தமிழக தலைவர்களிடம் வேகமாக பரவும் ‘கண்டெய்னரோ போபியா’ : கமல்ஹாசனுக்கும் திடீர் சந்தேகம்

20 April 2021, 7:46 pm
Kamal - container - updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் திமுக தலைவர்களையும், அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் ஒருவித பதற்றம் தொற்றிக் கொண்டிருப்பது, அப்பட்டமாக தெரிகிறது. குறிப்பாக, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களின் அருகில் ஏதாவது, கண்டெய்னர்கள் வைக்க பட்டாலோ அல்லது கண்டெய்னர் லாரிகள் வந்து நின்றாலோ, திடீரென ஒரு பயம் அவர்களை கவ்விக் கொள்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை, திருவள்ளூர், தென்காசி நகரங்களில் ஓட்டு எண்ணிக்கை மையங்களின் அருகே கண்டெய்னர்கள் வைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு அருகில் கண்டெய்னர் லாரிகளும் வந்து சென்றுள்ளன. இதைக் கண்டு திமுக பதறுகிறது.

container lorry - updatenews360

அந்த கண்டெய்னர்களுக்குள், கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஒளிந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் அங்கிருந்தபடியே ஓட்டு எண்ணிக்கை மையங்களின் ஸ்டிராங் ரூம்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு எந்திரங்களில் பதிவாகியிருக்கும் ஓட்டுகளை அதிமுக கூட்டணிக்கு சாதகமாக மாற்றும் சதி வேலையில் இறங்கி இருக்கிறார்கள் என்பதுபோல தங்கள் இஷ்டத்திற்கு கற்பனைகளை தட்டி விட்டனர்.

திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நீண்டதொரு கடிதமும் எழுதினார்.

அதன்பிறகும் திமுகவினரிடம் கண்டெய்னர்கள் பற்றிய பீதி கொஞ்சமும் குறையவில்லை.

அண்மையில் கரூரில் உள்ள ஒரு ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் யாருமே இல்லாத நிலையில் ஏசி எந்திரங்களும் கம்ப்யூட்டர்களும் இயக்க நிலையில் இருந்துள்ளன. அதனால் திமுகவினர் பெரும் பதற்றமடைந்து இந்த விஷயத்தை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அளவிற்கு கொண்டுபோய் பரபரப்பை ஏற்படுத்தினர்.

நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், நாகையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு ஒரு ட்ரோன் கேமரா சுற்றிச் சுற்றி பறந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த திமுகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

DMK_Alliance1 - updatenews360

ஸ்டாலினை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களும் கண் டெய்னர்கள் பற்றி குற்றம் சாட்டத் தொடங்கினர்.
தற்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசனும் இவர்களுடன் இணைந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை அவர் நேரில் சந்தித்து ஒரு புகார் மனுவையும் கொடுத்து இருக்கிறார். அதில் கமல்ஹாசன் கண்டெய்னர்கள் பற்றிய தனது சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

அவருடைய மனுவில், “ஸ்ட்ராங் ரூம் என்பது உண்மையான ஸ்ட்ராங் ரூமாக இருக்கவேண்டும். சிசிடிவி கேமரா அடிக்கடி துண்டிக்கப்படுவதும், கண்டெய்னர் லாரிகள் வருவதும் மர்மமான வைபை வசதிகள், லேப்டாப்புடன் மர்ம நபர்கள் நடமாட்டம் என்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது.

அங்கு விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும், தேர்தல் நியாயமாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமை.

ஓட்டுப்பதிவு குறைந்துள்ள நேரத்தில் இதுபோன்ற சந்தேகம் நிகழ்ந்தால் மக்கள் ஜனநாயக கடமை ஆற்றுவது குறையும். இது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும். எங்களுக்கு நிறைய புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனைத் திரட்டி கொண்டு வந்து வைப்போம். இது ஜனநாயகத்தை காக்கும் முயற்சி. ஓட்டும் எண்ணும் மையங்கள் அருகே அறிவிக்கப்படாத கட்டிட பணிகள் துவங்குவது, திடீரென மாணவர்கள் நடமாட்டம் நிகழ்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது”
என்று கூறியிருக்கிறார்.

இப்படி எதிர்க்கட்சி தரப்பில் உள்ள ஒவ்வொரு தலைவர்களும் கண்டெய்னர்கள் பற்றி புகார் கடிதம் வாசிப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, “திமுகவினரும், நடிகர் கமல்ஹாசனும் இப்படி பயப்படுவது அர்த்தமற்றது. இதுவும் ஒரு வகை போபியாதான். அதாவது ‘கண்டெய்னரோ போபியா’. வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள் நெட்வொர்க் தொடர்பு வசதி இல்லாதவை. அதில் பதிவாகியிருக்கும் வாக்குகளை யாரும் எங்கிருந்தும் மாற்றி அமைத்துவிட முடியாது. இதை யாராவது ஒரு கம்ப்யூட்டர் வல்லுனரிடம் திமுக தலைவர் ஸ்டாலினும், கமல்ஹாசனும் கேட்டாலே விவரமாக, சொல்லிவிடுவார்கள். வாக்குப்பதிவு எந்திரங்களில் வெளியிலிருந்து எந்த தில்லுமுல்லும் செய்யவே முடியாது. பிறகு எதற்காக இவர்கள் இப்படி கண்டெய்னர்கள் வருகிறது, சிசிடிவி கேமரா செயல்படவில்லை, ட்ரோன் ஏன் பறக்கிறது? ஓட்டு எண்ணும் மையங்களில் ஆட்கள் இல்லாத நேரத்தில் ஏசி சாதனம் இயங்குகிறது என்றெல்லாம் சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு ஏன் சந்தேகங்களை கிளப்புகிறார்கள் என்று தெரியவில்லை.

Cbe Vote Seal And Safe -Updatenews360

2019 நாடாளுமன்ற தேர்தலின் போது இதுபோன்ற புகார்களை திமுகவினரும் மற்றவர்களும் கூறவே இல்லை. ஆனால் இப்போது ரொம்பவே பயப்படுகிறார்கள். இதற்காக ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்திலும் இவர்கள் ஈடுபடுவதும் வேடிக்கையாக இருக்கிறது.

தேர்தலில் தோற்றுவிட்டால் இதுதான் காரணம், நாங்கள் முன்பே சொன்னோம். தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்து எங்களை தோற்கடித்து விட்டார்கள் என்று சொல்வதற்காக இப்போதே இப்படி புகார் கூறுகிறார்களோ? என்றுதான் இதை நினைக்கத் தோன்றுகிறது” என்றனர்.

Views: - 91

0

0