இது அவுட்டா…? 3rd அம்பயரின் முடிவால் செம கடுப்பான கோலி : பவுண்டரி எல்லையில் கோபத்தை வெளிப்படுத்தி ஆக்ரோஷம் (வீடியோ)

Author: Babu Lakshmanan
3 December 2021, 4:30 pm
Quick Share

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3வது அம்பியரின் முடிவால் கோபமடைந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. மழை காரணமாக, ஆட்டம் நண்பகல் 12 மணிக்குத்தான் ஆரம்பிக்கப்பட்டது. இதில், டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அஜாஸ் படேல் வீசிய 28வது ஒவரில் கில் (44) ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து, அவர் வீசிய 30வது ஓவரில் புஜாரா (0) விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த கோலியும் அதே ஓவரின் கடைசி பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானார். ஆனால், பந்து பேட்டில் பட்டதாக மிகுந்த நம்பிக்கையுடன் உடனடியாக ரிவ்யூ செய்தார் விராட்கோலி. அதை 3வது நடுவர் நீண்ட நேரம் ஆய்வு செய்தார். ஆனால் ரீப்ளேவில் பந்து பேட்டில் பட்ட பின்னர் தான் கால்காப்பில் பட்டது என்பது தெளிவாக தெரிந்தது.

ஆனால் அதற்கு நடுவர் தவறுதலாக அவுட் கொடுத்துவிட்டார். 3வது நடுவர் அவுட் கொடுத்த பின்பும், கள நடுவரிடம் பந்து பேட்டில் பட்டது என்பதை தெரிவித்துவிட்டு அதிருப்தியுடன் களத்தை விட்டு வெளியேறிய விராட் கோலி, பவுண்டரி லைனை பேட்டை வைத்து அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்திவிட்டு சென்றார்.

டி20 கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியில் விலகிய விராட் கோலி, டெஸ்ட் தொடரில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த போட்டியில் களம் இறங்கினார். அவர் மீது ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால், 3வது நடுவரின் தவறுதலான முடிவால் கோலியின் நோக்கம் வீணாகி விட்டது. எனவே, கோலி அவுட் கொடுக்கப்பட்ட புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Views: - 176

0

0