2022 உ.பி. தேர்தல் எதிரொலி… அயோத்தியில் புகுந்த அரசியல்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் காங்.,!!

15 June 2021, 5:45 pm
Quick Share

135 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோர்ட்டுகளில் அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கு நடந்தது.

ராமஜென்ம பூமி-பாபர் மசூதி

இந்த விவகாரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி இறுதி தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர்கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் முஸ்லிம்களுக்கு தனி இடத்தில் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ayodhya ramar temple 3 - updatenews360

இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டவும் செய்தார்.

சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் பணிகள் 36 முதல் 40 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த கணக்கின்படி பார்த்தால் 2023-ம் ஆண்டு இறுதிக்குள் கோவிலைக் கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

இறுதித் தீர்ப்பின்போது சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியவாறு, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்னும் அறக்கட்டளை மத்திய அரசால் நிறுவப்பட்டு கோவில் கட்டுமான பணிகள் மேற்பார்வையிடப்பட்டு வருகிறது.

1,100 கோடிக்கு மேல் செலவு :

இந்த அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் கூறும்போது,
“பிரதான கோவிலின் கட்டுமானம் மூன்றரை ஆண்டுகளில் நிறைவடையும், இதற்கு 300-400 கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 70 ஏக்கர் நிலத்தை அபிவிருத்தி செய்ய 1,100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு பிடிக்கும்” என்று தெரிவித்தார். 

பாஜக தனது தேர்தல் அறிக்கையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை தேர்தல் வாக்குறுதியாக தொடர்ந்து அளித்து வந்துள்ளது. இதனால் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடப்பதற்குள் ராமர் கோவிலை கட்டி முடித்து விடவேண்டும் என்பதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தீவிரமாக உள்ளது.

pm modi - updatenews360

பாஜக மாஸ்டர் பிளான் :

அதேபோல் உத்தரபிரதேச சட்டப் பேரவைக்கு 2022 மார்ச் வாக்கில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் நடப்பதற்குள் 50 சதவீத கட்டுமான பணிகளையாவது முடித்துவிட வேண்டும் என்று உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விரும்புகிறார். அப்போதுதான் தேர்தலை சந்திப்பதற்கு அது உதவியாக இருக்கும் என்று பாஜக மேலிடமும் நம்புகிறது.

இந்த இரு தேர்தல்களையும் எதிர்கொள்ளும் விதமாகவே அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளில் மத்திய பாஜக அரசு மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது.

அதேநேரம், உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றி விடாமல் தடுக்க மாநிலத்தின் பிரதான கட்சியான முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடியும், காங்கிரசும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. உ.பி. சட்டப் பேரவை தேர்தலில் தோற்று விட்டால் மத்தியில் 3-வது முறையாக தொடர்ந்து பாஜக ஆட்சியை பிடித்து விடும் என்று சமாஜ்வாடி கருதுவதால், இந்த இரு கட்சிகளும் சமீபகாலமாக ஒரே குரலில் பேசி வருகின்றன.

நிலம் வாங்கியதில் ஊழலா..?

இந்த நிலையில்தான் ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மீது குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

அயோத்தியில் ஏற்கனவே உள்ள குழந்தை ராமர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை விரிவுபடுத்துவதற்காக அறக்கட்டளை சார்பில் நிலம் வாங்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் வீடுகளும் சிறு கோவில்களும் உள்ளன. அங்கு வசிப்பவர்களை மாற்று இடத்திற்கு குடியமர்த்த க பாக்பிஜைசி என்னுமிடத்தில் 12 ஆயிரத்து 80 சதுர மீட்டர் நிலம் வாங்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளும் வைக்கும் குற்றச்சாட்டில், “இந்த நிலத்தை ரவி திவாரி, சுல்தான் அன்சாரி என்பவர்களிடமிருந்து கடந்த மார்ச் மாதம் ராமர் கோவில் அறக்கட்டளையின் சார்பில் 18.5 கோடி ரூபாய்க்கு அதன் உறுப்பினர்களான அனில் மிஸ்ரா, ரிஷிகேஷ் உபாத்யாய் இருவரும் வாங்கியுள்ளனர். இவர்கள் இந்த நிலத்தை வாங்குவதற்கு சில நிமிடங்கள் முன்புதான் குசும் பதக் என்பவரிடமிருந்து 2 கோடி ரூபாய்க்கு ரவி திவாரியும், சுல்தான் அன்சாரியும் வாங்கி இருக்கிறார்கள். அந்த நிலத்தின் மதிப்பு ஒரு சில நிமிடங்களில் எப்படி 18.5 கோடி ரூபாயாக அதிகரித்தது? எனவே இதில் பெருமளவில் ஊழல் நடந்திருக்கிறது இதை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணை செய்யவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை செயலாளர் சம்பாத் ராய், “சம்பந்தப்பட்ட நிலத்திற்கு 2 கோடியே 16 லட்சம் ரூபாய் விலை என்ற அடிப்படையில் 2017-ம் ஆண்டு முதல் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்காக 92 லட்சம் ரூபாய் முன்பணமும் கொடுக்கப்பட்டது. அப்போது ராமர் கோவில் கட்டுவதற்கான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியாகவில்லை. 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி தான் தீர்ப்பு வெளிவந்தது. அதன்பிறகு நிலத்தின் மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் ஏறக்குறைய 10 மடங்கு அதிகமாகிவிட்டது.

