தேர்தலை புறக்கணிக்கும் வேங்கை வயல், ஏகனாபுரம்! திமுக அரசுக்கு புதிய தலைவலி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2024, 9:24 pm
Boycott
Quick Share

தேர்தலை புறக்கணிக்கும் வேங்கை வயல், ஏகனாபுரம்! திமுக அரசுக்கு புதிய தலைவலி!!

தங்களது பகுதியில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி திமுக அரசு நிறைவேற்றித் தரவில்லை என்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் சீர்காழி, திருப்பத்தூர், மானாமதுரை, பொன்னமராவதி போன்ற நகரங்களைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வருகிற 19 ம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இது கவலைக்குரிய விஷயம் என்றாலும் கூட இவையெல்லாம் தேர்தல் நடக்கும் பகுதிகள் தவிர வேறு எங்கும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை.

அதேநேரம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள ஏகனாபுரம் ஆகிய இரண்டு கிராம மக்களும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருப்பது தமிழகத்தின் கவனத்தை ஈர்த்து இருப்பதோடு முதலமைச்சர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்கு மட்டுமின்றி திமுக கூட்டணியில் இடம் பிடித்திருக்கும் அத்தனை கட்சிகளுக்கும் பலத்த ஷாக் தருவதாகவும் அமைந்திருக்கிறது.

ஏகனாபுரம் கிராம மக்களை பொறுத்தவரை தங்கள் பகுதியில் உள்ள பரந்தூரை மையமாக வைத்து சென்னை நகரின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க 13 கிராமங்களில் உள்ள 5200 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 630 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விமான நிலையம் தொடர்பாக திமுக அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காத காரணத்தால், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு கூட்டியக்கம் சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தது.

இந்த நிலையில் ஏகனாபுரம் கிராமத்தில் வசிக்கும் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 18 பேரிடம் வீட்டில் இருந்தவாறே தபால் வாக்குகளை பெறுவதற்காக சில தினங்களுக்கு முன்பு தேர்தல் அதிகாரிகள் அங்கு சென்றனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அப்போது தபால் வாக்களிக்க நாங்கள் யாரும் தயாராக இல்லை என்று அந்த மூத்த குடிமக்கள் அனைவரும் ஒரே குரலில் மறுத்துவிட்டனர். தேர்தல் அதிகாரிகள், அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக உங்களது போராட்டத்தையும் வாக்குப்பதிவையும் சேர்த்து பார்க்க வேண்டாம் என அறிவுறுத்திய நிலையில், ஓட்டு போடுவதால் எங்கள் கிராமத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை எனக்கூறி அதிகாரிகளின் அறிவுரையையும் அவர்கள் ஏற்கவில்லை. தபால் வாக்கு பெற வந்த தேர்தல் அதிகாரிகளை ஏகனாபுரம் கிராம மக்கள் திருப்பி அனுப்பிய இந்த நிகழ்வு திமுக அரசுக்கு தீராத தலைவலியை கொடுத்துள்ளது.

ஏனென்றால் பரந்தூர் பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகும் கூட இவர்களை எப்படி சமாளிப்பது என்ற இக்கட்டான நிலைக்குத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் தள்ளப்படுவார் என்பது நிச்சயம்.

இதேபோல வேங்கை வயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருப்பதும் திமுக அரசுக்கு இன்னொரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து இருக்கிறது.

இந்த வேங்கை வயல் கிராமத்தை தமிழக மக்கள் யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் அருகே உள்ள இந்த வேங்கை வயல் கிராமத்தில் கடந்த 2022 ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தின. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த கிராமத்திற்கு நேரடியாக சென்று பட்டியலின மக்களிடம் உங்களுக்கு அநீதி இழைத்தவர்களை திமுக அரசு சும்மா விடாது. அவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத் தருவோம் என உறுதியும் அளித்தார்.

இந்த கொடிய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து
75 பேரிடம் விசாரணையும் நடத்தினர். பின்னர் மத்திய மண்டல ஐ.ஜி. உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அதன்பிறகு சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்த இரண்டு விசாரணையிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சிபிசிஐடி போலீஸார் வேங்கை வயல், இறையூர், முத்துக்காடு ஆகிய பகுதியிலுள்ள 147 நபர்களிடம் விசாரணை செய்து சாட்சியங்களை பதிவு செய்திருந்தனர். இதில் சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தையும் அமைத்தது.

டிஎன்ஏ சோதனை, குரல் மாதிரி பரிசோதனை வரை சென்று விட்ட நிலையில் பதினைந்து மாதங்களாகியும் கூட குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த அந்த கயவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தமிழக வரலாற்றில் வேங்கை வயலும் அந்த ஊரில் இருக்கும் குடிநீர் தொட்டியும் ஒரு சாதிய வன்கொடுமையின் அடையாளவே மாறிப்போனது.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பட்டியலின மக்கள் வேதனையில் இருந்து வரும் நிலையில்தான் நாடாளுமன்ற தேர்தலைப் புறக்கணிக்க போவதாக அறிவித்து உள்ளனர். “இச் சம்பவத்தின் வடுக்கள் எங்களை விட்டு இன்னும் மறையவில்லை. அதற்காகத்தான் இந்த தேர்தல் புறக்கணிப்பு” என்கின்றனர், அந்த கிராமவாசிகள்.

வேங்கைவயல் கிராமத்தின் முகப்பில் இதுகுறித்த வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததற்கு நீதி கிடைக்காததால் தேர்தல் புறக்கணிப்பு என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும் தங்களது கிராமத்திற்குள் ஓட்டு கேட்டு அரசியல் கட்சியினர் யாரும் நுழைய முடியாதவாறு வேங்கை வயல் கிராம மக்கள் பார்த்தும் கொள்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வாக்கு கேட்டுச் சென்ற அரசியல் கட்சியினரை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் நினைவு கூரத்தக்கது.

வேங்கை வயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து இருப்பது விசிக தலைவர் திருமாவளவனுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் பட்டியலின மக்களின் தலைவர் என்று தன்னை அவர் அடையாளப்படுத்திக் கொள்வதால் மாநிலத்தில் உள்ள அத்தனை தொகுதிகளிலும் வேங்கை வயல் விவகாரம் எதிரொலித்தால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மட்டுமல்லாமல் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அத்தனை கட்சிகளுக்கும் தேர்தலில் பாதகமான நிலையை ஏற்படுத்தலாம்.

ஏனென்றால் சமூக நீதி பேசும் திமுக ஆட்சியிலேயே இந்த கொடிய அவலம் நடந்திருக்கிறது, இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்ற கோபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள விசிகவினரில் சிலர் நாடாளுமன்றத் தேர்தலில் வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கும் வாய்ப்பும் உள்ளது.

வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் வேங்கை வயல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பது திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பெரிய தலைவலியாக அமையலாம்.

Views: - 121

0

0