கோவை மேயர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி.. வாரிசுக்கா…? அனுபவசாலிக்கா…? உச்சகட்ட பரபரப்பில் கோவை திமுக…!!

Author: Babu Lakshmanan
23 February 2022, 6:19 pm
Quick Share

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இன்று 17 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது. 7 நகராட்சிகளையும், 31 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.

கோவை மாநகராட்சியையும் திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியுள்ளது. வாக்கு எண்ணிக்கை இறுதியில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. திமுக 73 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 5 வார்டுகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 வார்டுகளில் வென்றுள்ளது.

போட்டியிட்ட 3 இடங்களிலும் மதிமுகவும், போட்டியிட்ட 2 இடங்களிலும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மனிதநேய மக்கள் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சியினர் உடன் சேர்த்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 76 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம், கோவை மாநகராட்சியை தனிப்பெரும்பான்மையுடன் திமுக கைப்பற்றியுள்ளது.

கோவை மாநகராட்சியில் இதுவரை மேயர் பதவியை திமுக பிடித்தது கிடையாது. இந்த நிலையில், முதல்முறையாக, கோவை மாநகராட்சி மேயர் பதவியை திமுக அலங்கரிக்க இருக்கிறது. இந்த முறை கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் வெற்றி பெற்றுள்ளதால், யார் மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று திமுகவினரிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Cm stalin -Updatenews360

இதனிடையே, அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இருந்து மேயர் மற்றும் தலைவர்களுக்கான பரிந்துரை பெயர் பட்டியலை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்க அந்தந்த மாவட்ட திமுக செயலாளர்களுக்கு தலைமையில் இருந்து உத்தரவு போடப்பட்டிருக்கிறது. அதன்படி, பட்டியலும் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது.

Who will be the Mayor of Coimbatore nivetha senathipathi meena logu ilanselvi who kovai mayor

இந்த நிலையில், கோவை மேயருக்கான போட்டியில் 3 பேர் இருக்கின்றனர். அதில் முதலாவதாக இருப்பவர் முன்னாள் எம்எல்ஏவும், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா. கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி. இவர், 52வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே கவுன்சிலராக இருந்துள்ளார். மேலும் அவரது கணவர் நா. கார்த்திக் துணை மேயராகவும் இருந்திருப்பதால், அவருக்கு மேயர் பதவிக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Who will be the Mayor of Coimbatore nivetha senathipathi meena logu ilanselvi who kovai mayor

இதேபோல, இளம் பெண் கவுன்சிலராக தமிழகம் முழுவதும் அறியப்பட்ட நிவேதா. 97 வது வார்டில் வெற்றி பெற்றுள்ள 22 வயதான இளம் கவுன்சிலரான நிவேதா மேயராகத் தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக பரவலான பேச்சு எழுந்துள்ளது. காரணம், இவரது தந்தை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சேனாதிபதி, தீவிர உதயநிதியின் ஆதரவாளர். தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாகவே, தனது மகளுக்கு மேயர் சீட் வேண்டும் என்று தலைமைக்கு தூது அனுப்பியிருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

வேட்புமனு தாக்கலில் தந்தையை கணவர் என்றும், வார்டு எண்ணையும் தவறாக குறிப்பிட்டிருந்த போதும், நிவேதாவின் வேட்பு மனு தாக்கல் ஏற்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Who will be the Mayor of Coimbatore nivetha senathipathi meena logu ilanselvi who kovai mayor

இதற்கு அடுத்தபடியாக, அனுபவமிக்க கவுன்சிலரான மீனா லோகுவும் மேயர் போட்டியில் இருக்கிறார். திமுக மாநில மகளிரணி துணை செயலாளராகவும் இருந்தாலும், இவருக்கு வாய்ப்புகள் குறைவு என்றே பேச்சுக்கள் அடிபடுகின்றன. கோவையில் கடந்த முறை திமுக கவுன்சிலர் ஆக இருந்த பொழுது, அதிமுகவிற்கு எதிராக போராட்டங்களை மாநகராட்சி மன்றத்தில் நடத்தியதற்காக, மன்றத்தில் வைத்தே அதிமுக கவுன்சிலர்களால் தாக்குதலுக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்காத அளவில் வெற்றியை திமுக பெற்றிருப்பதால், மேயராக யாரை தேர்வு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு திமுகவினரிடையே மட்டுமல்லாமல், கோவை மக்களிடமும் எழுந்துள்ளது.

Views: - 1195

0

0