நிலத்தின் உரிமையாளர்கள் 2017-ம் ஆண்டு முதல் கட்ட ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தாலும் இந்த ஆண்டின் மார்ச் மாதம்தான் ராமர் கோவில் அறக்கட்டளைக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தனர். எனினும் தற்போதைய சந்தை விலையை விட குறைவான விலையில்தான் நிலத்தை வாங்கி இருக்கிறோம். எனவே இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

நிலத்தை வாங்கிய ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவரான அனில் மிஸ்ரா அயோத்தி பாஜக தலைவர்களில் ஒருவர். இன்னொருவரான ரிஷிகேஷ் உபாத்யாய் அயோத்தி நகரின் முன்னாள் மேயர் ஆவார்.

இதனால்தான் என்னவோ, அத்தனை எதிர்க்கட்சிகளும் இதை கையில் எடுத்துக் கொண்டுள்ளன.

எதிர்கட்சிகளின் அரசியல்

இதுபற்றி உ.பி. பாஜக மூத்த தலைவர்கள் கூறும்போது, “அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கூடாது என்பதில் எதிர்கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. அதை தடுத்து நிறுத்திவிட்டால் நிச்சயம் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று சமாஜ்வாடியும், காங்கிரசும் கணக்கு போடுகின்றன. அதனால்தான் ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்ப பார்க்கின்றன. இதில், இந்த 2 கட்சிகளுக்கும் ஏதாவது ஆதாயம் கிடைத்து விடுமோ என்று கருதி ஆம் ஆத்மியும் முறைகேடு நடந்து விட்டது என்று கூச்சல் போடுகிறது.

ஒரு யதார்த்தமான உண்மையை எதிர்கட்சிகள் புரிந்து கொள்ளவேண்டும். ராமர் கோவில் அறக்கட்டளை வாங்கியுள்ள நிலம் வணிகரீதியாக பெரும் மதிப்பு கொண்டது. அதுவும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியான பின்பு, இந்த இடத்திற்கு அருகில் உள்ள நிலங்களின் சந்தை மதிப்பும் 10 மடங்கு அதிகரித்துவிட்டது.

எனவே நான்காண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிலம் கிடைக்குமா? என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும். நகரின் முக்கியமானதொரு இடத்தில் உள்ள ஒரு நிலத்தின் மதிப்பு 4 வருடங்களுக்குப் பிறகும், அப்படியே இருக்குமா? அல்லது யாராவது அதே விலைக்குத்தான் விற்பார்களா?… எனவே நிலம் வாங்கியதில் ஊழல் நடந்து விட்டது என்று எதிர்க்கட்சிகள் கதறுவதெல்லாம் வெறும் கோஷம்தான். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் நேற்று வாங்கிய வீடு, நிலத்தின் விலை இன்று இருக்காது. இன்று வாங்கும் விலை நாளை இருக்காது. நாளுக்கு நாள் மதிப்பு மாறுபட்டுக் கொண்டே இருக்கும். மும்பையில் மட்டுமல்ல நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களில் இதே நிலைதான் காணப்படுகிறது.

இந்த அடிப்படை உண்மைகளை ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்களிடம் நன்றாக கேட்டு தெரிந்துகொண்டு பின்பு எதிர்க்கட்சிகள் அலறினால் நல்லது.

ஒருவேளை, 2017-ல் ஒப்புக்கொண்ட விலைக்கே நிலத்தை தற்போது வாங்கி இருந்தால் மாநில பாஜக அரசு நில உரிமையாளர்களை மிரட்டி அடிமாட்டு விலைக்கு வாங்கி விட்டது. இது மிகப்பெரிய அநீதி என்று இதே எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு இருக்கும். எனவே கடந்த மார்ச் மாத சந்தை மதிப்பில் நிலம் வாங்கப்பட்டது என்பதே உண்மை. இதில் எதிர் கட்சிகள் அரசியல் செய்கின்றன” என்று குறிப்பிட்டனர்.

Views: - 219

0

0