புதிய அமெரிக்க அதிபர் யார்? காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவை எதிர்ப்பவரா? இந்தியர்களின் டாலர் கனவை கலைப்பவரா?

3 November 2020, 6:00 pm
Trump - joe biden - updaenews360
Quick Share

சென்னை: அமெரிக்கத் தேர்தலில் முடிவுகள் நவம்பர் 4-ஆம் தேதி வெளிவரவிருக்கும் நிலையில் யார் வெற்றிபெற்றாலும் இந்தியாவுடன் பொருளாதார வர்த்தக உறவுகள் பெரிதளவு மாறாது. ஆனால், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வென்றால் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச அரங்குகளில் பேசும் வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் இந்தியர்களுக்கு எச் 1 விசா கிடைப்பதிலும் வேலை கிடைப்பதிலும் தடைகள் இருக்காது என்று கருதப்படுகிறது.

தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட நட்பு சிறப்பாக இருப்பதால், காஷ்மீர் பிரச்சினை குறித்து அவர் எதுவும் பேசவில்லை. ஆனால், அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் எச் 1 விசா பெறுவதற்கு விதிமுறைகள் கடுமையாகும் என்பதால் இந்தியர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

Donald_Trump_UpdateNews360

இந்திய இளைஞர்களின் டாலர் கனவுகளைத் தூண்டும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு அமெரிக்கா. உலகப்பொருளாதரத்திலும், பாதுகாப்புத்துறையிலும் சர்வதேச அரசியலிலும் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின் அரசியல் முடிவுகள், ஒருவகையில் உலக அரசியலில் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கும் முக்கிய நிகழ்வாகும்.

ஒவ்வொரு நான்கு ஆண்டுகள் இடைவெளியிலும் நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் ‘சூப்பர் ட்யூஸ்டே’ (சிறப்புமிக்க செவ்வாய்) என்ற அழைக்கப்படும். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் இந்த நாளில் நடைபெறுவதே இதற்குக் காரணமாகும். தற்போது அமெரிக்காவில் வாக்கெடுப்பு நடந்துவருகிறது. தற்போதைய ஜனாதிபதியும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் ஒரு புறமும் ஜனநாயகக்கட்சி சார்பாக ஜோ பைடனும் களத்தில் இருக்கிறார்கள்.

trumph and joe - updatenews360

ட்ரம்ப் சார்ந்திருக்கும் குடியரசுக் கட்சி பெருமுதலாளிக் கட்சியாகக் கருதப்படுகிறது. யானையை சின்னமாகக் கொண்ட அந்தக்கட்சி, அரசியலில் வெள்ளையர் ஆதிக்கத்தையும், கிறித்துவம் மதம் சார்ந்த போக்கையும், உலக அரசியலில் தீவிரமான இராணுவத் தீர்வுகளை முன்னெடுக்கும் கட்சியாகவும் பார்க்கப்படுகிறது.

அதை எதிர்த்து கழுதை சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயகக்கட்சி சிறுமுதலாளிகளின் கட்சியாகப் பார்க்கப்படுகிறது. இது அரசியலில் கறுப்பர்களையும், இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய மக்களையும் அரவணைத்துச்செல்லும் கட்சியாகவும் இருக்கிறது. அரசு என்ற முறையில் எந்த மதத்தையும் சாராத போக்கையும், இராணுவத் தீர்வுகளில் சற்று தீவிரம் குறைந்ததாகவும், உலகம் எங்கும் மனித உரிமைகளையும் அனைத்து மக்களின் அரசியல் உரிமைகளையும் மனித உரிமைகளையும் ஆதரிக்கும் கட்சியாகவும் இருக்கிறது. இந்த அரசியல் கட்சிகளைத்தவிர வேறு சில கட்சிகள் இருந்தாலும் முக்கியப் போட்டி குடியரசுக் கட்சிக்கும், ஜனநாயகக் கட்சிக்கும் இடையேதான்.

முதலாளித்துவக் கொள்கைகளை ஆதரிப்பதிலும், கம்யூனிஸ்ட் எதிர்ப்பிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும், சீன எதிர்ப்பிலும், வெளியுறவுக் கொள்கைகளிலும், இருகட்சிகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரு கட்சிகளும் இந்தியாவுடன் வர்த்தகப் பொருளாதார உறவுகளை முக்கியமாகவே கருதுகின்றனர்.

Modi_Trump_UpdateNews360

தற்போதைய ஜனாதிபதி ட்ரம்பும், இந்தியப் பிரதமர் மோடியும் இணைந்து அமெரிக்காவில் ‘ஹௌடி மோடி’ என்ற நிகழ்ச்சியை நடத்தியபோது, அவருக்கு ஆதரவாக அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் இலட்சக்கணக்கில் திரண்டார்கள். பாரம்பர்யமாக ட்ரம்புக்கு எதிரான ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களான இந்தியர்கள் மோடிக்கு ட்ரம்புக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட நட்பால் ட்ரம்புக்கு ஆதரவாக சாய்ந்தார்கள்.

