர் பிரதமர் மோடி.

மத்திய அரசு இந்தியை திணிக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். மோடி இந்தியை திணிக்கிறாரா? பிரதமர் நரேந்திர மோடி மீது தி.மு.க குற்றச்சாட்டு வைப்பதாக இருந்தால் தமிழை திணிக்கிறார் என்று குற்றச்சாட்டு வைய்யுங்கள். ஐநா சபையில் தமிழில் மோடி பேசுகிறார். திருக்குறளை 100 மொழியில் மொழிப்பெயர்த்து வெளியிட வேண்டும் என்று விரும்புகிறார், எங்கு சென்றாலும் மகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றி பேசுகிறார், செம்மொழி ஆய்வு நிறுவனம் உருவாக்குகிறார்.

காசி தமிழ் சங்கம் உருவாக்கி உள்ளார், நம் பாரம்பறிய சின்னமான செங்கோலை பாராளுமன்றத்தின் மையக்கட்டிடத்தில் வைக்கிறார், சௌராஷ்ட்ரா தமிழ் சங்கம் வைக்கிறார். இந்தியாவின் எந்த மொழிக்கும் எந்த கலாச்சாரத்திற்கும் கொடுக்கப்படாத மரியாதையை கடந்த 9 ஆண்டுகளாக பாரத பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழக கலாச்சாரத்திற்கும் கொடுத்துள்ளார். மோடி மீது தி.மு.க குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால் தமிழை திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைய்யுங்கள்.

இந்தியை திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைக்க வேண்டாம். இந்திய மக்களை வறுமைகோட்டில் வைத்திருந்தது தான் காங்கிரஸ் ஆட்சி. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 10 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு விட்டது. அந்த தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் தீபாவளிக்கு முன் ஊதியம் வந்து விடும். இந்தியாவில் 92 முறை ஆட்சியை கலைத்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சிகாலத்தில் ஒருமுறையாவது எங்காவது ஆட்சி கலைப்பு நடந்தது உண்டா? யார் சர்வாதிகாரி. தமிழகத்தில் காவல்துறையை வைத்து சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறது இந்த அரசு என்று கூறினார்.

முன்னதாக, நடைப்பயணத்தின் போது காமராஜர் சிலை அருகே உள்ள ஒரு கடைக்கு சென்ற அண்ணாமலை அங்கு முறுக்கு சுட்டார். மாவை பிழிந்து எண்ணெனையில் போட்டு முறுக்கு சுட்ட அண்ணாமலை பின்னர் முறுக்கை சுவைத்தும் பார்த்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Views: - 331

0

0