இந்தியாவுக்கு வருகை தந்த ட்ரம்புக்கு குஜராத்தில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களைப் ட்ரம்பிடம் கேட்டபோது கருத்துக்கூற மறுத்துவிட்டார். மேலும், இந்திய அரசு காஷ்மீருக்கான சிறப்புப் பாதுகாப்பு சட்டமான 370-வது பிரிவை நீக்கியது குறித்தும் இந்தியக்குடியுரிமை சட்டத்தில் திருத்தம் குறித்தும் கருத்துக் கூறவில்லை.

இதற்கு மாறாக ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள், இந்தியா அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை எதிர்த்தனர். குடியுரிமைச் சட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்பட்டிருக்கும் ஜோ பைடனும், துணை ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸும் இதே கருத்தையே கொண்டவர்கள். எனவே, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் அமெரிக்கத் தேர்தலில் வெற்றிபெற்றால் தற்போதைய இந்திய அரசுடன், காஷ்மீர் பிரச்சினையிலும் குடியுரிமை சட்டத்திலும் காஷ்மீரில் மனித உரிமைப் பிரச்சினைகளிலும் அமெரிக்கா வேறுபடும். சர்வதேச அரங்குகளில் இந்தியாவுக்கு எதிராக ஜோ பைடன் செயல்படுவார்.

trump-biden_UpdateNews360

ஆனாலும், அமெரிக்காவில் அனைத்து இனத்தவரும், நாட்டவரும் சுதந்திரமாகத் தொழில் செய்யவும் வேலை பார்க்கவும் உரிமைகளைத் தரும் ஆட்சியாக ஜோ பைடனின் ஆட்சி இருக்கும். இந்தியர்கள் எச் 1 விசா பெறுவதிலும் வேலைவாய்ப்பு பெறுவதிலும் பிரச்சினைகள் எழாது.

மேலும், அமெரிக்காவில் ஜனநாயகக்கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான், இலங்கைத் தமிழர் படுகொலைக்கு எதிராக ஐநா மனித உரிமை மன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே, சர்வதேச அரங்குகளில் இலங்கைத் தமிழர் பிரச்சினை எதிரொலிக்கும்போது, ஜனநாயககட்சி அதை ஆதரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
டொனால்ட் ட்ரம்ப் எச் 1 விசா தருவதற்குப் பெரும் கட்டுப்பாடுகளை விதிப்பதில் தீவிரமாக இருக்கிறார். அமெரிக்கா என்பது அங்குள்ள வெள்ளையர்களின் நாடு என்று அவர் கருதுகிறார். பிற நாட்டவர் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளைப் பறிக்கக்கூடாது என்று அவர் கூறிவருகிறார். குறைந்தது 120 ஆயிரம் டாலர் சம்பளத்துக்கு வேலைக்கு ஆள் எடுப்பதாக இருந்தால் மட்டும் அவர்களுக்கு எச் 1 விசா வழங்கலாம் என்று ட்ரம்ப் கூறுகிறார். ஆனால், அமெரிக்க முதலாளிகள் குறைந்த சம்பளத்துக்கு இந்தியர்கள் வேலைக்கு வருவார்கள் என்பதால்தான் இந்தியர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள் என்ற நிலையில், இந்தக் கட்டுப்பாட்டால் பெரும்பாலான இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, ட்ரம்ப் வெற்றிபெற்றால் காஷ்மீர் பிரச்சினையில் இந்திய அரசுக்கு எதிராகப் பேசாவிட்டாலும் இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை பெறுவதற்குத் தடையாக இருப்பார்.

ஆனால், இரு கட்சிகளும் சீனாவுக்கு எதிரான இந்தியாவின் வர்த்தப்போரில் இந்தியாவுக்குத் துணை நிற்பார்கள். சீனாவுக்குச் செல்லும் பொருளாதார முதலீடுகளை இந்தியா பெறுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து துணைநிற்கும். இராணுவ ஒத்துழைப்பிலும் தெற்காசியாவில் புவிசார் அரசியலிலும் யார் வெற்றிபெற்றாலும் அமெரிக்காவின் ஆதரவு தொடரும். சீனாவுக்கு எதிரான வல்லரசாக இந்தியாவை தெற்கு ஆசியப் பகுதியில் அமெரிக்கா ஆதரிப்பதில் எந்தவித மாற்றமும் இருக்காது. யார் வெல்லப்போகிறார்கள் என்பது நவம்பர் 4-ஆம் தேதி தெரிந்துவிடும்.
ட்ரம்ப் தோல்வி அடைந்தால் அதை ஏற்கமாட்டேன் என்று ஏற்கனவே மறைமுகமாகக் கூறியிருக்கிறார். அதனால், எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமில்லாத வகையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டிய தேவை ஜோ பைடனுக்கு இருக்கிறது.

Views: - 0

0

0